நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தை வைத்து வெற்றி பெறும் சூட்சும வழி...!!!

Published By: Ponmalar

24 Apr, 2023 | 01:08 PM
image

நாளாந்த வாழ்வில் உளவியல் சார்ந்த நெருக்கடிகள் அதிகம்.  ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் வெற்றி பெற்று வளர்ச்சி அடைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களின் சூட்சுமத்தை ரத்த உறவுகளுக்கோ... அவர்களை தொடர்ச்சியாக பின்பற்றுபவர்களுக்கோ.. அல்லது நண்பர்களுக்கோ.. உறவினர்களுக்கோ.. மறந்தும் கூட தெரிவிப்பதில்லை.

இதற்கு எம் மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து மேலத்தேய நாடுகளில் வசதியுடன் வாழும் உறவினர்களையும், நண்பர்களையும் உதாரணமாக குறிப்பிடலாம். ஆனால் ஜோதிட வல்லுநர்களிடம் நீங்கள் சென்று வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்கள் கேட்டால்.. அவர்கள் அதற்கான வழிமுறையை விவரிப்பர்.

உங்களது இந்த ஜென்மத்தில் எது நடந்தாலும், அது நட்சத்திரத்தின் அதாவது உங்களது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தின் ஊடாகவே நடக்கும்.

இதனை முதலில் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். அதனால் உங்களது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து எந்தெந்த நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளித் தரும் என்பதையும், எந்தெந்த நட்சத்திரங்கள் கெடு பலன்கள் அல்லது சுப பலன்கள் குறைக்கும் என்பதை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 2, 11, 20 ஆகிய எண்ணிக்கையில் இருக்கும் மூன்று நட்சத்திரங்கள் மூலமாகத்தான் உங்களது வருவாய் இருக்கும். அதாவது இந்த நட்சத்திரம் கோச்சாரத்தில் வரும் காலகட்டங்களில் உங்களுக்கு பணவரவு கொட்டும். அவை உங்களின் கர்ம பலன்களை பொறுத்து நூறு கணக்கிலோ... ஆயிரம் கணக்கிலோ அல்லது லட்சக்கணக்கிலோ கூட கிடைக்கும்.

உதாரணத்திற்கு உங்களது ஜென்ம நட்சத்திரம் சதயம் என்றிருந்தால்.. அதனுடைய இரண்டாவது நட்சத்திரமான பூரட்டாதி, பதினோராவது நட்சத்திரமான புனர்பூசம், இருபதாவது நட்சத்திரமான விசாகம் ஆகிய நட்சத்திரங்களும், அந்த நட்சத்திர நாளிலும் உங்களுக்கு பண வரவு உண்டு.

இதனிடையே ஒரு நுட்பமான விடயத்தை நீங்கள் அவதானிக்கலாம். பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் இவை அனைத்தும் குருவின் நட்சத்திரங்கள். இதனையறிந்து கொண்டு, குரு வழிபாடு, குருமார் வழிபாடு, குரு பகவான் வழிபாடு, குருவிற்குரிய உணவுப் பொருள்களை பயன்படுத்துவது... போன்றவற்றை நீங்கள் உறுதியாக ஆயுள் முழுதும் பின் தொடர்ந்தால்.. வருவாய் வருவது மற்றும் வருவாய் தொடர்ந்து அதிகரிப்பதை காணலாம்.

அதே தருணத்தில் உங்களது ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் அமைந்திருந்தால் எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன் கிடைக்கும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். மேலும் இரண்டாமிட நட்சத்திரம் மூலம் வருமானம், பொருள் சேர்க்கை, சொத்து சேர்க்கை, வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு என பல விடயங்கள் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து உங்களது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 4, 13, 22 ஆகிய மூன்று நட்சத்திரங்கள் ஷேம தாரை நட்சத்திரங்கள். வாழ்க்கையில் பொருள் சேர்க்கை மட்டும் இருந்தால் போதாது. அதனை அனுபவிப்பதற்கான ஷேமம் அதாவது ஆரோக்கியம் தேவை.

மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை வழங்கக் கூடிய நட்சத்திரங்கள் இவை. உதாரணத்திற்கு உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் சதயம் என்றிருந்தால்... அதன் நான்காவது நட்சத்திரமான ரேவதி, பதிமூன்றாவது நட்சத்திரமான ஆயில்யம், இருபத்தியிரண்டாவது நட்சத்திரமான கேட்டை ஆகியவை உங்களது ஷேமத்தாரை நட்சத்திரங்களாகும். இதிலும் நீங்கள் ஒரு நுட்பமான ஒற்றுமையை அவதானிக்கலாம்.

இந்த மூன்று நட்சத்திரங்களும் புதனின் நட்சத்திரங்கள். எனவே புதன்கிழமை, பெருமாள் வழிபாடு, புதனுக்குரிய உணவுப் பொருட்கள், புதனுக்குரிய தேவதைகள் ஆகியவற்றை தொடர்ந்து வழிபட்டால், உங்களுடைய ஆரோக்கியம் சார்ந்த பல விடயங்களுக்கு பலன் கிடைக்கும்.

மேலும் உங்களது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 6,15, 24 ஆகிய மூன்று நட்சத்திரங்கள் சாதக தாரை நட்சத்திரங்கள். நாம் புதிதாக வேலை வாய்ப்பினை பெறுவது, புதிய தொழில் தொடங்குவது இதுபோன்ற விடையங்களில் சாதக தாரை நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.

சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு முக்கிய பிரமுகரை சந்திக்க வேண்டும். அந்த சந்திப்பின்போது நடைபெறும் பேச்சு வார்த்தை, எமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது... அதற்கான நட்சத்திரமாக மேற்கூறிய மூன்று நட்சத்திர நாட்களில் சந்தித்தால் உங்களது எண்ணம் ஈடேறும்.

உங்களது ஜென்ம நட்சத்திரம் சதயமாக இருந்தால்.. அதிலிருந்து ஆறாவது நட்சத்திரமான பரணி , பதினைந்தாவது நட்சத்திரமான பூரம், இருபத்தினான்காவது நட்சத்திரமான பூராடம் இவை அனைத்தும் உங்களுக்கு சாதகமாக, காரிய தடையை ஏற்படுத்தாத நட்சத்திரமாக இருக்கும்.

மேலும் இந்த மூன்று நட்சத்திரங்களில் உள்ள ஒரு ஒற்றுமையை அவதானித்தால், இவை அனைத்தும் சுக்கிர பகவானின் நட்சத்திரங்களாகும். இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை, வெண்மையான ஆடை, மகாலட்சுமி, காளி, துர்க்கை வழிபாடு, வெள்ளி நகைகள்.. போன்றவற்றை பயன்படுத்தும் போது உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

இதனையடுத்து உங்களது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 8, 17, 26 ஆகிய மூன்று நட்சத்திரங்கள் நட்பு தாரை நட்சத்திரங்கள். நீங்கள் பயணிக்கும் இடங்கள்.. பழகும் நபர்கள்.. என வாழ்க்கையில் புதிதாக எதிர்கொள்ளும் விடயங்களில் உங்களிடம் நட்பையும்,  இணக்கமாக சூழலையும் உருவாக்குபவர்கள் இவர்களாக இருப்பார்கள்.

உங்களது ஜென்ம நட்சத்திரம் சதயம் என்றிருந்தால்... அதிலிருந்து எட்டாவது நட்சத்திரம் ரோகிணி, பதினேழாவது நட்சத்திரம் ஹஸ்தம், இருபத்தியாறாவது நட்சத்திரம் திருவோணம் ஆகியவை உங்களுக்கு சாதகமான நட்சத்திரங்களாகும். இதிலும் ஒரு நுட்பமான ஒற்றுமையை அவதானிக்கலாம்.

இந்த மூன்று நட்சத்திரங்களும் சந்திர பகவானின் நட்சத்திரங்களாகும். எனவே இந்த மூன்று நட்சத்திர நாளிலும் மற்றும் இதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் திங்கட்கிழமை, இதற்குரிய பிரத்யேக ஆடை மற்றும் உணவுப் பொருள்களை நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களுக்கான வெற்றி எளிதாகும்.

மேலும் உங்களது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 9, 18, 27 ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அதி நட்பு தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களிடம் நீங்கள் உதவி கேட்டால்.. மறுக்காமல் உடனே செய்வார்கள். இவர்களிடம் நீங்கள் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டால், அவர்கள் அதனை சீர்தூக்கி ஆராய்ந்து நல்ல விமர்சனத்தை வழங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிப்பார்கள்.

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் சதயமாக இருந்தால் உங்களின் ஒன்பதாவது நட்சத்திரம் மிருகசீரிஷம், பதினெட்டாவது நட்சத்திரம் சித்திரை, இருபத்தியேழாவது நட்சத்திரம் அவிட்டம் என மூன்று நட்சத்திரங்கள் இடம் பெறும். இதிலும் ஒரு ஒற்றுமையை அவதானிக்கலாம். இந்த மூன்று நட்சத்திரங்களும் செவ்வாய் பகவானுக்கு உரியவை. செவ்வாய்க்கிழமை, செவ்வாய் பகவானின் தேவதையான முருகன், செவ்வாடை போன்றவற்றை பயன்படுத்தினால் வெற்றி எளிதாகும்.

மேலே கூறிய சம்பத்து தாரை நட்சத்திரங்கள், ஷேம தாரை நட்சத்திரங்கள், சாதக தாரை நட்சத்திரங்கள், நட்பு தாரை நட்சத்திரங்கள், அதி நட்பு தாரை நட்சத்திரங்கள்  என 15 நட்சத்திரங்கள் தான் உங்களது வாழ்வில் கெடு பலன்களை அளிக்காத.. நல்ல பலன்களை மட்டுமே வழங்கக்கூடிய... உங்களது முன்னேற்றத்திற்குரிய நட்சத்திரங்களாகும்.

உடனே எம்மில் சிலர் இந்த நட்சத்திரங்களை மட்டும் பின்பற்றினால் போதுமா? என்பர். இந்த நட்சத்திரங்களின் தேவதைகள், இந்த நட்சத்திரங்கள் வரும் கிழமைகள், இந்த நட்சத்திரத்திற்குரிய உணவுகள், பரிகாரங்கள்.. ஆகியவற்றை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது, மாய தடைகள் விலகி, உங்களது வெற்றி உறுதியாகி, மன மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்திச் செல்வீர்கள். 

தகவல் : கோவிந்தராஜ்
தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35
news-image

கல்வியில் இருக்கும் தடையை அகற்றுவதற்கான சூட்சும...

2025-03-10 16:53:16
news-image

2025 ராகு - கேது பெயர்ச்சிப்...

2025-03-10 14:37:26
news-image

நிம்மதி ஏற்படுவதற்கான சூட்சம பரிகாரம்..!?

2025-03-09 13:12:58
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இதிகாச பாராயண...

2025-03-07 17:56:13