(கலாபூஷணம் மேழிக்குமரன்)
வாழ்க்கையின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வரலாறாக மாற்றுவது ஒவ்வொருவரினதும் கடமையாகும். அதனால்தான் நாம் இன்றும் பழம்பெரும் இலக்கியங்களில் வரலாறுகளை தெரிந்து கொள்கின்றோம். இன்றைய ஆவணப்படுத்தலும் நாம் இன்று எவ்வாறு வாழ்ந்தோம் என்பதனை நாளைய சந்ததிக்கு எடுத்துக் கூறும்.
வவுனியாவில் 15.02.2023 அன்று 'காலப்புனல்' என்னும் நூல் வெளியிடப்பட்டது. தன்னை ஒரு எழுத்தாளராக அறிமுகம் செய்து தனது அனுபவங்களையும், சிந்தனைகளையும், கற்றுக்கொண்டவற்றையும் நூலாக தந்திருக்கின்றார் திருமதி.செம்மனச்செல்வி தேசிகன். அதுவும் அவரது மணிவிழாவில் இந்நூல் வெளிவந்திருப்பது சிறப்பு.

முப்பது வருடங்கள் ஆசிரியப்பணியில் இருந்து மாணவர்களுக்கு தமிழை கற்பித்த செம்மனச்செல்வி தனது ஆசிரிய அனுபவங்களையும், மாணவர்களுக்காக எழுதிப் பழக்கிய நாடகங்கள், வில்லுப்பாட்டு மற்றும் தனது சுயசிந்தனைக் கவிதைகள் என நூலினை அழகுபடுத்தியிருக்கின்றார்.

பதினொரு சிறுகதைகள், ஏழு கட்டுரைகள், ஐந்து நாடகங்கள், ஒரு வில்லுப்பாட்டு, மூன்று கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
'மாணவப் பருவத்தில் அவரிடம் இருந்த சமூக அக்கறையும் கலைநாட்டமும், நீதி நியாயங்களுக்கான மன உறுதியும் இன்றும் அவரிடம் குடிகொணடுள்ளது கண்டு அவரை மதிக்கின்றேன்' என இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் க.ரகுபரன் எழுத்தாளரை பற்றி குறிப்பிட்டிருப்பதிலிருந்தே எம்மால் இவரை அடையாளம் காண முடிகிறது.
மேலும், பேராசிரியர் தனது அணிந்துரையில் 'சமூகத்தின் ஈன நிலை கண்டு துள்ளும் இயல்பே அவருடையது. அந்த இயல்பின் வெளிப்பாடாகவே அவரது படைப்புகளும் அமைகின்றன. மாணவர்கள் மீதான கரிசனையோடும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆக்ரோஷத்தோடும் புழங்குகின்ற சமூக அக்கறை உள்ள நல்லாசிரியர் ஒருவரையே இவருடைய சிறுகதைகளின் பிரதான பாத்திரங்களாக பார்க்க முடிகின்றது. இவரையே அப்பாத்திரங்களினூடாக தரிசிக்கின்றோம்' என மகுடம் சூட்டியுள்ளார்.

கலிஸ்ரா ரவீந்திரன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியையின் 'காலப்புனல் ஒரு பார்வை' என்ற பதிவு நூலில் இடம்பெற்றிருக்கின்றது.
சிறுகதைகளில் 'பிள்ளையார் பிடிக்கப்போய்..' என்ற சிறுகதை ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் நிதி ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது என்ற கருவை கொண்டு எழுதப்பட்டுள்ளது. 'சிற்பிகளும் சிற்பங்களும்' என்ற சிறுகதையில் ஆசிரியர்களின் ஒற்றுமை பற்றி பேசப்பட்டுள்ளது.
'கடற்கோளும் கருதுகோளும்' என்ற சிறுகதை சுனாமியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் நாம் உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை இச்சிறுகதை வலியுறுத்தியுள்ளது.
'பெரியம்மா' என்ற சிறுகதையில் அலுவலகங்களில் அண்டிப் பிழைக்கும் ஊழியர்களை பெரியம்மா என்ற பாத்திரத்தின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்.
'வள்ளுவர் காட்டும் வாழ்வியற் சமரசம்' என்ற கட்டுரையில் வாழ்வின் மூன்று படிமுறைகள் எவை என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார். கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற செய்தியை அவரது புறநானூற்றுப் பாடலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
செல்வத்தை தேடும் வழிமுறையையும், அதனை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதனையும் 'ஆறுமுகநாவலரின் பொருளியல் கொள்கை' என்ற கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இவர் எழுதிய 'குமணனின் கொடைமடம்' என்ற வில்லுப்பாட்டு தமிழ்மொழித் தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றது என குறிப்பிட்டு செம்மனச்செல்வியின் சகோதரர்களான வடகோவை வரதராஜன், காலஞ்சென்ற இராஜராஜன் (கோமகன்) ஆகியோருடன் ஒப்பிட்டு இவரின் இலக்கிய ஆளுமையை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார், கலிஸ்ரா ரவீந்திரன்.

