மலையக மக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் - இராதாகிருஸ்ணன் : பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து போதுமான விண்ணப்பம் கிடைக்கவில்லை - செஹான் சேமசிங்க

Published By: Vishnu

26 Apr, 2023 | 10:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெருந்தோட்ட மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் மலையக மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தில் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் வலியுறுத்தினார்.

இன,மத,பிரதேச வேறுபாடின்றி தகுதியானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்துக்கு நுவரெலியா மாவட்டம் உட்பட பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து போதுமான விண்ணப்பம் கிடைக்கப் பெறவில்லை. 

ஆகவே நிவாரணம் பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற   சர்வதேச நாணய நிதியத்தின்  ஒப்பந்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிடப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் ஏற்படும் சாதக மற்றும் பாதக காரணிகள் குறித்து விரிவாக ஆராய வேண்டும்.நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்க்கட்சியாக வரவேற்கிறோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண  நாணய நிதியத்தை நாடுங்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரிடம் பலமுறை வலியுறுத்தினோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இல்லை என்று குறிப்பிட்டு பொதுஜன பெரமுன நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கை 16 தடவைகள் பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த காலங்களை காட்டிலும் இந்த முறை கடுமையான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.நாட்டின் அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும் நிலையற்ற அரசியல் கட்டமைப்பு ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு நாணய நிதியம் இந்த முறை கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.பொருளாதார பாதிப்பால் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை செயற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெருந்தோட்ட மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு இல்லாத நிலையில் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பெருந்தோட்ட மக்களில் 57.3 சதவீதமானோர் அரசாங்கத்திடமிருந்து   நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

ஆகவே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தில் பெருந்தோட்ட மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தில் மதம்,பிரதேசம்,இனம் என்ற அடிப்படையில் வேறுபாடு ஏதும் கிடையாது. நிவாரணம் வழங்கப்பட வேண்டிய தரப்பினருக்கு நிவாரணம் வழங்கப்படும்.

நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு நுவரெலியா மாவட்டம் உட்பட பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறவில்லை.

இவ்விடயம் தொடர்பில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.ஆகவே அப்பகுதியில் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.நிவாரணம் பெற தகுதி உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27
news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35
news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31