சவூதி பயணத்துக்காக மன்னிப்பு கோரினார் லயனல் மெஸி! ' 600 மில்லியன் டொலர் வழங்க சவூதி கழகம் முன்வந்தது'

Published By: Sethu

07 May, 2023 | 03:02 PM
image

 பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கழகத்தின் அனுமதியின்றி, சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக லயனல் மெஸி மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லயனல் மெஸி வெளியிட்ட வீடியோவில், 'எனது அணியின் சகாக்களிடமும் கழகத்திடமும் வெளிப்படையாக நான் மன்னிப்பு கோர விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

'முந்தைய வாரங்களில் போன்று, போட்டிக்கு அடுத்த அன்றைய தினத்தில் எமக்கு ஓய்வு கிடைக்கும் என நேர்மையாக நான் எண்ணினேன். சவூதி அரேபியாவுக்கான பயணத்தை முன்னர் நான் ஏற்பாடு செய்துவிட்டு பின்னர் இரத்துச் செய்தேன். இம்முறை அதை என்னால் இரத்துச் செய்ய முடியவில்லை. எனது செய்கைக்காக நான் வருந்துகிறேன். கழகம் என்ன செய்வதற்கு தீர்மானிக்கிறது என்பதை அறிவதற்கு காத்திருக்கிறேன்' எனவும் மெஸி தெரிவித்துள்ளார்.

கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியின் தலைவரான லயனல் மெஸி,  7 தடவைகள் பெலோன் டி' ஓர் விருதை வென்றவர். பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காக 2021 ஆகஸ்ட்டிலிருந்து அவர்  விளையாடி வருகிறார்.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற, லோறியன்ட் கழகத்துடனான லீக் -1 போட்டியில் மெஸி பங்குபற்றினார். இப்போட்டியில்  3:1 விகித்தில் பிஎஸ்ஜி கழகம் தோல்வியுற்றது. இத்தோல்வியின் பின்னர், பிஎஸ்ஜி கழகத்தின் வீரர்களுக்கு கடந்த திங்கட்கிழமை பயிற்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இப்பயிற்சியில் பங்குபற்றாமல், தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவுக்கு மெஸி சென்றார்.

சவூதி சுற்றுலாத்துறையுடனான தனது ஒப்பந்தத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அங்கு மெஸி சென்றிருந்தார்.

இந்நிலையில், தனது அனுமதியின்றி, பயிற்சியை தவிர்த்துவிட்டு சவூதி அரேபியாவுக்கு சென்றதால் மெஸியை தண்டிப்பதற்கு பிஎஸ்ஜி நிர்வாகம் தீர்மானித்தது.

 பிஎஸ்ஜி கழகத்திலிருந்து பல நாட்களுக்கு மெஸி ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பார் எனவும் இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ள ட்ரோயிஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி சார்பில் மெஸி  பங்குபற்ற மாட்டார் எனவும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை குறித்து அறிந்துள்ள வட்டாரமொன்று கூறியதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.   

2 வாரங்களுக்கு மெஸி இடைநிறுத்தப்பட்டதாக பல்வேறு பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் அச்செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

மெஸி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக பிஎஸ்ஜி கழகத்தின் தலைமையகத்துக்கு முன்னால் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதேவேளை,   மெஸியை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் தன்னுடையது அல்ல எனவும், அத்தீர்மானம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பிஎஸ்ஜி கழகத்தின் பயிற்றுநர் கிறிஸ்டோப் கெல்டியர் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார்.

இந்நிலையிலேயே லயனல் மெஸி மன்னிப்பு கோரியுள்ளார்.