'நான் ஒரு விரிவுரையாளராக வருவேன் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஏன் நானும்தான். ஆனால், அதற்கு கல்விப் புலமையை விட வேறு பல தகுதிகளும் வேண்டும் என பின்னாளில் அறிந்துகொண்டேன்' என என்னுரையில் தனது ஆதங்கத்தையும், சமூக அவலத்தையும் எழுத்தாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
பாடசாலைகள்தான் சமூகத்தின் அத்திவாரங்கள். ஆசிரியர்கள்தான் அதன் சிற்பிகள். அவர்கள் மாணவர்களை எவ்வாறு உருவாக்குகிறார்களோ அவ்வாறே சமூகம் படைக்கப்படுகிறது என்பதனை ஆசிரியர் என்ற முறையில் சிறுகதைகளில் அழுத்திச் சொல்லியிருப்பது சிறப்பு.
மனிதநேயம், மனிதமாண்பு என்றால் என்ன, அது ஏன் ஒவ்வொருவரிடமும் மிளிர வேண்டும் என்ற மிகப்பெரிய செய்தியை தனது கதைகளில் வெளிக்கொணர்ந்திருப்பது சிறப்பு.
இவரது ஆக்கங்களில் பழந்தமிழ் இலக்கியங்களை இலகுவாக பலரும் புரிந்து கொள்ளும் வகையில் கையாண்டிருப்பது மிகச்சிறப்பு. இது இவரது தனித்தன்மையாக பளிச்சிடுகின்றது. கவிஞர் கண்ணதாசன் இந்த யுக்தியை தனது பாடல்களில் கையாண்டிருக்கிறார்.
'கடற்கோளும் கருதுகோளும்' என்ற சிறுகதையில் பாரதியாரின் 'பக்கத்திலிருப்பவன் துன்பம்தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி' என்ற வரிகளையும், 'இடர் வரும்போதும் உள்ளம் இரங்கிடும்போதும் உடன்பிறந்தவர் போல் மாந்தர் உறவு கொள்வார் அப்பா' என்ற தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகளையும் எடுகோளாக கையாண்டிருப்பது சிறப்பு.

'சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ....' என்று 'என் சுவாசக்காற்றே' என்ற படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலை 'மழைவானம்' என்ற சிறுகதையில் பாவித்திருக்கின்றார்.
'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்...' என்ற பாரதியின் பாடல் வரிகளை சேர்த்திருப்பதும், 'மண்ணெல்லாம் உய்ய மழைபோல் வழங்கு கரத்தான்' என நந்திக்கலம்பகத்தில் நந்திவர்மனின் கொடையை புலவர் பாராட்டுகிறார் என மழைக்கு வலுச்சேர்த்திருப்பது சிறப்பு.
புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது', மஹாகவி உருத்திரமூர்த்தியின் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' ஆகிய நூல்களை தனது 'எங்கே போகிறோம்' என்ற கதைக்கு வலுச்சேர்க்க பாவித்துள்ளமையும், 'வேறுபாடுகளே உலகத்தின் பேரழகு' என்ற ராஜாஜியின் வரிகளை சேர்த்திருப்பதும் சிறப்பு.
'வராக நதிக்கரையோரம் ஒரேயொரு பார்வை பார்த்தேன்' என்று வைரமுத்து 'சங்கமம்' படத்துக்காக எழுதிய பாடலை 'சினேகிதிகள்' என்ற சிறுகதையில் பாவித்துள்ளார்.
திருவள்ளுவர், சங்ககாலப் புலவர் சோனாட்டுப் பேரெழில், ஒளவையார் ஆகியோரை தனது புரிந்துணர்வு என்ற கட்டுரையில் ஆங்காங்கே பாவித்திருப்பதும், கலித்தொகையின் ஒரு காட்சியை சேர்த்திருப்பதும் புரிந்துணர்வு என்ற இவரது கட்டுரைக்கு வலுச்சேர்த்துள்ளது.
'சான்றோர் இணக்கம்' என்ற கட்டுரைக்காக சான்றோரையும், பழந்தமிழ் இலக்கிய காட்சிகளையும் துணைக்கு அழைத்துள்ளார். திருக்குறள், நாலடியார், இளம்பெருவழுதி என்னும் புறநானூற்றுப் புலவன், மகாபாரதத்தில் தருமன், யட்சகன் உரையாடல், ஒளவையார், அறிஞர் ஜோன் மில்டன் ஆகியோரின் கருத்துகளை பாவித்து இக்கட்டுரையை எழுதியுள்ளமை சிறப்பு.
'வள்ளுவர் காட்டும் வாழ்வியற் சமரசம்', 'புறநானூற்று காட்சித் தெளிவு' ஆகிய கட்டுரைகள் இவரின் ஆய்வுத் தெளிவுத்திறனை பறைசாற்றி நிற்கின்றன. அதுவும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலை அலசி ஆராய்ந்திருப்பது சிறப்பு.
'கல்வியின் பயன் அனுபவமே' என்ற கட்டுரையில் அறிஞர் ரூசோவின் கருத்துக்களை துணைக்கழைத்து தனது அனுபவங்களை பகிர்ந்திருப்பது கட்டுரையை சிறப்படைய செய்திருக்கிறது.
'சமய வழிகாட்டலும் மானுட வாழ்வும்' என்ற ஆழமான கட்டுரை மிகவும் இலகுவாக யாவரும் புரிந்துகொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர், அறிஞர் ஓஷோ, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரின் மேற்கொள்கள் கட்டுரைக்கு சிறப்பு சேர்த்திருக்கின்றது.
தனது கட்டுரைகளுக்கு பின்னால் தான் பாவித்த உசாத்துணை நூல்களை சேர்த்திருப்பது கட்டுரையாளரின் நேர்மையை பறைசாற்றுகிறது. இன்று இந்த நாகரிகம் அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.

ஒவ்வொருவரும் வாசித்து அனுபவிக்க வேண்டிய நூல் 'காலப்புனல்'. ஒவ்வொருவர் வீட்டிலும் இதனை ஆவணப்படுத்தி வைத்து அடுத்த சந்ததிக்கு கடத்துவது எமது வரலாற்றுக் கடமையாகும்.
இந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு கலாபூஷணம் மேழிக்குமரன் தலைமை வகித்திருந்ததுடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் லோகேஸ்வரன், வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகரான திரு.உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, உதவி கல்விப் பணிப்பாளர் ராஜ்மோகன், வெளியீட்டுரை நிகழ்த்த ஆசிரிய ஆலோசகர் திருமதி. நிறைமதி நூலினை திறனாய்வு செய்திருந்தார்.
நூல் வெளியீட்டு மரபினை மாற்றியமைக்கும் வகையில் பொய்கை பதிப்பக உரிமையாளர் தயாபரனின் கையிலிருந்து பிரதியினை பெற்று, முதலாவது பிரதியை மலையகத்திலிருந்து வந்திருந்த உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியான பொன்னையா இரட்னசாமிக்கு யாரும் எதிர்பாராத தருணத்தில் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நூலாசிரியர் வழங்கியது நிகழ்வின் சிறப்பம்சமாகும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM