டு ப்ளெசிஸ், மெக்ஸ்வெலின் சவால்களை முறியடித்து பெங்களூரை வென்றது சென்னை

Published By: Digital Desk 5

18 Apr, 2023 | 12:18 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (17) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் பவ் டு ப்ளெசிஸ், க்ளென் மெக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி இணைப்பாட்டத்திற்கு மத்தியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடைசி ஓவரில் 8 ஓட்டங்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் இவ் வருடம் 3ஆவது வெற்றியைப் பதிவு செய்த 4 சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் நிலையில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய சுப்பர் ஸ்டார்களான விராத் கோஹ்லிக்கும் எம். எஸ். தோனிக்கும் இடையிலான போட்டி என வர்ணிக்கப்பட்ட இந்தப் போட்டியில் சிக்ஸ் மழை பொழியப்பட்டதுடன் அப் போட்டி ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிப்பதாக அமைந்தது.

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக குவிக்கப்பட்ட 33 சிக்ஸ்கள் என்ற சாதனை இந்தப் போட்டியில் சமப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் 2018இல் இதே இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் 2020இல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியிலும் மொத்தமாக 33 சிக்ஸ்கள் விலாசப்பட்டிருந்தன.

திங்கட்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் டெவன் கொன்வேயும் ஷிவம் டுபேயும் குவித்த அதிரடி அரைச் சதங்களின் உதவியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர் ருட்டுராஜ் கய்க்வாட் (3) குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் டெவன் கொன்வே 2 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்குபற்றி சென்னை சுப்பர் கிங்ஸை பலமான நிலையில் இட்டார்.

37 ஓட்டங்கைளப் பெற்ற அஜின்கியா ரஹானேயுடன் 2ஆவது விக்கெட்டில் 43 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்த டெவன் கொன்வே, தொடர்ந்து ஷிவம் டுபேயுடன் 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் மேலும் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

டெவன் கொன்வே 45 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 6 பவுண்டறிகளுடன் 83 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 27 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களையும் குவித்தனர்.

அம்பாட்டி ராயுடு (14), மொயீன் அலி (18 ஆ.இ.), ரவிந்த்ர ஜடேஜா (10) ஆகியோரும் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் 6 பேர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் அவர்களில் மொஹமத் சிராஜ் மாத்திரமே சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைக் (4 ஓவர்களில் 30 - 1 விக்.) கொண்டிருந்தார்.

227 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று 8 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

முதலாவது ஓவரில் விராத் கோஹ்லி 6 ஓட்டங்களுடனும் 2ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் மஹிபால் லொம்ரோர் ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆட்டம் கண்டது. (15 - 2 விக்.)

ஆனால், தென் ஆபிரிக்க - அவுஸ்திரேலியா ஜோடியினாரான அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் 61 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சவால் விடுத்தனர்.

பவ் டு ப்ளெசிஸ் 33 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைக் குவித்து மொயீன் அலியின் பந்துவீச்சில் களம் விட்டகன்றார்.

க்ளென் மெக்ஸ்வெல் 36 பந்துகளில் 8 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதுவே சென்னை சுப்பர் கிங்ஸுக்கு திருப்பு முனையாக இருந்தது.

தொடர்ந்து ஷாபாஸ் அஹ்மத் (12), தினேஷ் கார்த்திக் (28), சுயாஷ் பிரபுதேசாய் (19) ஆகிய மூவரும் தமது அணியின் வெற்றிக்காக முயற்சித்தபோதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் அவர்களது முயற்சி கைகூடவில்லை.

பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் மூவர் விளையாடியமை விசேட அம்சமாகும். றோயல் செலஞ்சர்ஸ் சார்பாக வனிந்து ஹசரங்க டி சில்வாவும் (2 ஓவர்களில் 21 - 1 விக்.), சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக மஹீஷ் தீக்ஷன (41 - 1 விக்.), மதீஷ பத்திரண ஆகியோரும் விளையாடினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35