டொக்டர் ராஜேஷ்.
சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கிறது.
இந்நிலையில் எம்முடைய மக்களும் சர்க்கரை நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை மேலும் கூடுதலாக பெற வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இரவு நேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவு குறைந்தால்… எம்மாதிரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இத்துறையின் நிபுணரான டொக்டர் ராஜேஷ் விளக்கமளிக்கிறார்.
“லோ சுகர் என்று பொதுவாகவும், தாழ்நிலை சர்க்கரை அளவு என்று தமிழிலும், ஹைபோகிளைசிமியா என்று மருத்துவ மொழியிலும் குறிப்பிடப்படும் குறை இரத்த சர்க்கரை அளவு சிலருக்கு இரவு நேரத்தில் ஏற்படக்கூடும். பொதுவாக ரத்த சர்க்கரையின் அளவை எப்பொழுதும் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதனை புறக்கணித்தால்... உடல் உறுப்புகள் பாதிப்படைந்து, அதன் செயல் திறனை இழக்கத் தொடங்கும். ரத்த சக்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அவையும் உறுப்புகளை பாதித்து அவற்றை சிதைத்து விடும். உதாரணத்திற்கு இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் கண், இதயம், சிறுநீரகம், ரத்த நாளங்கள், பாதம், கால்கள் என பல உறுப்புகளையும் பாதிக்கும்.
அதே தருணத்தில் எதிர்பாராத காரணத்தினால் ஒருவருடைய இரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட மிகவும் குறைந்தால், அது இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக ஏற்படும் பாதிப்பை விட... கூடுதலான பக்கவிளைவை ஏற்படுத்தி, உயிரிழப்பை கூட உண்டாக்கி விடும்.
அதே தருணத்தில் ரத்த சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தால்.. அதற்கான அறிகுறி வெளிப்படும். பசி, அதிக பசி, எரிச்சல், கவனமுடன் செயலாற்ற இயலாத நிலை, தலைவலி, படபடப்பு, கை கால் நடுக்கம், குளிர்சாதன அறையில் இருந்தாலும் அதிகமாக வியர்த்தல்... போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இவை அனைத்தும் மருத்துவ மொழியில் நியுரோஜெனிக்ஸ் அறிகுறிகள் என வகைப்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் எம்முடைய உடல் ரத்த சர்க்கரையின் அளவு குறைகிறது என்பதனை எமக்கு மேற்கூறிய அறிகுறிகளின் மூலம் உணர்த்துகிறது. இதனை உடனடியாக அவதானித்து சிகிச்சை பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தி, ரத்த சர்க்கரையின் அளவு 50க்கும் கீழ் சென்றால்.. அவர்கள் மயக்கம் அடைவர் அல்லது கோமா நிலைக்கு சென்று விடுவர்.
சர்க்கரை நோயாளிகள் நோயை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகளை தொடர்ச்சியாக பாவித்து கொண்டிருக்கும் போது நேரம் தவறி பசியாறினால்... அவர்களுக்கு இந்த குறை ரத்த சர்க்கரை பாதிப்பு உண்டாகும். குறிப்பாக இன்சுலின் மற்றும் மாத்திரைகளை தொடர்ச்சியாக பாவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நேரம் தவறி பசியாறினால், அவர்களுக்கு இரவு நேரத்தில் இரத்த சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பை உண்டாக்கும்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று நாளாந்தம் சீரான இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டும். முளைகட்டிய பயிர், சுண்டல், மோர், பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பழங்கள், வெள்ளரிக்காய், பால் என சிலவற்றை நொறுக்கு தீனிகளாக பயன்படுத்தலாம். இதன் மூலம் இரவு நேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவு குறைவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மேலும் நாளாந்தம் பசியாறும் உணவின் அளவை குறைக்காமலும், உணவு சாப்பிடும் தவணைகளை தவிர்க்காமலும் இருக்க வேண்டும். ஏனெனில் ஏதேனும் ஒரு வேளை நீங்கள் உணவை தவிர்த்தால், அதன் காரணமாகவும் ரத்த சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பை உண்டாக்கும்.
சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால், அதனை ஒரு அவசர நிலை என கருதி, உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் கோமா நிலைக்கோ அல்லது உயிரிழப்பு நிலைக்கோ சாத்தியக்கூறு அதிகம்.
சிலருக்கு சிறுநீரகத்தின் செயல் திறனில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது கல்லீரலில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ.. அதன் பக்க விளைவு காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதன் போது மருத்துவர்கள் உங்களது சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல் திறன் குறித்த தொடக்கநிலை பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
மேலும் ரத்த சர்க்கரையின் அளவுகளை தொடர்ந்து அவதானிக்க வேண்டும். குறிப்பாக இன்சுலினை செலுத்தி கொள்பவர்கள் தங்களது ரத்த சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து அவதானிப்பது அவசியம். மேலும் ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிப்பதை வெவ்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ள வேண்டும்.
எனவே ரத்த சர்க்கரையின் அளவு குறைவது ஆபத்து. அதிலும் இரவு நேரத்தில் இரத்த சர்க்கரையின் அளவு குறைவது பேராபத்து.. என்பதனை உணர்ந்து, ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சையை அவசியம் பெற வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் சிகிச்சையின் மூலம் அவர்களின் உயிரை காப்பாற்றினாலும், அவர் தொடர்ந்து படுக்கையில் மீதமுள்ள நாட்களை கழிக்க வேண்டிய நிலை கூட உருவாகும். இதனால் ரத்த சர்க்கரையின் அளவை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9629394222 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
சந்திப்பு : புகழ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM