உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’

Published By: Ponmalar

22 Apr, 2023 | 04:02 PM
image

சமைக்காத உணவுகளை அதிகமாக சாப்பிடும் உணவு முறை ‘ரா புட் டயட்’ எனப்படுகிறது. இந்த உணவு முறையின் மூலம் அதிக கலோரிகள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கலாம்.  

இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும். ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. சிலர் பச்சை முட்டை மற்றும் பால் பொருட்களையும் இந்த உணவு முறையில் சாப்பிடுவார்கள். 

104-118 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடுபடுத்தாமல் இருக்கும் உணவு, பச்சை  உணவாகவே கருதப்படுகிறது. உணவை சமைக்கும்போது அதில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் இழப்புகள் ஏற்படுகிறது. 

ஆகையால் ரா புட் டயட்டில், சமைத்த உணவுகளுக்கு மாறாக, காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சாலட், ஜூஸ், புட்டிங், ஊறவைத்த மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.  

இம்முறையில் உணவு உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும். மேலும், ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு இந்த முறை சிறந்தது.

பச்சைக் காய்கறிகளில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இதனால், உடலில் தேவைக்கும் அதிகமான அளவு கலோரி சேர்வதைத் தவிர்க்க முடியும்.

ரா புட் டயட்டில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். சோடியம், கலோரி, சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக இருக்கும். இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை புத்துணர்வு அடையச் செய்யும்.

இதில் சில உணவுப் பொருட்களில் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும். அதன் காரணமாக உணவு செரிமானமாகாமல் வாயுவை உண்டாக்கும். ஆகையால், தினமும் இஞ்சியை ஒரு வேளையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 

ரா புட் டயட்டில், சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் அவ்வப்போது பசி எடுத்துக்கொண்டே இருக்கும். ஆகையால் சாப்பிடும் உணவை காலை உணவு, சிற்றுண்டி, மதிய உணவு, மாலை நேர சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் நாள் இறுதியில் ஏதேனும் ஒரு இனிப்பு வகை என ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிட வேண்டும்.

முந்திரி, உலர் திராட்சை, பாதாம், வேர்க்கடலை, ஊறவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டை, கிராம்புத் தூள், மிளகுத் தூள், கொத்தமல்லித்தழை, புதினா, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், டிராகன் பழம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கெரட் ஆகிய உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், புட்டிங், சாலட், உருண்டைகள், ஸ்மூத்தீஸ் போன்ற வடிவிலும் சாப்பிடலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right