(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதியின் கற்பனை பொருளாதார மீட்சி வெற்றி பெறுமா ? அல்லது சமூக கட்டமைப்பின் நடைமுறை தன்மை வெற்றிப்பெறுமா ? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மக்கள் போராட்டத்தை நிச்சயம் தீவிரப்படுத்தும். இறக்குமதி செலவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் டொலர் கையிருப்பு சேமிக்கப்பட்டுள்ளதே தவிர பொருளாதாரம் முன்னேற்றமடையவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்துடன் கலந்தாலோசிக்காமல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அரச முறை கடன்களை செலுத்த முடியாது.வங்குரோத்து நிலை அடைந்து விட்டோம் என அறிவித்தார். இதன் பின்னரே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டது.ஆகவே வங்குரோத்து என்ற அறிவிப்பு சூழ்ச்சிகரமானது என்பது தெளிவாக விளங்குகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை,ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள். விரிவான பேச்சுவார்த்தையின் பின்னர் ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என அறிவித்தோம். ஆனால் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.முதல் தவணையை பெற்றுக்கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது.இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
கடுமையான நிபந்தனைகளினால் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை முடக்குவதாக ஜனாதிபதி அச்சுறுத்துகிறார்.பங்குச்சந்தையின் நெருக்கடி தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில் கொழும்பு பங்குச்சந்தையை மூடுவதாகவும்,வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என்று குறிப்பிடும் போது பொருளாதாரத்தை வங்கி பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி முறையற்ற வகையில் குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். 2022ஆம் ஆண்டு முதலிரு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 2196 மில்லியன் டொலராக காணப்பட்டது, ஆனால் இந்து ஆண்டு நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதிகளில் ஏற்றுமதி வருமானம் 1960 மில்லியன் டொலராக காணப்பட்டது.குறுகிய காலத்துக்குள் ஏற்றுமதி வருமானம் 11 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
இறக்குமதி செலவு 37 சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட்டடுள்ளதால் டொலர் கையிருப்பு சேமிக்கப்பட்டுள்ளது.
சீனி இறக்குமதி 55 சதவீதத்தாலும்,பால்மா 45 சதவீத்தாலும்,பழங்கள் இறக்குமதி 52 சதவீதத்தாலும்,மருந்து பொருட்கள் இறக்குமதி 24 சதவீதத்தாலும்,கட்டுமாண பொருட்களுக்கான மூலப்பொருட்கள் 58 சதவீதத்தாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் டொலர் கையிருப்பு சேமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் எவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். நாட்டின் அபிவிருத்தி துறையை முடக்கி எவ்வளவு காலம் இருக்க முடியும்.மறுபுறம் வெளிநாட்டு கடன் செலுத்தப்பட்டவில்லை. இதன் மிகுதியே டொலர் சேமிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வு கூட காணப்படவில்லை.
தேசிய கடனை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அரசியல்வாதிகள் அரச நிதியை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றார்கள். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு தொழிலாளர்களின் குறைந்தபட்ச சேமிப்பை கொள்ளையடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மறுபுறம் இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் தனியார் மயப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மக்கள் போராட்டத்தை அடக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கற்பனை பொருளாதார மீட்சி வெற்றி பெறுமா ? அல்லது, சமூக கட்டமைப்பின் தற்போதைய நிலை வெற்றி பெறுமா? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு ஒருபோதும் சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM