தோனி-யுவராஜ் இருவரும் பரம வைரிகளாகவே சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், யுவராஜ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ அந்த எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது.  

தோனியின் தோளில் கைபோட்டு இறுக்கிக்கொண்டே யுவராஜ் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு புன்னகை மாறாத முகத்துடன் தோனி பதிலளிக்கும் வீடியோவை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருக்கிறார்.

இங்கிலாந்து ஏ அணிக்கெதிரான போட்டி முடிந்த சற்று நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள தோனியிடம் யுவராஜ் ஓரிரு கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

‘கிரிக்கெட் வீரராக உங்களது பயணம்?’ என்று யுவராஜ் கேட்ட கேள்விக்கு, ‘சிறப்பாகவே இருந்தது. உங்களைப் போன்ற வீரர்களின் நட்புக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. உங்களது ஒத்துழைப்பால் எனது வேலை இலகுவாக முடிந்தது. பத்தாண்டு காலத்தை சந்தோஷமாகக் கழித்தேன். எஞ்சிய காலத்தையும் அவ்வாறே கழிப்பேன் என்று நம்புகிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார் தோனி.

தோனியின் சிறப்புகளை யுவராஜ் பட்டியலிட, நடுவே புகுந்த தோனி, ‘எனது விளையாட்டில் நான் கண்டு ரசித்த காட்சி ஒரே ஓவரில் நீங்கள் விளாசிய ஆறு சிக்ஸர்கள்தான்’ என்றார்.

‘தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டீர்கள். இனி அதிகளவு சிக்ஸர்கள் அடிப்பீர்களா?’ என்ற யுவராஜின் கேள்விக்கு, ‘சிக்ஸர் அடிக்க விரும்புகிறேன். ஆனால் அடிப்பதற்கு வசதியாக பந்துகள் வந்தால் நிச்சயமாக அடிப்பேன். பார்க்கலாம்’ என்று தன்னடக்கத்துடன் பதிலளித்திருக்கிறார் தோனி.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.