2008ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டை சேர்ந்த மூன்று பளுதூக்கும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2008ஆம் ஆண்டு சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி மற்றும் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தி விளையாட்டுகளில் கலந்து கொண்டதாக முன்னர் குற்றம்சாட்டப்பட்ட வீராங்கனைகளின் இரத்த மாதிரிகள் மறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அந்த பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இவ்விரு போட்டிகளிலும் 8 வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்றிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, 75 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை காவ் லியி, 48 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை சென் க்ஸியெக்ஸியா மற்றும் 69 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை லியூ சுன்ஹாங் ஆகியோரின் ஒலிம்பிக் பதக்கங்கள் நேற்று பறிக்கப்பட்டன. 

இதேவேளை பெலாரஸ் நாட்டை சேர்ந்த வீராங்கனை நட்ஸேயா ஒஸ்டாப்சுக் உள்பட 8 வீரர்-வீராங்கனைகளின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்பட்டன.

பீஜிங் மற்றும் லண்டன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்க மருந்துகளை பயன்படுத்தி வெற்றிபெற்று பதக்கம் வென்றதாக இதுவரை 101 வீரர்-வீராங்கனைகளின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

 இவ்வாறு பதக்கங்கள் பறிக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகளில் ரஷியாவை சேர்ந்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.