வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கான காரணிகளுக்கு தீர்வுகாணாவிடின் சட்ட மறுப்பு போராட்டம் - சுமந்திரன் சபையில் எச்சரிக்கை

Published By: Vishnu

25 Apr, 2023 | 06:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளதால் பாராளுமன்றத்துக்கு சட்டமூலத்தை சமர்ப்பிப்பது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

தாமதப்படுத்துவதை காட்டிலும் சட்டமூலத்தை முழுமையாக இரத்து செய்வது அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில்  இடம்பெற்ற ஹர்த்தாலுக்கான காரணிகளுக்கு தீர்வு காணாவிட்டால் சட்ட மறுப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டம், சிங்கள குடியேற்றம் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மாபெரும் ஹர்த்தால் நடவடிக்கையில் இன்று (25) ஈடுபட்டார்கள்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றுள்ளதால் பாராளுமன்றத்துக்கு சட்டமூலத்தை சமர்ப்பிப்பது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த சிங்கள மயமாக்கலுக்கு எதிராக அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். சமய வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களுக்கு நாங்கள் சென்று பார்வையிட்டோம். அங்கு தமிழ் மற்றும் முஸ்லிம்  மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 3600 ஏக்கர் நிலம் தொல்லியல் திணைக்களத்திற்கு தேவையென பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில்  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய புத்தசாசன அமைச்சராக பதவி வகித்த  காலப்பகுதியில் அது 267 ஏக்கராக  குறைத்து மாற்றப்பட்டிருந்தது.  தற்போது மீண்டும்  3600 ஏக்கர் நிலமாக அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரச இயந்திரம் இனப்பாகுபாட்டை காட்டியவாறு தொடர்ச்சியாக இனவாத நோக்கத்துடன் இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்திலும் அதை காணக்கூடியதாக இருக்கின்றது. வடக்கு மற்றும கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் ஏதேனும் கேள்வி கேட்டால் முன்வரிசையில் இருக்கும் அமைச்சர்  எங்களை பயங்கரவாதி என்று கூறுமளவுக்கு நிலைமை காணப்படுகிறது.

இனவாத முகத்தை காட்டும் அரசாங்கத்துடன் சில புல்லுருவிகள் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.எந்த காலத்திலும் இவர்கள் போன்றோர் இருக்கின்றனர். ஆனால் நியாயமாக செயற்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

அவ்வாறு இருக்காவிட்டால் அதனை வெளிப்படுத்தும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது. அதனை வெளிப்படுத்தி அதனை பாராது இருக்கும் போது நாங்கள் இப்போது செய்வதை போன்று எதிர்ப்பு செய்யும் கட்டாயம் தோற்றம் பெறும்.

அரசாங்கத்தின்  ஜனநாயகத்துக்கு  எதிராக செயற்பாடுகளை  தற்போது ஹர்த்தால் ஊடாக  எதிர்ப்பு தெரிவிப்பதை போன்று  வெகுவிரைவில் சட்ட மறுப்பு போராட்டத்தையும் முன்னெடுப்போம் என்பதனையும் அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை  தாதமப்படுத்துவதால் எந்த பலனும் கிடையாது.சட்டமூலம்  முழுமையாக வாபஸ் பெற  வேண்டும்.  உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலத்தை மீறப் பெற்றால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும் என  நீதி அமைச்சர்  குறிப்பிடுவது முறையற்றது.

நடைமுறையில் உள்ள  பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று 2017 ஆம் ஆண்டு  தற்போதைய ஜனாதிபதியான அன்றைய பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு  உறுதியளித்திருந்தார். அவ்வாறு நடந்து கொள்ளாவிட்டால் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் போகும் நிலை தோற்றம் பெறும். இவ்வாறான நிலைமையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இழுபறி நிலையில் உள்ளது.சட்டமூலத்தை முழுமையாக வாபஸ் பெறும் வரை  எமது போராட்டம் தொடரும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின்  காணிகள்  அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக  போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.எமது எதிர்ப்பை மீறி அரசாங்கம் செயற்பட்டால் பாரிய சட்ட மறுப்பு போராட்டத்திற்கு முகம்கொடுக்க நேரிடும். பொருளாதார நெருக்கடியில் சிக்க நேரிடலாம். நாங்கள் பொருளாதாரத்திற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கும் நேரத்தில் இனவாதத்தில் இன்னும் எங்களை அடக்கி,ஒடுக்க நினைத்தால் நாடு இன்னும் அதளபாதாளத்திற்குள் செல்லும். இதனை எவராலும் தடுக்க முடியாது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தேன்.எனக்கு தொல்லியல் திணைக்களம் நிகழ்வொன்றுக்காக அழைப்பு விடுத்திருந்தது. மே மாதம் 19 ஆம் திகதி நிகழ்வொன்று நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறு நிகழ்வை நடத்த முடியும். அரசாங்கம் என்ன செய்கின்றது.

இந்த திணைக்களத்தின் இலச்சிணையை பார்க்கும் போது இதுவொரு புத்தசாசன அமைச்சை போன்றே உள்ளது.இதேவேளை நான் வெடுக்குநாரி மலை தொடர்பான வழக்கிலும் ஆஜராகின்றேன். அங்கு அடையாளம் காணப்படாத நபர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன. இவ்வாறான பிரச்சினைகளால் தான் மக்கள் ஹர்த்தால் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்றார்.

அடிப்படை தவறுகளை அரசாங்கம் பொறுப்புடன் திருத்திக் கொள்ள வேண்டும். சட்டத்துக்கு மதிப்பளித்து அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். அரச நிர்வாகத்தில் மத காரணிகள் முன்னிலைப்படுத்தப்பட்டால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர குறைவடையாது. எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பல்வேறு வழிமுறைகளில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின்...

2026-07-12 09:23:04
news-image

நீதிபதிகளின் பதவி கால நீடிப்பு ;...

2026-07-12 09:21:52
news-image

புத்தல பகுதியில் கார் மரத்துடன் மோதி...

2026-07-12 09:18:09
news-image

லக்கல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு...

2026-07-12 08:39:11
news-image

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர்...

2026-07-12 08:33:59
news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42