தமிழக அரசியலில் தான் இறங்கவுள்ளதாக மறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மருமகள் முறையான தீபா ஜெயகுமார் இன்று (17) தெரிவித்தார். இது குறித்த முக்கிய முடிவுகளை, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமரர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாளையொட்டி, மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் தனது அஞ்சலியைச் செலுத்திய பின்னரே தீபா இவ்வாறு குறிப்பிட்டார்.

தனது அரசியல் பயணம் குறித்துப் பல வதந்திகள் நிலவுவதாகக் கூறிய தீபா, பா.ஜ.க.வில் தான் இணையவுள்ளதாக வெளியான தகவல்கள் அப்பட்டமான பொய் என்றும் குறிப்பிட்டார். அதிமுக ஆதரவாளர்கள் பலரின் வேண்டுகோள்களையடுத்தே தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களை தான் எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடப்போவதில்லை என்று தெரிவித்த தீபா, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா நடராஜன் குறித்து எதுவிதக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால் அதேவேளை, ஜெயலலிதா இருந்த இடத்தில் இன்னொருவர் அமர்ந்திருப்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.