ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என எதிர்வரும் திங்கட்கிழமை தெளிவாக சொல்வேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் ஊடகங்கள் இன்று வினவிய போது அமைச்சர்கூறியதாவது,

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இடை நிறுத்தப்பட்டு இருந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்கின்றது, கிடைத்து விட்டது என்ற கோஷங்கள் இலங்கை அரசியல் பரப்பில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுவான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (சிசிபிஆர்) என்ற விதிகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை கடைபிடிக்காமை தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கடந்த ஆட்சியில், ஐரோப்பிய ஒன்றியத்தால் இடை நிறுத்தப்பட்டது. இந்த நல்லாட்சியில் அது மீண்டும் வழங்கப்படும் என்ற கருத்து இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இலங்கையின் ஏற்றுமதி பெறுமதியில் அரைவாசியை அடையக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி மீண்டும் கிடைக்குமானால், இலங்கையின் ஆடை ஏற்றுமதி துறையில் மீள் எழுச்சியும், பெருந்தொகை வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்குமானால், அது இன்றைய இலங்கை பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

“உண்மையில் எனக்கு தெரிய ஐரோப்பிய ஆணைக்குழு, இலங்கைக்கு மீண்டும் சலுகைகள் வழங்க சிபாரிசு மட்டுமே செய்துள்ளது. இது இனி ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்ற தடைகளை கடக்க வேண்டும். ஆணைக்குழு என்பது, ஒன்றியத்தின் நிர்வாக குழு ஆகும். வரி சலுகைகள் வழங்க இன்னமும் முன்னோக்கி நகர வேண்டும். இந்நிலையில், இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, திங்கட்கிழமை எனது அமைச்சில் என்னை சந்தித்து பேச்சுகள் நடத்த உள்ளது. அதன்பின்னர் இதுபற்றி தெளிவான உண்மை நிலை பற்றி அறிந்துக்கொள்ள முடியும். அதுபற்றி அதன்பிறகு அறியத்தருகிறேன்”