(சிவலிங்கம் சிவகுமாரன்)
பிரதேச மக்களின் பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம். அதில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் நேர்மையாக செயற்பட்டு வருகிறது. காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் இவ்விடயத்தில் சிறப்பாக செயற்படுகின்றனர். காரியாலயத்தின் எல்லைப் பகுதிகளுக்குட்பட்ட சகல பிரதேசங்களிலும் எமது சேவைகளை பற்றி மக்கள் அறிவர் என கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
எனினும், சில இடங்களில் சுகாதார நடவடிக்கைகளுக்கு உள்ளூராட்சி சபையினரே பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர். அவர்கள் அசமந்தமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் நாம் இது தொடர்பில் அவதானித்து அவர்களுக்கு அறிவுறுத்துவோம். தொடர்ந்தும் அவர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டால், சட்ட ஆலோசனைகளை பெற்று சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொட்டகலை ரொசிட்டா வீடமைப்புத் திட்டத்துக்கு செல்லும் பாதையின் இரு மருங்கிலும் பூரணமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள வடிகாலானது உரிய பராமரிப்பின்றி, அசுத்த நீர் தேங்கி நின்று, அதனூடாக பல நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக உள்ளதாக பல முறை கொட்டகலை பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அது குறித்து மேற்படி பிரதேச சபை அலட்சியமாக இருந்ததால் பிரதேச மக்களின் சுகாதாரத்தில் அக்கறை கொண்ட ரொசிட்டா வீடமைப்புத் திட்ட சமூக நல ஒன்றியத்தினால் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு கடந்த வருடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனையடுத்து, காரியாலய சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனைக்குப் பிறகு ஒரு மாதத்துக்குள் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி கொட்டகலை பிரதேச சபைக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தல் விடுத்தும், ஏப்ரல் மாதம் வரை இந்த வடிகாண்களை சுத்தப்படுத்த பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ள - மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை நாம் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெற விழைந்தோம்.
அதன்படி, 08/04/2023 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி வைத்துள்ளது. அவை இங்கு சுருக்கமாக தரப்படுகின்றன.
முறைப்பாட்டு கடிதம்
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா வீடமைப்பு திட்டத்தில் அமைந்துள்ள வடிகாலமைப்பு காண், கொட்டகலை பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் உள்ளதாகும். இந்த காணின் நிலை குறித்து ரொசிட்டா வீடமைப்பு திட்ட சமூக நல ஒன்றியத்தின் செயலாளரினால் 21/12/2022 அன்று முறைப்பாட்டுக் கடிதமொன்று எமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அன்றைய தினமே எமது காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் காண் அமைக்கப்பட்டுள்ள இடத்தினை பரிசோதித்தனர்.
23/12/2023 அன்று அந்த இடத்தை பொது சுகாதார பரிசோதகர்களுடன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியும் இணைந்து பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.
உரிய முறையில் அமைக்கப்படாத வடிகாண்கள்
குறித்த வடிகாலமைப்பானது கொட்டகலை பிரதேச சபையினால் நிர்மாணம் செய்யப்பட்டபோதும், உரிய முறையில் நீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்படவில்லை.
மேலும், சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாததால் அந்த காணில் நீர் தேங்கி நின்று, நுளம்பு பெருக்கம், துர்நாற்றம் போன்ற சுகாதார இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பின்வரும் நடவடிக்கைகளை உடன் எடுத்திருந்தது.
2007ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க நுளம்பு பெருக்கத் தடைச் சட்டத்தின் 12(1), (2) பிரிவுகளுக்கு அமைய, கொட்டகலை பிரதேச சபைக்கு 25/12/2022 என திகதியிடப்பட்ட அறிவித்தல் கடிதம் (Notice) அனுப்பப்பட்டது.
இக்கடிதத்தை கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் 13/01/2023 அன்று நேரடியாக ஒப்பமிட்டு பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த வடிகாண்களை சுத்தப்படுத்தி உரிய முறையில் அமைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் சபைக்கு வழங்கப்பட்டது. அதேவேளை இக்கடிதத்தின் பிரதிகள் நுவரெலியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நுவரெலியா பிரதேச செயலாளர், திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ரொசிட்டா வீடமைப்புத் திட்ட சமூக நல ஒன்றியத்தின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருந்தன.
எந்த நடவடிக்கைகளும் இல்லை
மூன்று மாதங்கள் கழித்தும் பிரதேச சபையால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் 06/04/2023 அன்று கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் அவ்விடத்தை மீண்டும் பரிசோதித்தனர்.
அதுவரையில் பிரதேச சபையினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கும் எவ்வித பதில் கடிதமும் அனுப்பப்படவில்லை.
சட்ட நடவடிக்கை
இந்த வடிகாலமைப்பை சீரமைத்து பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதே தமது பிரதான பணி என்று தெரிவிக்கும் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையானது, சட்ட நடவடிக்கை எடுப்பது தமது நோக்கமல்ல என்று பதிலளித்துள்ளது.
மேலும், பிரதேச சபை என்கிற உள்ளூராட்சி நிறுவனமானது அரச நிறுவனமாக இருப்பதால் நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், மக்களின் சுகாதார விடயத்தில் பிரதேச சபை தொடர்ந்தும் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளுமேயானால், சட்ட ஆலோசனைகள் கிடைத்தவுடன் விரைவில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
அரைகுறையாக எந்தவித பொறுப்புமின்றி முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தினால் ரொசிட்டா குடியிருப்பு மற்றும் அப்பிரதேச மக்கள் சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும், நீர் வழிந்தோடும் வகையில் காண்கள் அமைக்கப்படாததால் 24 மணித்தியாலமும் கழிவு நீர் தேங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த வடிகாலமைப்பு உரிய முறையில் அமைக்கப்படவில்லை என பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், இதற்கான நிதியை நுவரெலியா பிரதேச செயலகம் ஒதுக்கியுள்ளது.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள், இந்த வடிகாலமைப்பை நிர்மாணம் செய்த ஒப்பந்தக்காரர்கள், நிர்மாணத்துக்கு அனுமதியளித்த பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு மேற்படி நிறுவனங்கள் இரண்டுக்கும் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM