மகளிர் மனநலத்தில் அக்கறை கொள்வோம் !

Published By: Ponmalar

08 May, 2023 | 11:41 AM
image

மன பாதிப்பு காரணமாக வரும் உணவு தொடர்பான நோய்கள் என்னென்ன (Eating Disorders)?
மன பாதிப்பு காரணமாக ஏற்படும் உணவு தொடர்பான நோய்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு நோய்க்கும் ஏற்றது போல் அறிகுறிகள் மாறுபடும். 

அனரெக்சியா நெர்வோசா (Anorexia Nervosa): இந்த வகை நோய் உடையவர்கள் தங்கள் உடல் எடை குறித்து அதீத அக்கறையுடன் இருப்பார்கள். தாங்கள் குண்டாக ஆகிவிடுவோமோ என்ற பயம் அதிகமாக இருக்கும்.

அந்த பயத்தின் காரணமாகவே இவர்களால் சாப்பிட முடியாது. உருவத்தின் மேல் அதிக சிந்தனை இருக்கும். எப்போது பார்த்தாலும் கண்ணாடி முன் நின்று உருவத்தைப் பார்த்துக்கொள்வது, குண்டாக இருக்கிறோமா என ஆராய்வது போன்ற செயல்களைச் செய்வார்கள். வழக்கத்தைவிட உடல் எடை மிகவும் குறைவாக இருப்பார்கள். சருமம் வெளுப்பாகக் காணப்படுவதோடு வாய், தொண்டை வறண்டு காணப்படும். இவை அனைத்துக்கும் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதே காரணமாகும்.

புலிமியா நெர்வோசா (Bulimia Nervosa): இந்த வகை நோய் இருப்பவர்கள் உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால், அனரெக்சியா போல சாப்பிடாமல் இல்லாமல் இவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். அதிகமாக சாப்பிட்ட பிறகு உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்களாகவே விரல்களால் வாந்தி வரவைத்து சாப்பிட்டதை வெளியேற்றுவார்கள். இவர்களுக்கு உடல் பருமன், சரும பாதிப்புகள், மாதவிடாய்க் கோளாறுகள் எனப் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பிஞ்சே ஈட்டிங் டிசார்டர் (Binge Eating Disorder): இந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகிறேன் என நிறைய சாப்பிடுவார்கள். சாப்பாடு சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என அதைத் தவிர்த்துவிட்டு நொறுக்குத் தீனிகளாகச் சாப்பிடுவார்கள். அதிக கலோரிகள் உள்ள உணவுகளையும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் சாப்பிடுவார்கள். இது உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக அமையும்.

பைகா டிசார்டர் (Pica Disorder): இவர்கள் உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவார்கள். பேப்பர், சுண்ணாம்பு, மண் போன்ற பொருள்களைச் சாப்பிடும் இந்த நோய் ஆபத்தானது. வயிறு பிரச்சினைகள், குடல்களில் அடைப்பு, செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். இந்த உபாதைகளால் சாதாரண உணவு சாப்பிடுவதில் பாதிப்பு வரலாம். மிகவும் ஒல்லியாக, உடல் எடை குறைவாக இருப்பார்கள்.

இந்த உணவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மனநலனுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இந்த நோய்கள் இருப்பவர்கள் அனைவருக்கும் உடல் அளவில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. அவர்களுடைய மனம் மற்றும் சிந்தனைகள் காரணமாகவே இப்படி நடந்துகொள்வார்கள்.

மனநலனைப் பேணுவதற்கான உணவுகள் என்ன?
முதலில் கூறியதுபடியே மனநலத்துக்கு Mindful eating மிக அவசியம். ஆரோக்கியமான சத்தான உணவுகளைச் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். தானியங்கள், பருப்புகள் அனைத்தும் அடங்கிய சமவிகித உணவை உண்ண வேண்டும். பழங்களையும் காய்களையும் அதிகம் சேர்க்க வேண்டும். மன அழுத்தத்துடன் இருக்கும் சமயத்தில் பசித்தால் பழங்களையோ, காய்கறிகளையோ சாப்பிடுவதில் ஆர்வம்காட்ட மாட்டோம். ஆனால், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவதை விடுத்து, அப்போது ஒரு பழத்தையோ, காயையோ சாப்பிடப் பழகும்போது நிச்சயம் மனநிலையில் நல்ல மாற்றத்தைத் தருவதோடு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.

ஒமேகா 3 ஃபேட்டி அசிட் (Omega-3-fatty acids) அடங்கிய உணவுகள் மனநலனுக்கு மிகவும் உகந்தது. சால்மன் மீன், நட்ஸ் வகைகள் போன்ற வற்றில் ஒமேகா 3 ஃபேட்டி அசிட் அதிகமாக இருக்கும்.

கர்ப்பகாலம்… ஹோர்மோன்களின் பரமபதம்!
கர்ப்பகாலத்தில் ஹோர்மோன்களில் ஏற்படும் மாறுபாட்டால் கர்ப்பிணிகளுக்கு நிச்சயமாக மன உணர்வில் வேறுபாடு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் சிலர் மன அழுத்தத்துக்கு உள்ளாவதோடு ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படவும் வாய்ப்புண்டு. மேலும், குழந்தை பிறந்து 6 மாத காலத்துக்குக் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதில் பல சிக்கல்களை உணர்கிறார்கள். இந்த எண்ணங்கள் அவர்களை மனதளவில் அழுத்தத் துக்கு உள்ளாக்குகின்றன.

