உலகின் முதல் தர கெசினோ வர்த்தகரான கிரவ்ன் கெசினோ நிறுவன பிரதானி அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர் மீள இலங்கைக்கு வரவுள்ளார். அனைத்து உல்லாசங்களுடனும் கூடிய கிரவ்ன் ஹோட்டல் எனும் பெயரில் 457 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுடன் அவர் இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக அறிய முடிகிறது. இதற்கு முன்னர் ஜேம்ஸ் பெக்கர் இந்த முதலீட்டு திட்டத்துடன் இலங்கைக்குள் வர முயன்றபோதும் மக்களின் எதிர்ப்பு காரணமாக கசினோவுடன் கூடிய அந்த முதலீட்டுத் திட்டத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.

இந் நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தவர்கள் பலருடன் பெக்கர் இது தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அதன் பிரகாரமே அவர் மீள இலங்கையில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இதன்போது ஏற்கனவே ஜேம்ஸ் பெக்கரின் கோரிக்கையான கலப்பு முதலீட்டு திட்டத்துக்குக்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும் வரை தற்போது நடைமுறையில் உள்ள கசினோ அனுமதிப் பத்திரம் ஒன்றின் கீழ் இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கனவே டி.அர். விஜேவர்தன மாவத்தையில் பெக்கரின் திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்ட 500 பேர்ச்சர்ஸ் நிலப்பரப்பில் 36 மாடிகளைக் கொண்ட இந்த கிரவ்ன் ஹோட்டல் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.