கடந்த ஒரு தசாப்த காலமாக எம்மில் பெரும்பாலானோர் 'அக்ஷய திருதியை' தினத்தன்று குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கவேண்டும் என மனதளவில் தயார்ப்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மெத்த பணக்காரர்கள் முதல் நாளாந்த கூலி பெறும் தொழிலாளர்கள் வரை இந்த நகை வாங்கும் மோகம்... அதிலும், அக்ஷய திருதியை அன்று நகை வாங்கும் மோகம் தீவிரமாக பரவியிருக்கிறது. இது ஆரோக்கியமானதுதானா, இதனை தொடரலாமா அல்லது அக்ஷய திருதியை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறதா என்பதை தொடர்ந்து காண்போம்.
இந்த ஆண்டுக்கான அக்ஷய திருதியை ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று வருகிறது. அன்று சனிக்கிழமை என்பதாலும், சனியன்று தங்கம் வாங்கலாமா, கூடாதா எனக் கேட்டால், சில நட்சத்திரக்காரர்களை தவிர்த்து ஏனையோர் வாங்கலாம் என ஆன்மிகப் பெரியோர் சொல்கிறார்கள்.
அக்ஷய திருதியை
'அக்ஷய திருதியை' என்றால் என்ன? அந்த நாளின் தனித்துவம் என்ன? அன்று தங்கம் வாங்கினால் எம்முடன் லட்சுமி தேவி தொடர்ந்து வாசம் செய்வாளா? அதிர்ஷ்டங்கள் வருமா? இவற்றை பற்றியும் காண்போம்.
'அக்ஷயா' எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் 'எப்போதும் குறையாதது', 'அள்ள அள்ளக் குறையாதது' எனப் பொருள்படும். வேறு சிலர் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு அதிக பலன்கள் உண்டு என்கிறார்கள்.
மன்னர் ஒருவருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திருதியை. அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் 'அக்ஷய பாத்திரம்' போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திருதியை தினத்தை 'அக்ஷய திருதியை' என்று சொல்லும் வழக்கம் வந்தது.
இந்து மதத்தை பொறுத்தவரையில் 'வளருதல்' அல்லது 'என்றுமே குறையாதது' எனும் பொருளே 'அக்ஷயம்' என்றாகிறது. பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அக்ஷய திருதியை அன்றுதான்.
அக்ஷய திருதியை தினத்தன்று தான் வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகர் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
மேலும், இந்நாள் பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்துக்கான தெய்வமுமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
கிருத யுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அக்ஷயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார். இந்த அற்புதம் நடந்ததும் அக்ஷய திருதியை அன்றுதான்.
கண்ணபிரான் அக்ஷய திருதியை பற்றி தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது.
அந்த கதையில், தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன் வருடந்தோறும் அக்ஷய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறுபிறவியில் அரசனாக பிறந்தான். அப்போதும் அக்ஷய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் செய்து, மென்மேலும் சிறப்பு பெற்றான். அதனால் அடுத்த பிறவியில் ஆளும் அரசனாக பிறக்கவேண்டும் என்றால், இந்த பிறவியில் அக்ஷய திருதியை நாளை உள்ளன்புடன், பக்தியுணர்வுடன் கடைபிடிக்க வேண்டும்.
மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அக்ஷய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.
இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.
இந்த நாளில் தயிர்சாதம் செய்து, தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்களை தானமாக அளித்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள், அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்குவது ஏன்?
அக்ஷய திருதியை அன்று செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் ஏன் வந்தது?
அந்த நாளில் லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை. அந்த வகையில், லட்சுமி குடியிருக்கும் பொருட்களான மஞ்சள், கைக்குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி, கல் உப்பு போன்றவற்றையும் வாங்கலாம்.
ஆனால், அக்ஷய திருதியை நாளில் லட்சுமிகரமான, மங்களகரமான பொருட்களை வாங்குவது தான் அக்ஷய திருதியையின் பொருள். வேறு சிலர், லட்சுமிக்கு பொருத்தமான அக்ஷய திருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என கூறுவதுமுண்டு.
ஆன்மிக சான்றோர்கள் ‘அக்ஷய திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்களே’ தவிர தற்காலங்களில் நடைபெறுவதை போல தங்க நகைகளை அவசியம் வாங்கவேண்டும் என்று குறிப்பிடவேயில்லை.
அக்ஷய திருதியையில் நாம் செய்ய வேண்டியவை...
இந்நாள் வெள்ளி உலோகத்துக்குரியது. இந்நன்னாளில் நம் கஷ்டங்கள் உடனடியாக விலக, கிரக தோஷங்கள் விலக, பூச்சி, பறவைகள், பசு, எறும்பு மற்றும் நாய்களுக்கு உணவிடுவதே சிறந்த பரிகாரமாகும்.
மேலும், முடிந்தவர்கள் வெள்ளி பாத்திரத்தில் வயதானவர்களுக்கு நீர், மோர் வழங்கலாம். வெள்ளி பாத்திரத்தில் தயிர்சாதம் வைத்து, வழங்குவதும் மிக சிறந்த பரிகாரமாகும்.
சாளக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத் திருவுருவங்களுக்கு பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட, உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும். தயிர்சாதம் ஏழைகளுக்குத் தருவது, எம்முடைய தலைமுறைகளிலிருந்து பதினொரு தலைமுறைக்கு குறைவில்லா அன்னத்தை வழங்கும் என ஐதீகமும் உண்டு.
(தொகுப்பு - சுபயோக தாசன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM