சிக்கலான கடன் மறுசீரமைப்பு செயன்முறையை பல்தரப்பு ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முடிவுறுத்த எதிர்பார்ப்பு - ஐ.நா பொருளாதார, சமூகப்பேரவை கூட்டத் தொடரில் நிதியமைச்சர் உரை

Published By: Nanthini

19 Apr, 2023 | 04:36 PM
image

(நா.தனுஜா)

'கடன் மறுசீரமைப்பு' என்பது நாடொன்றின் அரசாங்கம், சர்வதேச கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு மூன்றாம் தரப்பினரை உள்ளடக்கிய மிகவும் சிக்கலான செயன்முறையாகும். இருப்பினும், உத்தியோகபூர்வ மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இச்செயன்முறையை வெற்றிகரமாக முடிவுறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் 2023ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்திக்கான நிதியிடல் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (17) நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமானது. 

வியாழக்கிழமை (20) வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடலில் 'கடன் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தல்' தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் எடுத்துரைத்த விடயங்கள் வருமாறு:  

'கடன் மறுசீரமைப்பு' என்பது நாடொன்றின் அரசாங்கம், சர்வதேச கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு மூன்றாம் தரப்பினரை உள்ளடக்கிய மிகவும் சிக்கலான செயன்முறையாகும்.

அந்த வகையில், தற்போது இலங்கையானது பொருளாதார வளர்ச்சியிலும் வறுமைத்தூண்டலிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கடன்களின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறை ஆகிய இரு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. 

இலங்கையை பொறுத்தமட்டில் கடந்த 5 வருட காலத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு என்பன மந்தகரமான நிலையிலேயே காணப்படுகின்றன.

அதேபோன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வர்த்தக செயற்பாடுகள், வலுவற்ற முதலீடுகள், தளர்வான நாணயக்கொள்கை, வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் அதன் விளைவாக அதிகரித்த கடன்சுமை உள்ளிட்ட காரணிகள் வெளியக சமநிலை சீர்குலைவதற்கு வழிகோலியுள்ளன.

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள், வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன உயர்வான வரவு / செலவு திட்டப் பற்றாக்குறைக்கும் நிலையற்ற கடன்களின் சடுதியான அதிகரிப்புக்கும் வழிவகுத்தன. 

அத்தோடு கடன் தரப்படுத்தலில் இலங்கை கீழிறக்கப்பட்டதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச நிதியியல் சந்தையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை இலங்கை இழந்தது. அவற்றின் விளைவாக வெளிநாட்டுக் கையிருப்பில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி கடந்த 2022இன் இரண்டாம் காலாண்டில் வெகுவாக உணரப்பட்டது.

இவற்றுக்கு மத்தியில் வெளிநாட்டுக் கடன்களின் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை அறிவித்ததுடன், அதனை தொடர்ந்து கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு ஆதரவளிக்கக்கூடிய சட்ட மற்றும் நிதியியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது விசேட கடன் ஒருங்கிணைப்புக் குழுவுடன் கூடிய செயற்றிட்டத்தின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உத்தியோகபூர்வ மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிவுறுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

அதன்படி, தற்போது கடன் மறுசீரமைப்பு வாய்ப்புக்கள் குறித்து நாம் எமது இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மிக மோசமான கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற மீள்செலுத்துகை தொடர்பான அச்சம் உயர்வாக காணப்படுகின்ற நாடுகளுக்குக் கூட, முதலில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தாமல் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்கியிருக்கிறது. 

எது எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் 54 நாடுகள் பாரிய கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. இருப்பினும், அவ்வனைத்து நாடுகளும் ஒரே வழிமுறையின் ஊடாக தீர்வினை அடைய முடியாது என்று தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நிர்மாணத் தொழிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய...

2023-12-10 15:09:41
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07