செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முறைப்படியாக வீடு ஒன்றுக்கே அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அந்த அனுமதியின் பிரகாரம் அமைக்கப்படும் வீட்டை தேவாலயமாக மாற்றினால், உரிய சட்ட நடவடிக்கையினை பிரதேச சபை ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அச்சுவேலி ஊடாக சந்நிதி செல்லும் வீதியில் உள்ள ஒருவரினால் பிரதேச சபையில் விண்ணப்பித்து, வீட்டுக்கான கட்டட அனுமதி பெறப்பட்டுள்ளது. அவ்வாறாக அனுமதி பெற்றவர் கட்டடம் ஒன்றை அமைக்க முயற்சித்தபோது, சந்நிதி ஆலய நலன்விரும்பிகள், செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தேவாலயம் அமைக்கப்படுவதாக என்னிடம் முறையிட்டனர்.
அந்த முறைப்பாடுகளுள் ஒன்றில், தனது நெருங்கிய உறவினரது காணியில் மோசடி செய்து கட்டடம் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடுகளின் பிரகாரம், எமது உத்தியோகத்தர்கள் உரிய நடவடிக்கை எடுக்க சென்று விசாரித்தபோது, கட்டடம் அமைப்பவர் முறைப்படி வீடு அமைப்பதற்கான அனுமதி பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது.
ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்ட அனுமதியை முறைப்பாட்டின் அடிப்படையில், மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியபோது, விண்ணப்பதாரி காணியை முறைப்படி பெற்றுள்ளமைக்கான ஆவணங்கள் எமக்கு முன்னதாகவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கும் மேலதிகமாக வீடு என்ற போர்வையில் தேவாலயம் அமைகின்றதா என்பதை ஆராயும் விதத்தில், விண்ணப்பதாரியை நான் நேரில் அழைத்து சபையில் விளக்கம் கேட்டேன்.
அப்போது, தான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி எனவும், வாழ்வதற்காக பலரிடம் தான் உதவி பெற்று, தனக்கான வதிவிடமொன்றை அமைப்பதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
அனைத்து மதங்களின் உரிமைகளையும் மதிப்பவனாக கடமையாற்றும் நான் அந்த விண்ணப்பதாரியிடம்,
'செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையில் உள்ள பகுதி ஆலய திருவிழா காலங்களில் ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்படும். முழுமையாக இந்துக்களை கொண்ட சமய சம்பிரதாயங்களுடனும் ஆலய நடவடிக்கைகளுடனும் தொடர்புடைய பகுதி இது என்பதன் அடிப்படையில், எனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று நீங்கள் அப்பகுதியில் தேவாலயம் அமைத்தால், அது சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படும்.
எனவே, எச்சந்தர்ப்பத்திலும் அந்த முறைப்பாடுகளில் குறிப்பிட்டிருப்பதை போல் தாங்கள் செயற்பட முடியாது' என தெரிவித்தேன்.
அதற்கிணங்கிய விண்ணப்பதாரி, சட்டப்படி குடியிருப்பதற்கான ஓர் இல்லத்தையே தான் அப்பகுதியில் அமைப்பதாக என்னிடம் கூறினார்.
அத்துடன், தேவாலயம் அமைக்கப்படுவதாக சந்தேகித்து முறைப்பாடுகள் கிடைத்ததனால் அவ்விண்ணப்பதாரி சபையின் அனுமதிக்கு முரணாக எந்த முறையிலேனும் கட்டட வேலைகளை செய்கின்றாரா என்பதை பற்றி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பல முறை எனது அறிவுறுத்தலின் பிரகாரம் சோதனையிட்டுள்ளனர்.
எனது பதவி முடிவுற்றதன் பின்னர் இந்த விடயத்தை அணுகும் பொறுப்பினை சபையின் செயலாளரிடம் கையளித்துள்ளேன்.
எல்லோரது மத சுதந்திரங்களையும் நான் மதிக்கின்ற அதேவேளை, சமயம் என்ற போர்வையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் எதிர்க்கின்றேன்.
ஆகவே, சிலவேளை எவராவது வீடு ஒன்றுக்காக சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளியை பயன்படுத்தி அனுமதி பெற்றுவிட்டு, அதனை தேவாலயமாகவோ அல்லது வேறு எந்த வடிவிலாகவோ பிரதேச சபைச் சட்டத்தில் பயன்படுத்த முடியாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தகைய சூழ்நிலையில், பிரதேச சபை நடவடிக்கை எடுக்கும் பொறுப்புடையதாகிறது.
இந்த விவகாரத்தில், குறித்த விண்ணப்பதாரி தேவாலயம் அமைப்பதாக கிடைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை வைத்து, அவர் எதிர்காலத்தில் அக்கட்டடத்தை தேவாலயமாக பயன்படுத்துவார் என்ற சந்தேகம் அல்லது எதிர்வுகூறலின் அடிப்படையில் எம்மால் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. தவறு இடம்பெற்றால் மட்டுமே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்நிலையில், தேவாலயம் கட்டப்படுவதாக தவிசாளரிடம் முறையிட்டும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்த கட்டுமானத்துக்கு தவிசாளரினாலேயே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுவது அரசியல் நோக்கம் கொண்ட உண்மைக்குப் புறம்பான, ஊடக தர்மத்துக்கும் அப்பாற்பட்ட முயற்சியே என்பதை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
உள்ளூராட்சி மன்றமொன்று பிரஜை ஒருவர் வதிவிடத்துக்கான ஆவணங்களை சமர்ப்பித்து, சட்ட ரீதியிலான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த பின்னர், கட்டடம் கட்ட அனுமதிக்க முடியாது என மறுக்க முடியாது. அது சட்டமீறலும் மனித உரிமை மீறலுமாகும்.
அதேவேளை வதிவிடத்துக்கான அனுமதியை பெற்றவர், அதனை துஷ்பிரயோகம் செய்து, வேறொரு தேவைக்காக கட்டடத்தினை பயன்படுத்துவாராயின், அது சட்ட ரீதியில் தடுக்கப்படும்.
தேவாலயங்கள் அமைப்பதற்கான கட்டட அனுமதியை பெற, மத அலுவல்கள் அமைச்சின் பரிந்துரை அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM