இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 350  ஓட்டங்கள் என்ற கடின இலக்கை எட்டி இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி தலைமையேற்ற முதல் போட்டியிலேயே சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ஓட்டங்களை பெற்றது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களை பெற்று எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புணேயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார். 

இதையடுத்து, இங்கிலாந்தின் ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ஹேல்ஸ் 9 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஜேசன் ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த இணை இந்தியப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி ஓட்டங்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் கடந்தனர்.

18.3 ஓவர்களில் ஓட்ட எண்ணிக்கையாக 108  இருந்தபோது இங்கிலாந்து அணியின் 2-ஆவது விக்கெட் விழுந்தது. 

அதிரடியாக விளையாடிய  ஜேசன் ரொய், ஜடேஜா பந்துவீச்சில்  டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 61 பந்துகளில் 73 ஓட்டங்களை பெற்றார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். 

17.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை இங்கிலாந்து கடந்தது. அடுத்து களமிறங்கிய  அணித் தலைவர் மோர்கன் 26 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்று  ஹார்திக் பாண்டியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

34.1 ஓவரில் இங்கிலாந்து அணி 200 ஓட்டங்களை எட்டியது. பின்னர் களமிறங்கிய ஜோஷ் பட்லர் 36 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் 95 பந்துகளை எதிர்கொண்டு 78 ஓட்டங்களை குவித்து பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். 

இறுதிக் கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடினார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 350 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.

இந்தியா தடுமாற்றம் 

இந்திய அணிக்கு தொடக்கமே தடுமாற்றமாக அமைந்தது. தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் 8 ஓட்டங்களிலும், ஷிகர் தவாண் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து அணித் தலைவர் விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. அதிரடியாக விளையாட முற்பட்ட யுவராஜ் சிங், ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளுடன் 15 ஓட்டங்களை  எடுத்து வெளியேறினார். இது இந்திய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்னதாகவே டோனி 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார். 

இதன்போது இந்திய அணியின் ஓட்ட எணணிக்கை 11.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களாக இருந்தது.

அணியை மீட்ட கோலி-ஜாதவ் 

பின்னர் கோலியுடன் உள்ளூர் வீரரான கேதார் ஜாதவ் இணைந்தார். இந்த இணை இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. 

இதனால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை மெதுவாக உயரத் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி-ஜாதவ் ஜோடி, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை மிகவும் நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடியது.

அதிரடி சதம  

29.2 ஓவரில் இந்திய அணி 200 ஓட்டங்களை எட்டியது. 93 பந்துகளில் கோலி சதமடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த ஜாதவ் 65 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 

37-ஆவது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. சிறப்பாக விளையாடிய கோலி, ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் வில்லியிடம் பிடிகொடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 105 பந்துகளில் 122 ஓட்டங்களை பெற்றார்.  இதில் 5 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

இதையடுத்து ஜாதவுடன் பாண்டியா ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜாதவ் 120 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 76 பந்துகளில் இந்த ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் வெற்றிக்கு 61 பந்துகளில் 60 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

அதன்பிறகு பாண்டியாவுடன் ஜடேஜா இணைந்தார். ஜடேஜா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் பாண்டியா பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அஸ்வினும் அவருக்கு கைகொடுத்தார்.

வெற்றிக்கு 18 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, பாண்டியாவும், அஸ்வினும் அடுத்தடுத்து சிக்ஸர்களை பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இந்திய அணி 48.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி சதமடித்த கேதார் ஜாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு அணித் தலைவராக கோலி அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே இந்திய அணி, இமாலய ஓட்ட இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி கட்டக்கில் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.