2023 - 2024 குரு பெயர்ச்சி பலன்கள்

Published By: Nanthini

20 Apr, 2023 | 02:04 PM
image

குருவும் குரு பெயர்ச்சியும்  

இயற்பெயர்                      -    குரு பகவான்

துணை பெயர்கள்            -   பிரகஸ்பதி, தேவகுரு

தந்தை பெயர்                  -   ஆங்கிரஸர்

திசை ஆண்டுகள்            -    பதினாறு (16)

சொந்த வீடு                     -    தனுசு, மீனம்.

உச்சி வீடு                        -    கடகம்

நீச வீடு                            -   மகரம்

பார்வை இடும் இடம்       -    5, 7, 9

ஒரு ராசியில் தங்கும் காலம் -    ஓராண்டு

துர்ஸ்தானம்                       -        1,4, 6, 8, 10, 12

சமித்து                                -        ஆலமரம்

தானியம்                             -        கொண்டைகடலை

நவரத்தினம்                        -        புஷ்ப ராகம்

உலோகம்                           -         தங்கம்

ஆடை                                 -         மஞ்சள், சந்தன நிறம்

பஞ்சபூதம்                           -         காற்று

மலர்                                   -         முல்லை, மஞ்சள் செவ்வந்தி, மஞ்சள் அரளி

வாகனம்                             -         யானை

மனைவி                             -         தாரா

நைவேத்தியம்                    -         தயிர் அன்னம்

அதிதேவதை                      -         இந்திரன், பிரம்மா

திசை                                  -         வடக்கு

நட்சத்திரம்                                        :    புனர்பூசம், விசாகம், புரட்டாதி

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் :    மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்.

உச்ச பலனை பெறும் ராசிகள்           :    மிதுனம், சிம்மம், துலாம், தனுசு.

2023 - 2024 குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்

இந்த ஆண்டு எதிர்வரும் 22.04.2023 அன்று சனிக்கிழமை இரவு 11.27 மணிக்கு ரேவதி 4ஆம் பாதம் மீன ராசியிலிருந்து மேஷ ராசி அசுபதி 1ஆம் பாதத்துக்கு குரு பெயர்ச்சியாகிறார். 

கால புருச தத்துவப்படி, இதுவரை விரைய ஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான், இனி கால புருச தத்துவப்படி, முதல் வீட்டில் அமர்வதால் தங்கம் விலை சற்று குறையும். பல நாடுகளில் டொலர் மதிப்பு குறையும். வங்கிகளில் கடன் பெறுவதில் சில தளர்வுகள் உண்டாகும். அதன் மூலம் எளிதில் கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும். 

வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெறுவதும், வெளிநாட்டு தொழில் மூலம் அன்னிய செலாவணிகள் உயர்த்திக்கொள்வதும் உண்டாகும். 

வாயுவுக்கு உரிய கிரகம் என்பதால் மேக மூட்டம் காணப்படும். தேவைக்கேற்ப மழை பொழியும். நீர் நிலைகளில் நீரை தேக்கிக்கொள்ளும் அளவுக்கு மழை பெய்யும். சீதோஷ்ண நிலைகளில் மென்மையான சூழ்நிலை உருவாகும். 

நாட்டின் பொருளாதார வளத்தை பெருக்கிக்கொள்ள உலக வங்கியும், சர்வதேச வங்கிகளும் உதவி செய்து மேன்மை பெறும். தகுதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை மற்றும் தொழில் செய்துகொள்ள வாய்ப்புகளை பெறுவார்கள். 

கடல் மீன்களின் பெருக்கத்தால் பொருளாதாரம் வளம் பெறும். உயர்கல்விகளில் சில புதிய மாற்றம் உண்டாகும். விவசாய நிலங்களுக்கும் சில சலுகைகளை அரசு அறிவிக்கும். அரசியலில் புதிய கூட்டணி அமையும். உறுதியான அரசு அமையும் வகையில் செயற்பாடுகள் இருக்கும். 

வெளிநாட்டு பொருளாதார நிபணர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியும், ஏற்றுமதி - இறக்குமதி வாய்ப்புகளை பெற்று, நாட்டின் முன்னேற்றம் சிறக்கும். தங்கத்தை சேமித்து வைத்து, பொருளாதாரத்தை தக்கவைத்து அரசு செயற்படும்.

மேஷம் 

நிறைந்த மனம் கொண்டு எதையும் செயற்படுத்தும் மேஷ ராசி வாசகர்களே!

இதுவரை விரைய குருவாக இருந்த குரு, இனி 22.04.2023 முதல் ஜென்ம குருவாக ராசியில் அமர்வதும் ஐந்தாமிடம், ஏழாமிடம், ஒன்பதாமிட பார்வை பெறுவதும், உங்களின் ராசிக்கு சிறந்த நற்பலன்களை பெற்று தரும். 

கடந்த காலத்தில் விரைய குரு நிறைய புதிய செலவுகளை செய்ததுடன், அடிக்கடி எதிர்பாராத இழப்பு, கடன் சுமைகளிலிருந்து வந்தீர்கள். தீர்வு என்ற ஒன்று இருந்தாலும், உங்களின் முயற்சிகளால் பல தடவை முக்கிய வேலைகள் நடக்காமல் போய்விட்டது. இனி, அந்த கவலை வேண்டியதில்லை. 

வீட்டுக் கடன்களும், தொழில் கடன்களும், விவசாய கடன்களும் நீங்கள் முயற்சி எடுத்தால் நல்லபடியாக அமையும். குரு உங்களின் பாக்கியாதிபதி என்பதால் குரு பார்வை பாக்கிய ஸ்தானத்தில் அமைவது, சில காரியத் தடைகள் நீங்கி செயற்பட ஆரம்பிக்கும். 

முக்கிய காரியங்களில் கவனம் செலுத்தி, உடனே அவற்றை செயற்படுத்துவீர்கள். நீண்ட நாட்கள் தீராமல் இருந்த கடன் படிப்படியாக குறையும். 

வாழ்க்கையில் இதுவரை தொலைத்த விடயங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வீர்கள். அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மீண்டும் வீடு வந்து சேரும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் சிலருக்கு வேலை வாய்ப்பும் சிலருக்கு புதிய தொழில் வாய்ப்பும் அமையும். 

குடும்பத்திலிருந்த சச்சரவு நீங்கி உறவுகள் பலப்படும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் வளம் பெறும்.

பரிகாரம்: 

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபம் ஏற்றி, உங்களின் வேண்டுதலை சொல்லிவர விரைவில் அனைத்தும் நிறைவேறும்.

ரிஷபம்

நேர்மையும் உண்மையும் நிலைக்க எண்ணும் ரிஷப ராசி வாசகர்களே!

இந்த குரு பெயர்ச்சியில், இதுவரை உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்த குரு விரைய ஸ்தானத்துக்கு வருகிறார். உங்களின் நான்கு, ஆறு மற்றும் எட்டாம் இடமான மறைவு ஸ்தானங்களை பார்வையிடுவது, உங்களின் தொழில் மற்றும் உத்தியோகத்தில் இடமாற்றம், பெயர்மாற்றம் ஏதாவது ஒரு வழியில் சிரமத்தில் இருக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கும். 

கடல் கடந்த வாணிபம் செய்து வருபவர்களுக்கு பொருள் குறித்த நேரத்தில் சேர்ந்தாலும், அதற்குரிய வருமானம் தடைப்பட்டு, தாமதமாக கிடைக்கும். 

வங்கிகளின் மூலம் கடன் பெறுவது, அதன் மூலம் சில பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது போன்ற சந்தர்ப்பங்கள் உண்டாகும். பொதுவாக குரு மறைவு ஸ்தானங்களை பார்ப்பது, உங்களின் பிறந்த ஜாதகத்தில் குரு மறைவு பெற்றிருப்பவர்களுக்கு எதிர்பாராத தன லாபத்தை கொடுக்கும். 

லொத்தரில் சிலருக்கு அதிர்ஷ்டம் கூட ஏற்படும். எதற்கும் ஜாதகத்தை சரிபார்த்துக்கொள்வது நல்லது. உங்களின் ராசிக்கு பரிகாரம் செய்துகொள்வதும் நன்மை தரும். 

சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் சிலருக்கு கடமை செய்ய முடியாமல் போகலாம். படிப்படியாக உங்களின் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். 

அடுத்தவர்களுக்கு கடன் வாங்கித் தருவதை தவிர்ப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்கள் பணிபுரியும் ஆட்களை கண்காணித்து வருவது நல்லது. உடன் இருக்கும் சிலர் மூலம் உங்களுக்கு பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் மஞ்சள் பட்டுத் துணி நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமும் ஏற்றி வழிபட்டு வர, உங்களின் வாழ்வு செழிக்கும்.

மிதுனம்

வாழ்வை வளமாக்கிக்கொள்வதை விரும்பும் மிதுன ராசி வாசகர்களே!

குரு தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்துக்கு 22.04.2023 முதல் வருகிறார். இதுவரை பல்வேறு காரியங்களில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் மறைந்து நன்மை பெறுவீர்கள். 

தனித்துவமான உங்களின் செயற்பாடுகளில் இருந்து வந்த சில தயக்கங்கள் இனி மறைந்து, வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். தொழிலாக இருந்தாலும், உத்தியோகமாக இருந்தாலும் மனநிறைவுகளின்றி இருந்து வந்த நிலை மாறி, நன்மைகளை பெறுவீர்கள். 

வெளிநாடு சென்று வருவதில் இருந்த சிக்கல்களில் இருந்த தடைகள் நீங்கும்.  எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களின் வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கி வளம் பெறுவீர்கள். 

முதலீடுகள் இல்லாமல் தொழில் செய்து வருபவருக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். நீண்ட நாட்கள் புத்திர பாக்கியமின்றி இருந்தவருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 

குல தெய்வ வழிபாடு மூலம் உங்கள் வேண்டுதல்கள் இனி நிறைவேறும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவருக்கு வேலை கிடைக்கும். கூட்டுத் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 

புதிய பதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையப்பெறும். தங்க நகைகளை புதுப்பித்தல், புதிதாக வாங்குதல், அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டுதல் போன்ற செயல்கள் நன்மைகளை தரும். 

திருமணம் தாமதமானவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். புதிய தொழிலில் நல்ல தொழிலாளர்கள் கிடைத்து, அதன் மூலம் வருமானத்தை பெருக்கிக்கொள்வீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் காலை 6 - 7 மணிக்கு விநாயகர் வழிபாடும், நவகிரக குரு வழிபாடும் செய்துவர, பொருளாதாரத்தில் உச்சம் பெறுவீர்கள்.

கடகம் 

வளமான வாழ்வை தேடி அமைத்துக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!

இந்த குரு பெயர்ச்சி வரும் 22.04.2023 முதல் தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தன ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை! உங்களின் ராசியில் குரு உச்சம் பெறுவதால் குரு பார்க்குமிடம் சிறப்பு. 

உங்களின் பொருளாதார நிலையில் நல்ல வளம் கிடைக்கும். குடும்ப தேவைகளுக்கு பண வரவு கிட்டும். ஏற்கனவே உங்களின் ராசிக்கு அட்டம சனி தாக்கம் இருப்பதால், யாருக்கும் பிணையமிடுவதையும், கடன் பெற்றுத் தருவதையும் தவிர்த்துவிடுவது நல்லது. வாங்கிக் கொடுத்து கஷ்டப்படுவதை விட, கொடுக்காமல் அவரின் பகையை அடைவது நல்லது. 

வரவுக்குள் செலவு செய்யும் திட்டத்தை வகுத்துக்கொள்வதும், தகுதிக்கு மேல் முதலீடு செய்து, கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்து கஷ்டப்படுவதையும் தவிர்த்துவிட்டு, சிறியதாகவே இருந்தாலும், இருக்கும் தொழிலில் முன்னேற என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து செயற்படுவதும் உங்களின் நற்பலன்களுக்கு வழிவகுக்கும். 

உங்களிடம் கடன் வாங்கிச் சென்றவர் தாமதமாக தருவதும், நீங்கள் வாங்கிய இடத்தில் உங்களுக்கு நெருக்கடியும் உருவாகும் என்பதால் சிறுக கட்டிப் பெருக வாழ்வது நல்லது. 

உடன் பிறந்தவர்களின் மூலம் எந்த பயனும் இருக்காது. தாயார் வழி சொத்து சிலருக்கு முடியும் தருவாயில் சில தடங்கல் வந்து தாமதமாகும். 

அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டாலும், உங்களின் போட்டியாளர்களால் சில மன உலைச்சலுக்குள்ளாக வேண்டியிருக்கும்.  

ஆடம்பர பொருட்கள் மீது மோகம் உண்டாகும். இதனால் சிலர் புதிய கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். புத்திரர்களின் மூலம் சிலருக்கு வருமானம் கிடைக்கும். உறுதியுடன் எதையும் செய்து வந்தால், உங்களின் வாழ்வில் செழிக்கலாம்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் வைரவருக்கு மஞ்சள் பட்டுத் துணி கட்டி, மூன்று நெய் தீபமிட்டு வேண்டிக்கொண்டுவர, உங்களின் சகல காரியமும் அனுகூலமாக அமையும்.

சிம்மம் 

காலத்துக்கு தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்ளும் சிம்ம ராசி வாசகர்களே!

இந்த குரு பெயர்ச்சி வரும் 22.04.2023 முதல் உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, ராசியை பார்ப்பதும், உங்களின் முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதும், அற்புதமான பலன்களை பெற்றுத் தரும். 

எதையும் எதிர்பார்த்து செய்யாமல் கடமையை செய்து வந்தாலே, பலன் உங்களை தேடி வரும். இதுவரை பல முயற்சிகள் செய்தும் எந்த பலனையும் எட்டாமல் இருந்து வந்த நிலை மாறி, உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். 

குலம் காக்கும் தெய்வங்களை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு குல தெய்வம் தேடி வரும். 

தொழிலிலும், உத்தியோகத்திலும் பல தடைகளை சந்தித்து வந்ததிலிருந்து விடுதலை பெற்று வளம் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மூலம் வளர்ச்சியை அடைவீர்கள். 

கணவன் - மனைவி கருத்து வேறுபாடு மறையும். வெளிநாடு செல்ல பல தடைகள் மறைந்து வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

புத்திரருக்கு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். 

புதிய திட்டங்களை செயற்படுத்தி வெற்றி காண்பீர்கள். பல காரியங்களில் தயக்கம் காட்டி வந்த நிலை மாறி, மீண்டும் துணிச்சலுடன் செயற்படுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்களின் நடைபாதையை சரி செய்து, உறுதியான நல்ல வழியை தேடிச் சென்று பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். 

எந்த பொறுப்பை கொடுத்தாலும், அதில் முழு ஈடுபாடு கொண்டு செயற்பட்டு நற்பலன் அடைவீர்கள். கடன் சுமைகளிலிருந்து முழுமையாக விடுதலை பெற்று, நன்மை அடைவீர்கள். சேமிப்பை அதிகரிக்கச் செய்வீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை, மாலை நவகிரக குருவுக்கு அணிவித்து, ஐந்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வர, சகல காரியங்களும் சித்திக்கும்.

கன்னி

கனிவான பேச்சால் கவலையை மறக்கச் செய்யும் கன்னி ராசி வாசகர்களே!

இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு, இனி வரும் 22.04.2023 முதல் உங்களின் தன ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் விரைய ஸ்தானத்தையும் பார்ப்பது நல்ல பலனை பெற்றுத் தரும். 

உங்களின் ராசிக்கு பாதாகாதிபதியான குரு எட்டாமிடத்தில் மறைவு பெறுவது நல்ல பலனைத் தரும். அத்துடன் அட்டம குரு பார்வை விரைய ஸ்தானத்தில் அமைவது சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை தரும். எதிர்பாராத பண வரவு கிடைக்கப் பெறுவீர்கள். 

காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் திறமையை கொள்வீர்கள். இதுவரை வீடு கட்ட எண்ணி வந்த நீங்கள், இனி அதற்கான பணிகளை சிறப்பாக செய்வீர்கள்.

உங்களின் தேவைகளுக்கு பணவரவு இருக்கும். எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்படும் நீங்கள், உங்களின் நண்பரின் உறுதுணையால் நினைத்த காரியத்தை செயற்படுத்துவீர்கள். 

பொருளாதாரத்தில் வளம் பெற என்ன தேவையோ, அதனை அடையும் முயற்சி நன்மையை தரும். சிறு பாதிப்பைக் கூட தாங்கிக் கொள்ளமாட்டீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 

உறவு, நண்பர்களாக இருந்தாலும், தங்க நகையை கொடுப்பதையும், அவர்களிடம் நகை வாங்கிச் செல்வதையும் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை தரும். 

அறிவியல்பூர்வமான சில செயற்பாடுகள் மூலம் நற்பலன் கிடைக்கும். அவசரத்தில் எதையும் செய்யாமல் நிதானம், பொறுமையுடன் செய்தால் எதிலும் வெற்றியை பெறலாம். 

உங்களின் சொந்த காரியங்களுக்கு பிறர் உதவியை நாடாமல், நீங்களே செய்துகொள்வது நல்லது. 

கலைஞர்கள் வாழ்க்கையில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். நல்ல வாழ்க்கை சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வீர்கள். உரிய நேரத்தில் உங்களின் செயற்பாடுகள் நல்ல பலனைத் தரும். வெளிநாட்டுப் பயணம் சிலருக்கு உறுதியாகும்.

பரிகாரம்:

வியாழன் அன்று ராகு காலத்தில் அல்லது காலை 6 - 7 மணிக்கு நவகிரக குருவுக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள, சகல வித காரியங்களும் நன்மையையும் வெற்றியையும் தரும்.

துலாம் 

துரிதமான எந்த வேலையும் செய்து முடிக்கும் துலாம் ராசி வாசகர்களே!

இந்த குரு பெயர்ச்சியில் உங்களின் ராசியை குரு பார்ப்பதும், முன்பு மறைவு ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் பார்த்ததால் பல விடயங்களில் சில சிரமங்களை அடைந்து வந்தீர்கள். இனி, அதிலிருந்து விடுபடுகிறீர்கள். 

முயற்சி ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் குரு பார்ப்பது, உங்களின் தடையை முறியடித்து வெற்றி காண உதவும். சுமுகமாக எதையும் செய்து முடித்துவிடுவீர்கள். உங்களின் பொறுப்பும், தைரியமும் காரிய சித்தி பெறும். நற்பலன் கிட்டும். 

கலைத்துறையினருக்கு தடைப்பட்ட காரியம் நல்ல படியாக வளர்ச்சி பெறும். முக்கிய காரியங்களை செயற்படுத்தும் முன்பு, அதன் நன்மை - தீமைகளை ஆராய்ந்து செயற்படுவீர்கள். 

குறுகிய காலத்தில் உங்களுக்கு தந்த பணியினை செய்து முடிப்பீர்கள். தானும், தன்னை சார்ந்தவர்களும் எல்லா விடயத்திலும் சரியாக இருக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள்.

நிலையான திட்டங்களை செயற்படுத்தி பயன் பெறுவீர்கள். நண்பர்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து, உங்களுடன் இணைந்து செயற்படுவார்கள். தொழில் செய்து வருபவருக்கு தொழிலில் முன்னேற்றமும், பொருளாதார வளமும் கிடைக்கப் பெறுவீர்கள். 

சோதனைகளை சாதனையாக கருதி மேலும் வெற்றி பெறுவீர்கள். முயற்சிகளுக்கு இருந்து வந்த தடை நீங்கி தைரியமாக செயற்படுவீர்கள். 

பெண்களுக்கு திருமண வாய்ப்பு அமையும். சட்டம், ஒழுங்கு பணிகளில் சீரான வளர்ச்சியை பெற்று சிலர் பதவி உயர்வு, நல்மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். 

அரசியலில் முன்வகித்து வந்த பதவியை மீண்டும் பெற்று, உங்களின் மதிப்பை தக்க வைத்துக்கொள்வீர்கள். புதிய திட்டங்களுக்கு உரிய ஆலோசனைகளை பெற்று விரைவில் அதனை செயற்படுத்துவீர்கள். மருத்துவத்துறையில் இருப்பவருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் பொடி, தூவி குரு காயத்ரி மந்திரம் சொல்லிவர அனைத்து காரியங்களிலும் வெற்றியை தரும்.

விருச்சிகம் 

எதையும் தயக்கமின்றி செயல்படுத்தி நன்மை பெறும் விருச்சிக ராசி வாசகர்களே!

இதுவரை குரு உங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்து வந்தார். இனி வரும் 22.04.2023 முதல் குரு மேஷத்துக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் உங்களின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் சில தாமதம் உண்டாகலாம். 

உரிய காலத்தில் செயற்படுவதில் தடைகள் உண்டானாலும், உங்களின் ராசிநாதனின் தயவால் எதிர்பார்த்த பலன்களை வெல்லும் வல்லமை பெறுவீர்கள். இருந்தாலும், உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி இருப்பதும், குரு பார்வை இல்லாமல் இருப்பதால் புதிய முயற்சிகளை கைவிடுவது நல்லது. 

புதிய தொழில் வாய்ப்புகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. உங்களின் சுய ஜாதகத்தில் பலம் அறிந்து செயற்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவருக்கு அடிக்கடி ஏதாவது தொல்லை வந்தாலும், அதனை எதிர்கொண்டு வெல்வீர்கள்.  

உங்களுக்கு வரும் துன்பத்தை நீக்கிவிட வழிவகுத்துக்கொள்வது நல்லது. முக்கிய விடயங்களில் உங்களின் கவனம் முழுவதையும் செலுத்தி, அதில் எந்தவித சிக்கலும் வராமல் பார்த்துக்கொள்வீர்கள். 

உங்களின் அருகில் இருப்பவரை எப்பொழுதும் கண்காணித்து வருவது நல்லது. வெளியிலிருந்து உங்களுக்கு தொல்லை இல்லை. உங்களை சுற்றியே இருப்பதால் சற்று கவனமுடன் செயற்படுவது நல்லது. 

மனதுக்கு பிடித்த காரியத்தை தடை போடாமல் துணிந்து செயற்படுங்கள். உங்களின் பக்கம் வெற்றி நிச்சயம். உண்மை இருக்கும் பக்கம் எல்லாம் சிறப்பாக இருக்கும். 

புதிய தொழில்களில் முதலீடு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. நீங்கள் குறித்த காலத்தில் செயற்படுவதன் மூலம் காரியத்தில் கூடுதல் பலன்களை பெறுவீர்கள். தொழிலாளர்களின் கோரிக்கை, வெற்றியை பெற்றுத் தரும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை காலை 6 - 7 மணிக்குள் உங்களின் குல தெய்வத்துக்கு விளக்கேற்றி வழிபட்டுவர, உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

தனுசு

துணிச்சலுடன் எதையும் சாதித்துக் காட்டி செயற்படும் தனுசு ராசி வாசகர்களே!

இந்த குரு பெயர்ச்சிக்கு முன்பு வரை உங்களின் மறைவு ஸ்தானங்களை பார்த்து வந்த குரு இனிவரும் 22.04.2023 அன்று இரவு முதல் உங்களின் ராசியை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் யோகாதிபதி வீட்டையும், லாப ஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் விரைவில் செயற்படுத்த தொடங்குவீர்கள். சரியாக பாதையை தெரிவு செய்து உங்களின் எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வீர்கள். 

குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு மறையும். எதிர்ப்புகள் குறையும். இனி, உங்களின் வாழ்க்கையில் சுபீட்சமான சூழ்நிலை உருவாகும். 

கடந்த கால கடன் பிரச்சினைகள், வழக்குகள் எல்லாம் விரைவில் தீர்ந்து, விடுதலை பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிகப்படியான உங்களின் பணிச் சுமை, குறைந்து நன்மை அடைவீர்கள். 

தங்க நகைகளை அடகிலிருந்து மீட்டு நல்ல நிலைக்கு வருவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைக்கும். 

படித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வரவுக்குள் செலவுகளை சுருக்கிக்கொள்வீர்கள். 

புத்திரர்களின் படிப்பு விடயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாவதுடன், நல்ல பாடசாலையில் இடம் கிடைத்து வளம் பெறுவார்கள். சொந்த வீடு வாய்க்கப்பெறும்.  விரைவில் உங்களின் கனவு நிறைவேறும். முயற்சிக்கு நற்பலன் உண்டாகும். 

வங்கி மூலம் சிலர் கடன் பெறுவதும், அதன் மூலம் தொழிலை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் அமையும். பொருளாதாரம் சிறக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் மஞ்சள் பொடி தூவி குருவுக்கு (நவகிரக) ஐந்து நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள, உங்களின் அனைத்து விருப்பங்களும் முழுமையாக நிறைவேறும்.

மகரம் 

விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு விளங்கும் மகர ராசி வாசகர்களே!

முன்பு வரை உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து உங்களின் லாப ஸ்தானத்தை பார்வையிட்டு வந்த குரு, இனி வரும் 22.04.2023  இரவு முதல் சுக ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார். 

மகர ராசிக்கு குரு பாவி என்பதால் மறைந்தாலும் பலன் தருவார்; பார்த்தாலும் பலன் தருவார். இதனால் குரு மறைவிடங்களை பார்ப்பது, உங்களின் நீண்ட கால வழக்குகளில் விடுதலை கிட்டச் செய்யும். 

தொழில் இல்லாமல் இருப்பவருக்கு தொழில் அமையும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவருக்கு விரைவில் அனுமதி கிடைக்க பெறுவீர்கள். நடப்பு காலத்தை அனுசரித்தே எல்லா வேலைகளையும் செய்து வருவீர்கள். தொழிலாளர்களின் வேலைப்பளுவுக்கு விரைவில் தீர்வு உண்டாகும். 

மருத்துவத்துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையில் உங்களின் திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள். சுதந்திரமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். இதுவரை குருவால் எந்த பலனும் அடையாமல் இருந்தவர்களுக்கு இனி பல்வேறு நற்செய்திகள் உண்டாகும். 

குறைந்த நேரத்தில் உங்களின் பணியை விரைவில் முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு திடீர் பதவி உயர்வும், முக்கிய பொறுப்புகளும் உண்டாகும். 

மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குல தெய்வ வழிபாடுகளை செய்வதன் மூலம் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் வளர்ச்சியை பெறுவீர்கள். 

வெளிநாட்டு தொழில் மூலம் சிலர் வருமானத்தை பெருக்கிக்கொள்வீர்கள். பெண்களுக்கு விரைவில் திருமணம் நிகழும். உங்களின் எதிர்ப்பு குறைந்து சரியான வழியை தேடிச் சென்று, தொடர்ந்து முன்னேற்றம் பெறுவீர்கள். அத்தோடு வாய்ப்புகளும் அமையப் பெறுவீர்கள்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமேற்றி, மூன்று முறை நவகிரகத்தை சுற்றி வர, உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றியை தரும். பொருளாதாரம் பெருகும்.

கும்பம் 

விரும்பியதை அடைய தீரமுடன் செயற்படும் கும்ப ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு வரும் 22.04.2023 முதல் குரு உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து, ஏழாமிடம், ஒன்பதாமிடம், லாப ஸ்தானத்தை பார்வையிடுவது உங்களின் வாழ்க்கையில் மேன்மையை தரும். 

வெற்றியடைவதற்கான சில உத்திகளை கையாண்டு சாதிப்பீர்கள். முக்கிய விடயங்களில் உங்களின் செயற்பாடுகள் சிறப்பாக அமைந்து வரவேற்பு பெறுவீர்கள். நல்ல காரியத்தை தள்ளிப் போடாமல் சீக்கிரமாக செய்து வளம் பெறுவீர்கள். 

இதுவரையிலும் பல்வேறு காரணங்களால், தடைகளால் தள்ளிப்போன திருமணம் இனி கைகூடும். 

சில காலம் சென்ற பின்பு உங்களின் கல்வித்திறனுக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். சொந்த தொழில் செய்து வருபவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

புது உத்தியுடன் செயற்பட்டு வெற்றி கண்டு முன்னேற்றம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு சிறந்த வரவேற்பும், புதிய வாய்ப்புகளும் வந்து மனமகிழ்ச்சியுடன் இருந்து வருவீர்கள். 

அரசியலில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்லவர்களின் சேர்க்கையும், நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த தொடர்பும் உங்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையும். 

மாணவர்களுக்கு கல்வியில் வளர்ச்சியும், விரும்பிய பாடத்தில் அமைதியும் கிடைத்து வளம் பெறுவீர்கள். 

விவசாய தொழிலில் சில நேரம் வருமானம் குறையும். விலை வீழ்ச்சி அமையும். தினமும் நல்ல நண்பர்களின் மூலம் புதிய தகவல்களை பரிமாறிக்கொண்டு அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்திக்கொள்வீர்கள். ராகு சம்பந்தமான காரியம் சில காலம் தாமதமாக நடக்கும். பணப்புழக்கம் இருக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபம் ஏற்றி, மிளகு கலந்த உணவுகளை நைவேத்தியம் வைத்து வேண்டிக்கொள்ள, எல்லா காரியங்களும் வெற்றியை தரும்.

மீனம்

மென்மையாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் மீன ராசி வாசகர்களே!

உங்களின் ராசிக்கு வரும் 22.04.2023 முதல் தன ஸ்தானத்தில் குரு அமர்ந்து தொழிலிலும், உத்தியோகத்திலும் பொருளாதாரம் மற்றும் வியாபார வளத்தை பெறச் செய்வார். 

நீண்ட நாட்கள் தொய்வாக இருந்து வந்த காரியம் மேலும் சுறுசுறுப்பாக இயங்கும் சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டுத் தொழிலுக்காக எடுக்கின்ற முயற்சிகள் நல்ல பலனை பெற்றுத் தரும். 

உறுதியான செயற்பாடுகளை செய்ய தொடங்கும் போது சுய முயற்சி அவசியம் இருந்தால் மட்டும் நன்மை அடைய முடியும். பிறரின் ஆலோசனை உங்களின் மனவலிமையை பலவீனப்படுத்தும். 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு, உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். முதலீடு இல்லாத தொழிலில்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல்வேறு தொழில்களை செய்து வந்தாலும், பல நாட்கள் செய்துவந்த தொழிலில் முன்னேற்றமும், பொருளாதார வளமும் பெறுவீர்கள். 

சரியான நேரத்தில் ஒரு காரியத்தை செயற்படுத்தி வெற்றி காண்பீர்கள். இசைக் கலைஞர்களின் எதிர்கால வளம், சிறப்பாக அமைய பெறுவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, உங்களுக்கு பெருமையை தேடித்தரும். 

எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்படுவீர்கள். பெண்களுக்கு உடல் ரீதியான சில அசௌகரியங்கள் ஏற்படும். யாரிடமும் ஏமாறாமல் இருக்க, உங்களின் செயற்பாடுகளில் அடிக்கடி கவனம் செலுத்தி வருவது நல்லது. ஆன்மிக தொண்டுகளும், தெய்வ வழிபாடும் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். பண வரவு நிறைவாக இருக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடும், தேங்காயில் தேங்காய் எண்ணெய் தீபமும் ஏற்றி வணங்கி வர, உங்களின் எண்ணம் போல் வாழ்வு அமையும். பொருளாதார வளம் உண்டாகும்.

(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண முடக்கத்தை நீக்கும் முடிச்சு பரிகாரம்

2023-09-28 20:55:01
news-image

பண முடக்கத்தை நீக்கும் முடிச்சு பரிகாரம்

2023-09-28 15:01:12
news-image

விநாயகரின் ஆறுபடை வீடு

2023-09-27 15:34:39
news-image

உங்களது திட்டத்தை வெற்றி பெற வைக்கும்...

2023-09-26 17:16:19
news-image

குலதெய்வத்தின் அருளை முறையாக பெறுவது எப்படி..?

2023-09-25 12:55:48
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய பரிகாரங்கள்...!

2023-09-23 16:20:50
news-image

பண வரவில் ஏற்பட்ட திடீர் தடையை...

2023-09-22 13:03:41
news-image

அளவில்லா தன வரவை விரும்புபவர்கள் மேற்கொள்ள...

2023-09-21 13:47:46
news-image

உங்களுடைய தொழிலின் மாய தடை நீங்கி,...

2023-09-19 17:21:36
news-image

யார் எப்போது மொட்டை அடித்துக் கொள்ளலாம்...?

2023-09-18 14:22:04
news-image

சேமிப்பிற்கு வழிவகுக்கும் மதுவனேஸ்வரர்

2023-09-16 20:22:53
news-image

செல்வ வளத்தை உயர்த்தும் எளிய வழிமுறை...!

2023-09-14 21:04:59