ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற நடிகர் ஆர்யாவை,அந்த பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டி அடித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இயக்குனர் கவுதமன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

இதேவேளை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிகட்டு என்றால் என்ன என்று பதிவேற்றம் செய்தமை தொடர்பாக ஆர்யா நேற்று விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற போதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டி அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமீர் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை கதைக்கருவாகக் கொண்டு ‘சந்தனத் தேவன்’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை வீதிமறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அங்கு இயக்குநர் அமீர், நடிகர்கள் ஆர்யா,சத்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் சென்றுள்ளனர்.

ஆனால் நடிகர் ஆர்யா பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர் என்றும், ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர் என்றும் கூறி போராட்டத்தில் இருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சந்தனத் தேவன் படக்குழுவினர் அந்த இடத்திலிருந்து திரும்பிச் சென்றனர்.

இதேவேளை தொடர்ந்து மதுரை அவனியாபுரத்தில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய திரைப்பட இயக்குனர் கவுதமன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.