(நெவில் அன்தனி)
அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான இன்று புதன்கிழமை (26) ஆட்டத்தில் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ ஆகியோர் குவித்த சதங்கள், குசல் மெண்டிஸ் குவித்த அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை முதலாவது இன்னிங்ஸில் பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் குவித்த சாதனைமிகு 492 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை ஒரு விக்கெட்டை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக இன்று பிற்பகல் 2.42 மணிக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. சற்று நேரத்தில் கடும் மழை பெய்ததால் ஒரு மணி நேரம் கழித்து ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கையின் வீறுநடைக்கு தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க அயர்லாந்தைவிட 135 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது.
போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று காலை ஆரம்பமானபோது ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களில் இருந்து இலங்கை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
திமுத் கருணாரட்னவும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் மதிய போசனை இடைவேளைக்கு முன்னர் சதங்களைக் குவித்ததுடன் 228 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும் மதியபோசன இடைவேளைக்கு முன்னர் கடைசி ஓவரில் அவசரப்பட்ட திமுத் கருணாரட்ன பந்தை உயர்த்தி அடித்து 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இது அவரது 16ஆவது டெஸ்ட் சதமாகும். அவர் ஆட்டம் இழந்ததும் பகல் போசன இடைவேளை வழங்கப்பட்டது.
234 பந்துகளை எதிர்கொண்ட திமுத் கரணாரட்ன 15 பவுண்டறிகளை அடித்திருந்தார்.
மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ தனது 3ஆவது டெஸ்டில் கன்னிச் சதத்தை சிக்ஸ் மூலம் பூர்த்தி செய்தார்.
திமுத் கருணாரட்ன ஆட்டம் இழந்த பின்னர் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வீரரைப் போன்று பந்தை விசுக்கி அடித்து ஓட்டங்களை வேகமாகக் குவித்த குசல் மெண்டிஸ் 96 பந்துகளில் 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 83 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 234 பந்துகளில 18 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 149 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இது இவ்வாறிருக்க, நேற்றைய தினம் மழை காரணமாக 2 மணி நேர ஆட்டம் கைவிடப்பட்டதால் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM