சஷி என்பவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். வயது 59. மரம் ஏறித் தேங்காய் பறிப்பதைத் தொழிலாகக் கொண்ட இவர், பதினெட்டு வருடங்களுக்கு முன் மரத்தில் இருந்து விழுந்ததால் இவரது உடலின் ஒரு புறம் செயலற்றுப் போனது.

படுத்த படுக்கையான சஷி, தொடர் சிகிச்சைகளால் ஓரளவு குணமாகி நடமாடக் கூடிய நிலைக்குத் திரும்பினார். மரம் ஏறுவதைத் தவிர வேறெதுவும் தெரிந்திராத சஷி தனது வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டி தனக்கொரு முச்சக்கர வண்டியை வாங்கித் தந்து உதவுமாறு உள்ளூர் அமைப்புகளிடம் கேட்டார்.

ஆனால், அவரது வீட்டுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி போவதற்கு ஏற்றவாறு பாதை எதுவும் இல்லை. மேடும் பள்ளமுமான அந்தப் பகுதியை மக்கள் சிரமப்பட்டு ஏறி இறங்கித்தான் செல்லவேண்டியிருந்தது. இதனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வீதி வசதி வேண்டி கொடுத்த மனுக்களும் பயனற்றுப் போயின.

இறுதியில், தனது தேவையைத் தானே நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த சஷி, மண்வெட்டி மற்றும் தேவையான உபகரணங்களுடன் களமிறங்கினார்.

கையில் வலு குறைந்திருந்தாலும் நெஞ்சில் குறையாததால் தினமும் சுமார் ஆறு மணிநேரம் வரை நிலத்தைச் சீராக்கி பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று வருட முயற்சியால் அவரது வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு ஒரு சிறிய வாகனம் செல்லக்கூடிய அளவுக்கு பாதையை அமைத்துவிட்டார்.

“நான் பாதை தோண்ட ஆரம்பித்தபோது என்னால் பாதை அமைக்க முடியாது என்றும் எதற்காக இந்த வேண்டாத வேலை என்றும் பலர் கூறினார்கள். ஆனால், என்னால் முடிந்தவரையில் முயற்சிசெய்தால் ஒரு நாள் பாதை கிடைக்கலாம் என்பதுடன், அது எனது உடலுக்குத் தேவையான பயிற்சியாகவும் இருக்கும் என்று நம்பினேன். அதன் விளைவுதான் இந்தப் பாதை” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் ஷஷி.

“எனக்கான முச்சக்கரவண்டி கிடைக்குமா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் இப்பகுதி மக்கள் எளிதாக நடந்து செல்ல ஒரு பாதை கிடைத்துவிட்டது. அதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் ஷஷி!