(நெவில் அன்தனி)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை மிகப் பெரிய வெற்றியை ஈட்டியபோதிலும் வெற்றி முக்கியமே தவிர வெற்றியின் அளவு எவ்வளவு என்பதல்ல என இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.
இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்ரங்கில் நடைபெற்ற வரலாற்று முக்கியம்வாய்ந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பின்னர் இந்தக் கருத்தை திமுத் கருணாரட்ன வெளியிட்டார்.
டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் இன்னிங்ஸால் ஈட்டப்பட்ட 12ஆவது மிகப் பெரிய வெற்றி இதுவாகும். அத்துடன் இலங்கையின் மிகப் பெரிய வெற்றி இதுவாகும். ஸிம்பாப்வேயை புலாவாயோவில் 2004இல் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்களால் வெற்றிகொண்டமையே இலங்கையின் முன்னைய மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.
'இது எமது மிகப் பெரிய டெஸ்ட் வெற்றி என்பதை நான் அறிவேன். என்னைப் பொறுத்த மட்டில் வெற்றிபெறுவதுதான் முக்கியம். அது எவ்வளவு பெரிய வெற்றி என்பதல்ல' என திமுத் கருணாரட்ன குறிப்பிட்டார்.
'டெஸ்ட் கிரிக்கெட் வகைக்கு அயர்லாந்து புதியது. அவ்வணியினர் இந்த வடிவ கிரிக்கெட்டில் இன்னும் கற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். எதிர்காலத்தில் அவர்கள் ஒரு சிறந்த அணியாக வருவார்கள்' என்றார் திமுத் கருணாரட்ன.
இதேவேளை, 'நான் செய்ய முயற்சிப்பதெல்லாம் இயல்பாக இருக்கவேண்டும்' என கருதுவதாக ஆட்டநாயகன் ப்ரபாத் ஜயசூரிய தெரிவித்தார்.
அயர்லாந்துடனான போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்த ப்ரபாத் ஜயசூரிய, இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றிய ஐவரில் ஒருவராவார்.
திமுத் கருணாரட்ன (179), குசல் மெண்டிஸ் (140), தினேஷ் சந்திமால் (102 ஆ.இ.), சதீர சமரவிக்ரம (104 ஆ.இ.) ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். ஆனால், ப்ரபாத் ஜயசூரிய மாத்திரமே பந்துவீச்சில் அசத்தினார்.
தனது பந்துவீச்சு ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட ப்ரபாத் ஜயசூரிய, 'நான் செய்ய முயற்சிப்பதெல்லாம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன். சரியான இலக்குகளை நோக்கி துல்லியமாக பந்துவீச வேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கிறேன்.
மோசமாக பந்துவீசுவதை தவிர்த்து வருகிறேன். சரியான இலக்கை நோக்கி பந்துவீசுவதன் மூலம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நான் அழுத்தத்தைக் கொடுக்கிறேன். அப்படி பந்துவீசும்போது விக்கெட்கள் வந்துசேரும். காலி விளையாட்டரங்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது' என அவர் குறிப்பிட்டார்.
6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள ப்ரபாத் ஜயசூரிய இதுவரை 2 தடவைகள் 10 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ளதுடன் 43 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார். 5 தடவைகள் 5 விக்கெட் குவியல்களையும் அவர் பதிவுசெய்துள்ளார்.
இன்னும் 7 விக்கெட்களைக் கைப்பற்றினால் மிகக் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்களைப் பூர்த்திசெய்த இலங்கையர் என்ற சாதனைக்கு ப்ரபாத் ஜயசூரிய சொந்தக்காரராவார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 591 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது. அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களையும் பலோ ஒன்னில் 2ஆவது இன்னிங்ஸில் 168 ஓட்டங்களையும் பெற்றது.
அயர்லாந்துக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM