இலங்கைக்கு எதிராக ஸ்டேர்லிங், கெம்ஃபர் சதங்கள் குவிப்பு : டெஸ்ட் மொத்த எண்ணிக்கையில் அயர்லாந்து சாதனை

Published By: Vishnu

25 Apr, 2023 | 06:11 PM
image

(நெவில் அன்தனி)

போல் ஸ்டேர்லிங், கேர்ட்டிஸ் கெம்ஃபர் ஆகிய இருவரும் குவித்த கன்னிச் சதங்களின் பலனாக இலங்கைக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 492 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அயர்லாந்து குவித்த அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக 2018இல் நடைபெற்ற அங்குரார்ப்பண டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து குவித்த 339 ஓட்டங்களே இதற்கு முன்னர் அவ்வணியின் அதிகூடிய டெஸ்ட் மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 4.30 மணியளவில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட போது இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ 41 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

அயர்லாந்து சார்பாக போல் ஸ்டேர்லிங், கேர்ட்டிஸ் கெம்ஃபர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதங்கள் குவித்த 3ஆம், 4ஆம் வீரர்களாவர். இதற்கு முன்னர் அயர்லாந்தின் அங்குரார்ப்பண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 2018இல் கெவின் ஓ'ப்றயனும் பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் லோர்க்கன் டக்கரும் சதங்கள் குவித்திருந்தனர்.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அயர்லாந்தின் கடைசி  விக்கெட்  வீழ்த்தப்பட்டது. போல் ஸ்டேர்லிங் 103 ஓட்டங்களையும் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 111 ஓட்டங்களையும் பெற்றனர். முதல் நாளன்று அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி 95 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 492 ஓட்டங்களைக் குவித்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்த சிறிது நேரத்தில் லோக்கன் டக்கரின் விக்கெட்டை விஷ்வ பெர்னாண்டோ நேரடியாகப் பதம் பார்த்தார்.

10 பவுண்டறிகளுடன் 80 ஓட்டங்களைப் பெற்ற டக்கர், 6ஆவது விக்கெட்டில் கெம்ஃபருடன் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

முதலாம் நாளன்று தசை பிடிப்பு காரணமாக 74 ஓட்டங்களுடன் தற்காலிக ஓய்வு பெற்ற 32 வயதான போல் ஸ்டேர்லிங், 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் களம் புகுந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

போட்டியின் முதல் நாளன்று அணித் தலைவர் அண்டி பெல்பேர்னியுடன் 4ஆவது விக்கெட்டில் பிரிக்கப்படாத 114 ஓட்டங்களைப் பகிர்ந்த போல் ஸ்டேர்லிங், இரண்டாம் நாளன்று கேர்ட்டிஸ் கெம்ஃபருடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

போல் ஸ்டேர்லிங் 181 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 103 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் மூலம் மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்த 2ஆவது அயர்லாந்து வீரர் என்ற பெருமையை போல் ஸ்டேர்லிங் பெற்றுக்கொண்டார். அயர்லாந்து சாப்பாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்த முதலாவது வீரர் கெவின் ஓ'பிறயன் ஆவார்.

போல் ஸ்டேர்லிங் ஆட்டம் இழந்த பின்னர் துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய கேர்ட்டிஸ் கெம்ஃபரும் கன்னிச் சதம் குவித்து அசத்தினார். கெம்ஃபர் 229 பந்துகளில் 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 111 ஓட்டங்களைக் குவித்தார்.

அத்துடன் அண்டி மெக்பேர்னியுடன் 7ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மேக்பேர்னி 35 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 174 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 78 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்பா பெர்னாண்டோ 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தனது 7ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ப்ரபாத் ஜயசூரிய, 6ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இதுவரை மொத்தமாக 48 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

2017இல் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் அயர்லாந்து தோல்வியைத் தழுவியது.

இலங்கைக்கு எதிராகவே அயர்லாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தடவையாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து ஆகியவற்றுக்கு எதிராக ஒற்றை டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து விளையாடி இருந்தது.

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அயர்லாந்து தோல்வி அடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46