எனது  அரசியல் பயணத்தில் வன்னி தேசமெங்கும் தற்போது  சிலைகள் அமைப்பதுபோன்று உரிய காலம் கனியும்போது தமிழ் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும் சிலைகள் அமைக்கும் பணியை தொடக்கி  மாவீரர்களின் தியாகத்தை போற்றும் புனித செயலையும் செய்வேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாராளுமன்ற உறுப்பினர்  சிவமோகனின் வரவுசெலவுத்திட்ட  நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சிலைகளில் ஒன்றான திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் வைபவம் நேற்று மாலை இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அரசியல் பயணத்தில் பல தடைகள் இடப்படுகின்றது. ஆகவே எனது பயணம் சரியானது என்பதே இந்த தடைகள் இடப்படுவதற்கான காரணம் பிழையான பயணம் என்றால் தடைகள் ஏதும் வராது என்பதே அர்த்தம். ஆகவே நான் எனது அரசியலில் சரியான வழியிலேயே செல்கின்றேன். யாருக்கும் பயந்து ஒதுங்கப்போவதுமில்லை நான் செல்லும் பாதையை மாற்றப் போவதுமில்லை. நான் நினைத்ததை சாதித்து முடிப்பேன். செயலில்  செய்து காட்டுவேனே தவிர சொல்லால் அல்ல. எனது அரசியல் பயணத்தில் எதிர்காலத்தில் தடைகள் எது வந்தாலும்  எமக்காக மடிந்த மாவீரர்களுக்கும் சிலைகள் அமைப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் புத்துக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன் ஆகியோரு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.