நான் என் வேலையைத்தான் செய்தேன் - ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீஸ் அதிகாரி விளக்கம்

Published By: Rajeeban

04 May, 2023 | 02:34 PM
image

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறியதால் சர்ச்சைக்கு ஆளான போலீஸ் அதிகாரி அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராஜ்பகதூர் மில்ஸ் பகுதி அருகே திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

மாலை முதல் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. இரவு 10 மணியை நெருங்கியதும் ஏ.ஆர்.ரஹ்மான் ‘தில் சே’ படத்தில் இடம்பெற்ற ‘சைய்ய சைய்யா’ பாடலை பாடத் தொடங்கிய போது போலீஸ்காரர் ஒருவர் மேடையின் மீது ஏறி தன்னுடைய வாட்ச்சை காண்பித்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்தார். இசைக் கலைஞர்கள் சிலர் அதனை கவனிக்காமல் இசைத்துக் கொண்டிருக்கவே, அவர்கள் அருகில் சென்ற அவர் உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கூறினார்.

இதனைக் கண்ட அங்கிருந்த ரசிகர்கள், கூச்சலிட்டனர். பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் போலீஸாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையில் இருந்து இறங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தினிடையே சலசலப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. அந்த போலீஸ்காரருக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சந்தோஷ் பாட்டீல் என்ற அந்த மூத்த போலீஸ் அதிகாரி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு காவல்துறை அதிகாரியாக நான் என்னுடைய வேலையைத் தான் செய்தேன். இரவு 10 மணிக்கு மேல் பொது வெளியில் இசையை சத்தமாக ஒலிக்க விடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகினேன். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்பதாலேயே மேடையில் ஏறி ரஹ்மான் மற்றும் பிற இசைக் கலைஞர்களிடம் நிறுத்துமாறு கூறினேன். அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right