சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’

Published By: Ponmalar

22 Apr, 2023 | 01:42 PM
image

சரும பராமரிப்பிலும் அரிசியைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை மினுமினுப்பாக்குவது மட்டுமில்லாமல், முகத்தில் ஏற்படும் சுருக்கத்தையும், வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமையையும் நீக்குகிறது.

அந்த வகையில் அரிசியைக் கொண்டு எளிமையான முறையில் செய்யும் ‘அரிசி பேஷியல்’ செய்வது பற்றிப் பார்க்கலாம். 

சுத்தம் செய்தல் 


 அரிசி ஊற வைத்த தண்ணீர் 4 தேக்கரண்டி, பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் (விர்ஜின் ஒயில்) 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இவை இரண்டும் பால் போல மாறும் வரை நன்றாகக் கலக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் மென்மையாகத் தடவி மசாஜ் செய்யவும். இது அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது. 

ஸ்க்ரப்: நன்றாக அரைத்து சலித்தெடுத்த அரிசி மா 3 தேக்கரண்டி மற்றும் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சற்று அழுத்தமாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் நீங்கும். முகம் பொலிவு பெறும். 

பேஸ் பேக்: அரிசி ஊற வைத்த தண்ணீர் 2 தேக்கரண்டி, கிளிசரின் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, தேயிலை எண்ணெய் (டீ ட்ரீ ஒயில்) 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, அரிசி ஊற வைத்த தண்ணீரில் பருத்தித் துணியை நனைத்து பேஸ் பேக்கை முழுவதுமாக துடைத்து எடுக்கவும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு 4 தேக்கரண்டி அரிசியை நன்றாக ஊற வைத்து, அரைத்து வடிகட்டவும். பின்னர் வடிகட்டிய அரிசிப் பாலை மிதமான தீயில் சூடுபடுத்தவும். இது கிரீம் பதத்திற்கு மாறியதும் சிறிது ஆற வைத்து, அதில் விட்டமின் ஈ எண்ணெய் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி என அனைத்தையும் சேர்த்து ‘கிரீம்’ பதம் வரும் வரை நன்றாகக் கலக்கவும். 

பின்பு இதை சிறிய கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த கிரீமை 4 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைக்கலாம். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது பால் கொண்டு முகத்தைத் துடைத்த பின்னர் மேற்கூறிய கிரீமை, முகம் மற்றும் கழுத்தில் தடவி மசாஜ் செய்யவும். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையைத் தொடர்ந்து வாரம் 3 நாட்கள் வீதம், 2 மாதங்கள் பின்பற்றினால் முகம் மினுமினுப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும், பொலிவாகவும் இருக்கும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்