வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சி, 13 ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் - அருட்தந்தை சத்திவேல்

Published By: Nanthini

21 Apr, 2023 | 11:02 AM
image

டக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது ஒற்றையாட்சி மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விழுமியங்களை அழித்தொழிக்கும் நச்சு சட்டமூலமாகும். இது, தனிமனித மற்றும் சமூகத்தினதும் உரிமைகளை அரசு பயங்கரவாத இயந்திரங்களான பொலிஸ் மற்றும் படைகளின் சப்பாத்தின் கீழே வைத்து துவம்சம் செய்யவே வழிவகுக்கும். 

மனிதனை மனிதனாக ஏற்றுக்கொள்ளாது, நடமாடித் திரியும் ஜடமாக வைக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடுமைகளை கடந்த 44 ஆண்டுகளாக அனுபவிக்கும் மக்கள் சமூகமாக இப்போது புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோருவதோடு, வடகிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி நடக்கவிருக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் காரணமாக தமிழர்களாகிய நாம் அரசியல் அழிவை சந்தித்துள்ளதோடு குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் காவு கொடுத்திருக்கின்றோம். சமூகமாக சிதறுண்டு போயிருக்கின்றோம். பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் வாழ்விழந்துள்ளனர். இன்னும் பலர் இன்றும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே நாட்டை திறந்தவெளி சிறைக்குள் வைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட இருக்கின்றது. இது கொடூர முகத்தோடு தனது கோரப்பற்களை காட்டும் என்பது உண்மை. இதனை ஏற்றுக்கொள்வது, சமூக தற்கொலைக்கு விட்டுச் செல்லும் எனலாம்.

மக்களின் பாதுகாப்பு எனும் மாய்மாலத்தோடு கொண்டுவரப்படும் இச்சட்டமூலம் இதுவரை காலமும் நாட்டை கொள்ளையடித்து பொருளாதார வறுமைக்குள் தள்ளியவர்களையும், யுத்த குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடு என்பதோடு, இச்சட்டமூலத்தை அமுலாக்குவதன் மூலம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், ஆட்சியை தொடரவும் ஜனாதிபதி முயற்சிப்பதை நாம் உணரலாம்.

அது மட்டுமல்ல, நாட்டின் வளங்கள் ஏற்கனவே வெளி சக்திகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கொடுப்பதற்கான திட்டங்களே உள்ளன. தற்போதைய நாட்டின் வங்குரோத்து நிலை மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன. இவற்றுக்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்கவும், அனைத்து வகையான செயற்பாட்டாளர்களையும் அசைவற்றவர்களாக்கி அரசாங்கத்தை பாதுகாக்கவுமே திட்டமிடுகின்றனர்.

இச்சட்டமூலம் அமுலாக்கப்பட்டால், தற்போது வடகிழக்கில் நடக்கும் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், தொல்லியல் திணைக்களத்துக்கு எதிரான போராட்டம், பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என அனைத்தையும் பயங்கரவாதமாக்க முடியும்.

இதனை விட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதேசத்தை மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவும் முடியும். மாவீரர் துயிலுமில்ல பிரதேசங்களையும் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்க முடியும். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவு நாள் சம்பந்தமாக செயற்படுகின்றவர்களை பயங்கரவாதிகளாக்கி சிறைக்குள் தள்ள முடியும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு தோன்றியிருக்கும் நிலையில் 44 வருட காலமாக பயங்கரவாத தடை சட்டத்தினால் அழிவுகளை சந்தித்த அனுபவம் கொண்டவர்களாக எந்த வகையிலும் புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வரக்கூடாது என்பதிலே உறுதிகொண்டு அதனை எதிர்ப்பதற்கான தார்மீக பொறுப்பும் எமக்கு உள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அத்தோடு புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் எத்தகைய திருத்தங்களுடனும் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது. அவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வந்தால் அதனை ஆதரிப்பவர்கள் மக்கள் துரோகிகள், தேசத் துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.

அதேவேளை, விசேடமாக எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அமைவதால், அரசாங்கம் ஒற்றையாட்சி அதிகாரத்தோடு இந்தியாவுடன் இணைந்து தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக திணிக்க முயலும் 13ஆம் திருத்தத்தை எதிர்ப்பதாகவும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதுவே இந்திய, இலங்கை அரசியலுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தெற்கின் மக்களுக்கும் செய்தியாக அமையும் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38