 வருடாந்தம் 30 மில்லியன் யூரோ  ஊதியத்தில் பிஎஸ்ஜி கழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மெஸி, அக்கழகத்தின் சார்பில் மொத்தமாக 71 போட்டிகளில் 31 கோல்களை மெஸி புகுத்தியுள்ளார்.  தற்போதைய லீக் 1 போட்டிகளில் 20 கோல்களைப் புகுத்தியுள்ளதுடன் மேலும் 15 கோல்களைப் புகுத்த உதவியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி 36 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள மெஸிக்கும் பிஎஸ்ஜி கழகத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதன்பின் இக்கழகத்தில் மெஸி நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவு எனக் கருதப்படுகிறது.

 600 மில்லியன் டொலர்  ஊதியம்?

 மெஸியின் முந்தைய கழகமான பார்சிலோனா, சவூதிஅரேபியாவின் அல் ஹிலால் உட்பட பல்வேறு கழகங்கள் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2 வருட காலத்துக்கு சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஊதியம், விளம்பர ஒப்பந்தங்கள் உட்பட வருடாந்தம் வருடாந்தம் 400 மில்லியன் யூரோ  ரொனால்டோவுக்கு வழங்கப்படும் என அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அல் நாசரின் பரம வைரியான அல் ஹிலால் கழகத்தில் விளையாடுவதற்காக ஒரு வருடத்துக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 536 மில்லியன் யூரோ) வழங்குவதற்கு அல் ஹிலால் முன்வந்துள்ளது என, மத்திய கிழக்கு கால்பந்தாட்டத்துறையுடன் நெருக்கமான, பீபாவில் பதிவுசெய்யப்பட்ட கால்பந்தாட்ட முகவர் மார்கோ கேர்டிமியர் தெரிவித்துள்ளார்.

 இவர் சில மாதங்களுக்கு முன்னர் மெஸியை சந்தித்திருந்தார். 

தான் வசிக்கக்கூடிய இடத்தைப் பார்ப்பதற்காக அந்நாட்டுக்கு மெஸி பயணம் செய்தார். அவரின் குடும்பத்தினர் சம்மதித்தால் சவூதி அரேபியாவில் மெஸி விளையாடுவார் என மார்கோ கார்டிமியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பார்சிலோனா கழகம், மெஸியை மீண்டும் இணைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால், பொருளாதார ரீதியில் அக்கழகம் ஏனைய கழகங்களுடன் போட்டியிடவில்லை. ஒரு வருடத்துக்கு 25 மில்லியன் யூரோவை (சுமார் 28 மில்லியன் டொலர்கள்) மாத்திரமே மெஸிக்கு வழங்க முன்வந்துள்ளதாக ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், தனது குடும்பத்தினரின் சௌகரித்தையும் கருத்திற்கொண்டே மெஸி தீர்மானம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. (சேது)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை...

2024-10-13 23:45:22
news-image

பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்...

2024-10-14 00:15:30
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்டத்தில் இலங்கை ஐந்தாம்...

2024-10-13 17:01:19
news-image

சகலதுறைகளிலும் கேர் பிரகாசிப்பு: இலங்கையுடனான போட்டியில்...

2024-10-13 04:26:05
news-image

பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் ரி20 உலகக்...

2024-10-13 04:23:14
news-image

இலங்கை மகளிர் அணி மிக மோசமாக...

2024-10-12 15:11:16
news-image

பாகிஸ்தானை 9 விக்கெட்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா...

2024-10-12 01:08:44
news-image

20 வயதின்கீழ் ஆண்களுக்கான மத்திய ஆசிய...

2024-10-11 19:39:38
news-image

பாகிஸ்தானை இன்னிங்ஸால் வென்றது இங்கிலாந்து; வரலாறு...

2024-10-11 15:36:18
news-image

பங்களாதேஷை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 8...

2024-10-10 23:19:28
news-image

ப்றூக் முச்சதம், ரூட் இரட்டைச் சதம்;...

2024-10-10 22:41:38
news-image

பின்கள வீரர்களின் தவறுகளாலும் கோல்காப்பாளரின் கவனக்குறைவாலும்...

2024-10-10 19:17:14