எல்லை நிர்ணய அறிக்கையில் இதுவரை கைச்சாத்திடாத ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி இன்றைய தினம் கைச்சாத்திடவுள்ளார். இதன்பிரகாரம் நாளை செவ்வாய்கிழமை எல்லை நிர்ணய அறிக்கை மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுடன் வினவிய போது இன்றைய தினம் எல்லை நிர்ணய அறிக்கையில் ஏ,எஸ்.எம் மிஸ்பர் கைச்சாத்திடுவார் என தெரிவித்தனர்.

எல்லை நிர்ணய அறிக்கையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தா அறிக்கையை நிராகரித்திருந்தார். இதன்காரணமாக எல்லை நிர்ணய அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை பிரதமர் உடனே பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களை ஒன்று கூட்டி , கட்சி தலைவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்து ஆராய்ந்தனர். இதன்போது புதிய முறைமையின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் இதுவரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசு கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சி பிரதிநிதிகள் அறிக்கையில் கைச்சாத்திட்ட போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதி மாத்திரம் அறிக்கையில் கைச்சாத்திடவில்லை. 

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி ஏ.எஸ்.எம் மிஸ்பார் இன்றைய கைச்சாத்திடவுள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது எல்லை நிர்ணய அறிக்கை செவ்வாய்கிழமை என்னிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார். இந்த தகவலை எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸூம் உறுதிப்படுத்தினார்.