பிரசவத்துக்குப் பிறகு, பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகும் இந்த மன அழுத்தத்தை ‘போஸ்ட்பார்டம் டிப்ரஷன் (Postpartum Depression)’ என்று கூறுவோம். இதில் ஹோர்மோன் களுக்குப் பங்கு உண்டு. இந்த நிலை தீவிரமடையும்போது அது `போஸ்ட்பார்டம் சைகோசிஸ்’(Postpartum Psychosis) ஆக மாறி, தாயே தன் குழந்தையை அடிக்கவோ, துன்புறுத்தவோ வாய்ப்புண்டு. எனவே, பிரசவத்துக்குப் பிறகான காலகட்டத்தில் கணவரும், குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் உதவியே அவரை மன அழுத்தத்திலிருந்து மீட்க உதவும்.

சிறப்புக் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்களுக்கு… உறுதுணையாக இருப்போம்!
சிறப்புக் குழந்தைகளின் அம்மாக்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாவது இயல்பு. 24 மணி நேரமும் குழந்தையைக் கண்காணிப்பது, பராமரிப்பது, பழக்கவழக்கங்களைக் கற்றுத் தருவது என்றே வாழ்க்கை நகரும். இந்தச் சூழலில் அவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையை வாழ முடியாத நிலை இருக்கும். அவர்களுக்கென்று நேரமே இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக ஏற்படும் அழுத்தத்தை அவர்களால் யாரிடமும் சரியாக பகிரவும் முடியாது.

கிட்டத்தட்ட இது வாழ்நாள் முழுவதற்குமான சுமை போல ஆகிவிடுகிறது. தங்களுக்குள்ளேயே வலியைப் புதைத்துக்கொண்டு வாழ்வார்கள். இதையெல்லாம் உணர்ந்து அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

போதைப்பொருள்களால் ஏற்படும் மனநோய்!
இந்தத் தலைமுறையில் போதைப் பொருள்களின் விளைவாக ஏற்படும் மனநோய்களை அதிகம் பார்க்க முடிகிறது. ஆண்கள் மட்டுமன்றி சில பெண்களும் இவற்றுக்கு அடிமையாகிறார்கள். புகை, மது, கஞ்சா போன்றவை நியூரோ டிரான்ஸ்மிட்டர்களான காபா, டோபமைன், செரடோனின் (GABA, Dopamine, Serotonin) ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத் துவதால் ஒருவித போதையை உணர்வார்கள்.

இந்த நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் மூளையின் செயல்பாட்டுக்கு மிக அவசியம் என்பதால் அதன் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை என அனைத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்கொலை பற்றிப் பேசுகிறார்களா?
முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவர் தற்கொலை குறித்துப் பேசினால் அதை உதாசீனப்படுத்தவே கூடாது. அவருக்கு மருத்துவ உதவி உடனடியாகத் தேவை. ஒருவர் தற்கொலை குறித்துப் பேசுகிறார் என்றால் அவர் தீவிரமான மனஅழுத்தத்தில் உள்ளார் என்பதை புரிந்துகொண்டு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

குழந்தை வளர்ப்பும் அம்மாக்கள் மனநலனும்!
குழந்தை வளர்ப்புக்கும் அம்மாக்களின் மனநலனுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. சுவர் இருந்தால்தான் சித்திரம் எனச் சொல்லுவதைப் போல, அம்மாக்களின் மனநலம் நன்றாக இருந்தால்தான் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க முடியும்.

தாயின் மனநலன் நன்றாக இல்லாத சூழலில் வளரும் குழந்தைக்கு உணர்வுகள் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அத்துடன், பிறருடன் எப்படிப் பழகுவது, சமூகத்துடன் எப்படி ஒன்றிணைவது போன்ற பிரச்னைகளும் வரலாம். எனவே, ஹேப்பி குழந்தைகளை வளர்த்தெடுக்க `ஹேப்பி மாம்’ ஆக இருக்க வேண்டியது முக்கியம்.

உதவி கேட்கத் தயங்காதீர்கள்!
பிறரிடம் உதவி கேட்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்புகளில் ஒன்று. சிலர் உதவி கேட்கவே தயங்குவார்கள்; தாமே அனைத்தையும் செய்துவிடலாம் என நினைப்பார்கள். ஆனால், சரியான நேரத்தில் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வதில் தவறு ஏதுமில்லை என்பதை உணர வேண்டும். 

மைண்ட்ஃபுல் ஈட்டிங் (Mindful eating) என்றால் என்ன?
நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும், உணவின் மூலமே கிடைக்கிறது என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோம், ஏன் சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும்.துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கார்போவைத்ரேட், அதிக புரதம், பழங்கள், காய்கறிகள் என சமவிகித உணவை உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான உணவை உண்ணும்போது கவனச் சிதறலின்றி உணவில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். நன்றாக மென்று, அதன் ருசியை உணர்ந்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவது உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் நல்லது. இதனால்தான் டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடக் கூடாது, சாப்பிடும்போது பேசக்கூடாது என வீடுகளில் கூறுவார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right