வவுனியா ஓமந்தையில் இன்று காலை கை, கால் கட்டப்பட்ட நிலையில் நபரொருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை திடீர் விபத்துப்பிரிவில் அனுமதித்துள்ளனர்.


சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,


கடந்த 30 ஆம் திகதி கணவன் மனைவி இருவரும் வவுனியா செட்டிக்குளத்தில் இறந்த உறவினர் ஒருவரின் இறுதிக்கிரியைக்கு சென்று கொண்டிருக்கும் போது வவுனியா தாண்டிகுளத்தில் மனைவி (நிஷாந்தன் யாழினி வயது 34) அவசரமாக கனகராயன்குளம் செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்து பேருந்திலிருந்து இறங்கியுள்ளார். எனினும் கணவன் உறவினரின் இறுதிக்கிரியைக்கு சென்றுள்ளார்.

மனைவி மாலையாகியும் வீட்டுக்கு வராததையடுத்து கணவரால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.


கடந்த 2 ஆம் திகதி கடமைக்காக குறித்த நபர் (தனபாலசிங்கம் நிஷாந்தன் வயது - 33 ) மன்னார் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார். எனினும் இவர் மன்னாருக்கு செல்லவில்லை இதனையடுத்து குறித்த நபரின் தந்தையினால் மகனை காணவில்லையொன்று கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இன்றைய தினம் காலை ஓமந்தை பஸ்தரிப்பிடத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் கை,கால் கட்டப்பட்ட நிலையில் ஓமந்தை பொலிசாரால் தனபாலசிங்கம் நிஷாந்தன்  மீட்கப்பட்டு வவுனியா விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, வவுனியா தாண்டிகுளத்தில் அவசரமாக கனகராயன்குளம் செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்து பேருந்திலிருந்து இறங்கிய மனைவியான நிஷாந்தன் யாழினி ( வயது 34) என்பவர் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.