சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

24 Apr, 2023 | 12:35 PM
image

நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மாவீரன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மண்டேலா' படத்திற்காக தேசிய விருதினை வென்ற இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மாவீரன்'.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மூத்த நடிகை சரிதா, இயக்குநரும், நடிகருமான மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் அல்லது மே ஆகிய மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அறிவிப்பும் வெளியானது.

ஆனால் தற்போது இந்த திரைப்படம் ஓகஸ்ட் மாதம் 11-ம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இதற்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் தயாராகும் திரைப்படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருவதால், 'மாவீரன்' படத்தின் வெற்றியை அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right