பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிப்போர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பணத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் ஆலோசனைக்கமைவாகவே இந்நடவடிக்கை 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து தற்போது 2500 ரூபா அறவிடப்படுவதாகவும் இது ஜனவரி முதல் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை மிதிபலகை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் பயணிப்போருக்கு எதிராகவும் ரயில்வே திணைக்களம் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை மிதிபலகையில் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்திருப்பதாகவும் ராகம ரயில் நிலையத்திலேயே அதிகமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.