ஹேர் ஜெல் பயன்படுத்துவோருக்கு!

Published By: Ponmalar

08 May, 2023 | 12:38 PM
image

தலைமுடி கலையாமல் இருக்கவும், கூந்தல் அலங்காரம் நீண்ட நேரம் அப்படியே இருக்கவும் தற்போது பலரும் ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள்.

இதன் காரணமாகவே, இப்பொழுது நிறைய ஹேர் ஜெல் தயாரிப்புகள் மார்க்கெட்களில் கிடைக்கிறது. இதுபோன்ற ஹேர் ஜெல்கள் பயன்படுத்தும்போது, அவை தலைமுடிக்கு நன்மை செய்கிறதா, இல்லையா என்று பார்ப்போம்:

பொதுவாக, ஹேர்ஜெல் வகைகளை பயன்படுத்தி, விதவிதமான ஹேர் ஸ்டைல்களை உருவாக்கி கூந்தலை அழகுபடுத்தலாம்.

ஆனால் இதில் ஏராளமான கெமிக்கல்கள் நிறைந்துள்ளன என்பதுதான் உண்மை. பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையத்தின் (NCBI) நிறுவனம் 2015ஆம் ஆண்டில் ஹேர் ஜெல்கள் குறித்து நடத்திய ஆய்வில் பெரும்பாலான ஹேர் ஜெல்கள் அல்கஹால் உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் பயன்படுத்தியே தயாரிக்கப்படுவதாக அறிவித்திருந்தது.

அதனால், ஹேர் ஜெல்லை குறைந்த அளவு பயன்படுத்துவதே நல்லது.  மேலும், ஹேர் ஜெல்லை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது தலைமுடி எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

ஹேர் ஜெல்லில் உள்ள அல்கஹால் பொருட்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கி கூந்தலை வறண்டு போகச் செய்து விடும்.

தலையில் ஈரப்பதம் குறைவதால் முடிகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளது. இதனால் முடியின் வலிமையும் தோற்றமும் பாதிக்கிறது. கூந்தலை ஈரப்பதமாக வைக்க போதிய எண்ணெய் உற்பத்தி அவசியம். ஆனால் இந்த ஹேர் ஜெல்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை தடுக்கிறது. மேலும், உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.

ஹேர் ஜெல்களில் இருக்கும் ரசாயனங்கள் தலையில் பொடுகுத் தொல்லையை ஏற்படுத்துகிறது. இதனால் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற பல்வேறு தொந்தரவுகளை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக கூந்தல் வறண்ட கூந்தலாக இருந்தால் இந்த பாதிப்பு கூடுதலாக இருக்கும். அதுபோன்று, ஹேர் ஜெல்லில் இருக்கும் நச்சு ரசாயனங்கள் உச்சந்தலையை மட்டுமல்ல கூந்தலையும் கடுமையாக பாதிக்கிறது. இதனால் கூந்தல் பொலிவிழந்து நிறமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இது சீக்கிரமே நரைமுடி பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. கூந்தலின் pH சமநிலையையும் பாதிக்கிறது. மேலும் அவரவர் பயன்படுத்தும் ஹேர் ஜெல் பயன்பாட்டுக்கு ஏற்ப அவை தீவிரமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கலாம்.

ஹேர் ஜெல்லால் கூந்தல் வறண்டு போகும் போது முடியின் நுனிகளும் பிளவுபட ஆரம்பிக்கிறது. ஹேர் ஜெல்கள் உச்சந்தலையின் ஊட்டச்சத்துக்களை தடுக்கிறது. இதனால் நுனி முடிகள் பிளவை எதிர்கொள்கின்றன. முடி வெடிப்பு பிரச்சினை அலட்சியப்படுத்தும்போது முடி வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். அதனால் ஹேர் ஜெல்லை அளவோடு பயன்படுத்துவதே நல்லது.

கூந்தலுக்கு தகுந்த ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுப்பது அவசியம்.நடுத்தர நீளமுள்ள கூந்தலுக்கு சிறிதளவு ஹேர் ஜெல்லே போதுமானது. முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் படும்படி எப்போதும் தடவக் கூடாது. ஒரே இடத்தில் அதிக ஜெல்லை பயன்படுத்த கூடாது. ஜெல்லை கைகளில் எடுத்து நன்றாக தேய்த்து அனைத்து இடங்களிலும் படும்படி தடவிக் கொள்ள வேண்டும். அதுபோன்று நீண்ட நேரம் ஹேர் ஜெல்லை தலையில் வைக்க வேண்டாம்.

தினசரி ஹேர் ஜெல் பயன்படுத்தியே ஆகவேண்டும், தவிர்க்க முடியவில்லை என்பவர்கள் முடிந்தளவு இயற்கையானவற்றை தேர்வு செய்வது கூந்தலுக்கு நலம் தரும்.  இயற்கையான கற்றாழை ஹேர் ஜெல் போன்றவை கூந்தலுக்கு ஸ்டைலிஷ் லுக் தருவதோடு கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.

குறிப்பாக, சில்கி ஹேர் தன்மையுள்ளவர்கள், நீளமான ஹேர்ஸ்டைல்களை வைக்காமல் இருப்பது நல்லது. தற்காலிக அழகுக்கு ஆசைப்பட்டு, முடியை மொத்தமாக இழக்க வேண்டாமே. அதுபோன்று இன்று பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகமான ஹேர்ஸ்டைல்கள் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. இதனால், அடிக்கடி ஹேர்ஸ்டைலையும் டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இதற்காக, ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே, ஹேர் கலரிங் போன்றவற்றை பலரும் பயன்படுத்துவார்கள். இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும், முடி உதிர்வதை அதிகப்படுத்திவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்