எழுதியவர் - ருமேத் ஜயசிங்க
மார்ச் 31, 2022 அன்று, இலங்கையர்கள் வீதிகளில் இறங்கி மிரிஹானவில் உள்ள அப்போதைய ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்னால், அவர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர்.
பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரைப் பீரங்கிகளால் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தும் வரை, போராட்டம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஆரம்பத்தையே இது குறித்தது.
மோசமான பொருளாதார நிலை காரணமாக மக்கள் போராட்டங்களை நடாத்தினர். 13 மணி நேர மின்வெட்டு, பரவலான எரிபொருள் தட்டுப்பாடு, மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை வாழ்க்கையின் சகிக்க முடியாத உண்மையாகியிருந்தன.
இந்த நெருக்கடி ஓர் கணிசமானளவு பொருளாதார பரிமாணத்தைக் கொண்டிருந்ததுடன், அதற்கு பல விடயங்கள் காரணங்களாக இருந்தன.
1. வரி குறைப்பு மற்றும் வருமானம் குறைவடைதல்
பதவியேற்ற உடனேயே, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் வரி குறைப்புகளை அறிவித்ததுடன், அது வருமானத்தை மோசமாக பாதித்தது. VAT மற்றும் தொழிற்துறை வரிகள் குறைக்கப்பட்ட அதே நேரத்தில் PAYE மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரிகள் நீக்கப்பட்டன. இதனால் நிதியியல் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை விரிவடைந்தது.
இந்த குறைப்புகள் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டன. கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படாமல் இருந்திருந்தால் இத்தகைய நடவடிக்கைகள் பலனைத் தந்திருக்கும். எவ்வாறாயினும், பெருந்தொற்றின் அழுத்தங்கள் காரணமாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 600 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை இழந்தது.
2. பணம் அச்சிடுதல் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம்
கொவிட் -19 பெருந்தொற்றின் அதிகரிப்புடன், உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. குவிந்துவரும் செலவினங்களை மூடிமறைப்பதற்காக, IMF மற்றும் பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், இலங்கை மத்திய வங்கி முன்னெப்போதும் இல்லாத அளவு பணத்தை அச்சிடத் தீர்மானித்தது.
உதாரணமாக, ஏப்ரல் 6, 2022 அன்று, மத்திய வங்கி 119.08 பில்லியன் ரூபாய்களை முறையற்றவிதத்தில் அச்சிட்டது. பணம் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் திருப்பப்படாமல், அதற்குப் பதிலாக நிதி நுகர்வுக்குச் சென்றமையால், பணம் அச்சிடுதல் எரிபொருள் மற்றும் எரிவாயு உட்பட பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்த வழிவகுத்தது.
3. சேதன உரத்திற்கு மாறுவதற்கு ஒரே இரவில் எடுக்கப்பட்ட தீர்மானம்
ஏப்ரல் 2021 இல், ஜனாதிபதி ராஜபக்ஷ சேதன உரங்களுக்கு மாறும் முயற்சியில் இரசாயன உரங்களுக்கு முழுமையான தடையை அறிவித்தார். இந்த தடை உத்தரவு விவசாயிகள் உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த தீர்மானத்தை விவசாயிகள் வரவேற்கவில்லை, மேலும் அரசாங்கம் தனது தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரினர். உத்தியோகபூர்வ மட்டங்களிலும் கூட, இந்த முன்மொழிவுக்கு சில எதிர்ப்புகள் இருந்தன. ஒரே இரவில் சேதன பசளைக்கு மாறுவதற்கு பதிலாக படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த தடையானது தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததுடன், ஓர் மதிப்பீட்டின்படி அதன் விளைவாக 40 சதவீத இழப்பு ஏற்பட்டது. 2020/2021 பெரும் போகத்தில் அதன் அறுவடையில் 37 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
4. கோவிட்-19 பெருந்தொற்று
பெருந்தொற்று ஏற்படாமல் இருந்திருந்தால், சுற்றுலா மூலமாக 3-5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியிருக்கலாம், இது பயணக் கட்டுப்பாடுகளால் சரிவடைந்தது. 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இருந்து சுற்றுலாத்துறை ஏற்கனவே வீழ்ச்சியை எதிர்கொண்டது. பெருந்தொற்று இதனை மோசமாக்கியது.
5. பெருகிவரும் கடன் நிலைகள்
ஏப்ரல் 2022 அளவில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 34.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடு சென்மதி நிலுவைப் பற்றாக்குறை மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆகியவற்றின் கலவையை அனுபவித்து வருவதால் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ள ஆரம்பித்தது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறை இருந்தபோதிலும், மத்திய வங்கி ஜனவரியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ISB (சர்வதேச இறையாண்மைப் பத்திரம்) இனை தீர்ப்பதற்கு முடிவு செய்தது. தற்போதுள்ள வெளிநாட்டு கையிருப்புகளை பாதுகாப்பதற்காக பணம் செலுத்துவதை ஒத்திவைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
6. வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள்
கடன் சேவை கொடுப்பனவுகள், சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி மற்றும் பண வருகையில் சரிவு காரணமாக இலங்கை பாதிப்புக்குள்ளாகின்ற அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்டது. மத்திய வங்கியால் பராமரிக்கப்படும் நிலையான நாணயமாற்று விகிதம் வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற வழிவகைகளை நாடுவதற்கு வழிவகுத்ததுடன், இதனால் வங்கிகளுக்கு டொலர்கள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.
உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவடைவதால், அரசாங்கமும் மத்திய வங்கியும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை இடைநிறுத்த முடிவு செய்தன. இந்த முடிவு இலங்கையில் உள்ள பல தொழிற்துறைகளை பாதித்தது, ஏனெனில் அவை இடைநிலைப் பொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருந்ததுடன் சார்ந்திருக்கின்றன.
