இந்திய தலைநகரான டில்லியில் சுமார் 12 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நபர் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் டில்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுனில் ரஸ்தோகி(38), என்பவர் இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். 

கடந்த 2006ஆம் ஆண்டு இவர் செய்த குற்றத்திற்காக ருத்ராபூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 6 மாத சிறை தண்டனை பெற்றுள்ளார்.

டில்லி, மேற்கு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்துச் செல்லும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 கிழக்கு டில்லியில் உள்ள ஒரு தையல் கடை ஒன்றில் வேலை செய்து வந்த குறித்த நபர், வெவ்வேறு பகுதிகளுக்கு வேலை தேடி செல்லும் பேரில் இவ்வாறான குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மீது டில்லியில் 3 வழக்கு, ருத்ராபூரில் 2 வழக்கு, பிலாஸ்பூரில் ஒரு வழக்கு என 6 வழகுக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டில்லி போலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2004ஆம் ஆண்டு, மயூர் விஹார் பகுதியில் வசித்து வந்த சுனில் பக்கத்துவீட்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதையடுத்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்கள் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இது குறித்து எவ்வித முறைப்பாடும் தெரிவிக்காத அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர்கள் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த அங்க அடையாளங்களைக் கொண்டு குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், கடந்த ஜனவரி 12ஆம்  திதி, புது அசோக் நகர் பகுதியிலும் 2 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் குற்றவாளியை தேடும் பணியில் பொலிஸார் தீவிரம் காட்டினர்.

இந்நிலையில், 9 மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, புதிய ஆடை தைத்து தருவதாகக் கூறி சிறுமிகளை கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டிடத்தின் மாடிப்படி அருகே இழுத்துச் சென்று இருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். 

இதனால் பதற்றமடைந்த சிறுமிகள் கூச்சலிட்டதையடுத்து அங்கிருந்து குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.  இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில்   கொண்ட்லி கிராமத்தில் பதுங்கியிருந்த ரஸ்தோகியை பொலிஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட ரஸ்தோகியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சுனில் ரஸ்தோகியின் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய சிறுமிகளை கண்டறிய டில்லி பொலிஸ் தனிப்படை அமைத்துள்ளது. அதன் மூலம் ரஸ்தோகி மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.