நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்கப்பட்டமையானது இலங்கையர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுகொள்வதற்காக கடந்த இரு வருடங்களாக அரசாங்கம் முன்னெடுத்த தியாகங்களின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது.   

குறிப்பாக மனித உரிமைகளை பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளது.

இது வெறுமனே நல்லாட்சி அரசாங்கத்துக்கு மாத்திரம் கிடைத்த வெற்றியல்ல. இலங்கையர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.