7. எதிர்மறையான கடன் மதிப்பீடுகள் மற்றும் சாதகமற்ற வெளிப்புற சூழல்
வெளிநாட்டு இருப்புக்கள் அதன் வெளிநாட்டு கடன் பொறுப்புகளை தாங்கவோ அல்லது பூர்த்தி செய்யவோ முடியாது என்பதால், Fitch மற்றும் Standard & Poor's போன்ற முகவர்கள் இலங்கையின் கடன் தரமதிப்பீடுகளை குறைத்துள்ளனர். இது கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான அதனுடைய நற்பெயரைச் சேதப்படுத்தியதுடன், உலகளாவிய மூலதனச் சந்தைகளில் இருந்து கடன் வாங்குவதை கடினமாக்கியது.
ரஷ்யா-உக்ரேன் யுத்தம் கூட இலங்கையின் பொருளாதாரத்தில், பிரதானமாக சுற்றுலா மற்றும் தேயிலை தொழிற்துறை மூலமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ரஷ்யா இலங்கையின் தேயிலைக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இருந்ததுடன் சுற்றுலாத்துறையானது ரஷ்யா மற்றும் உக்ரேனையே பெரிதும் நம்பியிருந்தது.
8. IMF உடன் உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம் செய்ய தயக்கம்
நெருக்கடி மற்றும் இடம்பெறவிருக்கும் வீழ்ச்சி குறித்து அதிகரித்த கவலைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு தீர்வுகள் மூலம் இலங்கை நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று அவர்கள் நம்பியமையால் அரசாங்கமும் மத்திய வங்கியும் IMF மீட்பு உதவியை பரிசீலிக்க மறுத்துவிட்டன.
கலாநிதி W. D. லக்ஷ்மண் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் IMF மற்றும் புதிய தாராளவாத கொள்கைகளின் தீவிர விமர்சகர்களாக இருந்ததுடன், IMF கொள்கைகள் சிக்கனத்தை ஏற்படுத்துவதுடன் நிலையான நாணயமாற்று விகிதத்தை கைவிட வைப்பதுடன் அது நாணயத்தின் கடுமையான தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது என்பது அவர்களின் வாதமாகும்.
மூன்று நாட்களுக்கு முன்னர் கப்ரால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 7, 2022 இல், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அரசாங்கம் நியமித்தது.
தனது நியமனத்தைத் தொடர்ந்து, கலாநிதி வீரசிங்க, SLFR (நிலையான கடன் வசதி விகிதம்) மற்றும் SDFR (நிலையான வைப்பு வசதி விகிதம்) ஆகியவற்றை 700 அடிப்படை புள்ளிகளால் உயர்த்துவதன் மூலம் அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தடுப்பதற்காக பணக்கொள்கையை கடுமையாக்கினார். அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அவர் அறிவித்தார்.
பரவலான அதிருப்தியைத் தணிப்பதற்கு இது போதுமானதாக இல்லை. யூலை 9 ஆம் திகதி, காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை முற்றுகையிட்டனர்.
ஜனாதிபதி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி யூலை 13, 2022 அன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். விரைவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார். யூலை 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து, விக்ரமசிங்க நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மேம்பட ஆரம்பித்தன. நீண்ட வரிசைகள் மறையத் தொடங்கின, மின்வெட்டு ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக குறைக்கப்பட்டது, பணவீக்கம் குறைவடைந்தது. இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை கலாநிதி வீரசிங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாகும். உதாரணமாக, வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை குறைக்க வரி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டன.
மார்ச் 2023 இல், IMF இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் மீட்புதவியை, விரிவாக்கப்பட்ட நிதி வசதியாக வழங்க ஒப்புதல் அளித்தது. இலங்கை மீட்புதவி கோரி சர்வதேச நாணய நிதியத்தை அணுகிய 17வது சந்தர்ப்பம் இதுவாகும்.
மீட்புதவிக்கு முன்னர், இலங்கை சாத்தியமான கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து அதன் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடியதுடன், இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றது.
2022 ஆம் ஆண்டளவில், இலங்கை வருடாந்தம் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டும். மறுசீரமைப்பு முடிந்தவுடன் இந்தத் தொகை குறைக்கப்படும். எவ்வாறாயினும், இலங்கை அடுத்த 10 ஆண்டுகளில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் IMF உடனான பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி செல்ல முடியும்.
இந்த வகையில், இலங்கையின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசாங்கம் மற்றும் வரி செலுத்துவோர் மீது நசுக்கும் சுமையாக மாறியுள்ளதால், பரவலாக கலந்துரையாடப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. தனியார்மயமாக்கல் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது, இருப்பினும் நாடு பொது-தனியார் பங்காண்மை (PPPs) போன்ற மாற்று திட்டங்களையும் தெரிவு செய்யலாம்.
தீர்வு எதுவாக இருந்தாலும், உறுதியான, நீண்ட கால நிதி மற்றும் நாணயக் கொள்கைகளுக்கு மேலதிகமாக, இலங்கைக்கு அனைத்து மட்டங்களிலும் பலதரப்பட்ட மற்றும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஊக்குவிக்கும் ஓர் ஒருங்கிணைந்த வெளியுறவுக் கொள்கை தேவைப்படும் என்பது தெளிவாகிறது.
ருமேத் ஜயசிங்க தற்போது தனது உயர் கல்விக்காக பொருளாதாரத்தை கற்கின்ற மாணவராவார். 2022 இல் தனது உயர்தர கல்வியை நிறைவு செய்த அவருக்கு, சர்வதேச உறவுகள், விளையாட்டு இராஜதந்திரம் மற்றும் இசை உள்ளிட்ட பலவிதமான விருப்பங்கள் உள்ளன. அவரை rumethj17@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM