பெண்களின் குரலாகும் 'குயில்'

Published By: Nanthini

17 Apr, 2023 | 08:05 PM
image

(மா. உஷாநந்தினி)

சித்திரை மாதத்தில் எங்கிருந்தோ நம் செவியை நாடி வருகிற 'குயில்' கூவும் ஒலியை உணர்கிறபோது, அதன் உருவத்தை காணும் முன்பே அந்த 'க்கூஉ......' சத்தம் நம் மனதை இலேசாக்கிவிடுகிறது.  

குயிலின் ஒலிக்கு மயங்காதவர்கள் யார்?

அந்த கரிய நிற பறவையை நாம் இசைக்கு, பாட்டுக்கு, இனிய குரலுக்கு அடையாளம் காட்டுகிறோம்... வியக்கிறோம்...!

விசேடமாக, இலக்கியப்பரப்பில் குரலுக்கு நயம் சேர்க்கும் 'குயில்' பெண்ணாக பாவிக்கப்படும்போது ரசங்கள் ததும்பி வழியும்.

இலக்கியங்களில் கூட பெண்ணுக்கான குறியீட்டுப் பொருளாக 'குயில்' சிறகடித்துப் பறந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, 'குயில்பாட்டு'.

பாரதியார் பெண்களை சிகரத்தில் ஏற்றி நிறுத்த விரும்பி, பிரயத்தனப்பட்டு படைத்த பெரும் பாடல் திரட்டு, இது.

குயிலின் குரலை பெண்களின் குரலாக்கி, கடைசியில் 'குயிலி' என்கிற பெண்ணாகவே உருமாற்றி, இன்றும் அந்த குயிலியின் மூலமாக பெண்களுக்குள் புது வேகத்தையும் கிளர்ச்சியையும் பாய்ச்சியவர் பாரதி.

ஒரு முறை ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது பாரதி, தனக்கு முன்னால், யார் எவரென தெரியாத கணவன் - மனைவி இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்தார்.

வண்டி வேகமாக செல்கையில், அதே வேகவேகமாக கடந்துபோகும் மரங்கள், வயல்கள், வீடுகள் போன்ற வெளிக்காட்சிகளை தலையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டே இன்பமாய் பயணிக்கிறார், கணவர். ஆனால், அந்த மனைவியோ தலையை கவிழ்ந்து, பார்வையை தரையில் செலுத்தியபடி ஒரே புள்ளியில் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அவள் தலை நிமிரவே இல்லை. வேறு எங்கும் தலையை உயர்த்தியோ திருப்பியோ பார்க்கவில்லை.

எவ்வளவு நேரம் ஒருவரால் தலையை பணித்துக்கொண்டே இருக்கமுடியும்! பிடரி வலிக்காதா? ஆனால், அந்த நோவும் அக்காலத்துப் பெண்களுக்கு பழகிப்போயிருக்கக்கூடும்.  

ரயில் ஒரு தரிப்பிடத்தில் சிறிது நேரம் நின்றபோது கணவன் சற்று வெளியே சென்று வருவதற்காக எழுந்து போனான். 

அவன் போன பிறகு தலையை நிமிர்த்திய அந்த மனைவி, பாரதியை பார்த்து "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே செல்கிறீர்கள்" என கேட்கத் தொடங்கினாள்.

பாரதியும் அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் வெளியே சென்ற கணவன் இருக்கைக்கு திரும்பினான்.

அவன் வருவதை பார்த்ததுமே மனைவி பழைய மாதிரி தலை கவிழ்ந்துகொண்டாள். அதன் பிறகு அவள் ஏதும் பேசவில்லை.

இந்த சம்பவம் பாரதிக்குள் பலவித கேள்விகளை எழுப்பியது.

அவள் ஏன் கணவனை கண்டதும் தலை குனிந்துகொள்கிறாள்?

கணவன் இல்லாதபோது என்னிடம் பேசினாள்.  அதேபோன்று அவன் இருக்கும்போதும் பேசினாலென்ன?

ஏன் பேசவில்லை?

பேசினால் என்ன தவறு?

அவளது இருப்பு, ஏதோ சடப்பொருள் போன்றிருக்கிறதே, ஏன்?

இதே கேள்விகளை, சந்தேகங்களை, தான் கண்ட காட்சியையும் வீடு வரை கொண்டு செல்கிறார் பாரதி.

பாண்டிச்சேரியில் தன் வீட்டு வாசலில் மனைவி செல்லம்மாள், மகள் சகுந்தலா, பக்கத்து வீட்டுப்பெண்ணான யதுகிரி ஆகியோர் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் இதைப் பற்றி சொல்கிறார் பாரதி.

அவள் ஏன் பேசாமல் தலைகுனிந்திருந்தாள் என்றும் கேட்கிறார்.

அதற்கு, யதுகிரி இப்படி பதில் சொல்கிறாள்:

"தன் எதிரில் அடிமைகள் பேசுவதை எஜமானர்கள் விரும்புவதில்லை அல்லவா!" என்று.

கணவனை 'எஜமான்' என்றும், மனைவியை 'அடிமை' என்றும் உணர்த்தப்படுகிறது. ஆண்கள் எஜமானர்கள், பெண்கள் அடிமைகள் என்பதே அதன் பொதுவான கருத்தாக இருந்தது. 

ஆண், பெண் என்ற இந்த பாலின ஏற்றத்தாழ்வை மறுத்த பாரதி, உடனே பாடினார்...

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கியிவ் வையந் தழைக்குமாம்" என்று.

எத்தனை பாடினாலும் 'போதாது' என்கிற மனநிலையில் இருப்பவர் தானே பாரதி. ஆணுக்கொன்று, பெண்ணுக்கொன்று என தனித்தனி கொள்கைகள், விதிமுறைகள், எதிர்பார்ப்புகள் வகுக்கப்பட்டிருந்த சமூகத்தின் தலைகளில் ஏறி நின்று, குட்டு வைத்து, அர்த்தமற்ற கொடும் வரம்புகளை உடைத்தெறிய முயற்சித்தார்.

ஓர் ஆண் தவறு செய்தால் சூழ்நிலையையும் பிறரையும் காரணங்காட்டும் சமூகம், பெண் செய்யும் சிறு தவறையும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் நிலைப்பாட்டை மாற்ற முயற்சித்தார்.

ஆண்களின் குற்றங்களுக்கு காரண காரியங்களை தேடுவதும், தவறு செய்கின்ற அல்லது தவறு செய்யும் ஆண்களுக்கு நெருங்கிய உறவாக உள்ள பெண்களுக்கு சாபங்கள், தண்டனைகள் வழங்கப்படுவதும் எக்காலத்திலும் நடப்பவையே.

இந்த இறுகிய கொள்கைகளுக்குள் சிக்குண்டிருக்கும் பெண்களை விடுவித்து, குற்றம் ஏற்பதிலும் சம நிலை காணப்பட வேண்டும் என நினைத்தார், பாரதி.

ஓர் ஆண், பெண்ணொருத்தியை காதலிப்பது, காதலித்துவிட்டு பிறகு ஏமாற்றுவது, திருமணம் செய்துகொண்ட பின் மனைவியை விட்டு விலகி, இன்னொரு பெண்ணை மறுமணம் செய்துகொள்வது.... இவையெல்லாம் ஆணுக்குரிய குணங்கள், ஆண்கள் என்றால் அப்படித்தான் என நினைப்பவர்கள், இந்த பிரச்சினைகளை 'வழமையானது' என்றும் 'பத்தோடு பதினொன்று' என்றும் பார்ப்பவர்கள் நம் மத்தியில் பலர். 

அவர்கள், ஒரு பெண், ஆணை காதலித்து ஏமாற்றுவதை, கணவனை விட்டுவிட்டு இன்னொருவனை மறுமணம் செய்துகொள்வதை மட்டும் 'தவறு' என்று சிந்திக்காமல், ஆராயாமல் எப்படி தீர்மானிக்கின்றனர்?

ஆண்களின் தவறுகளை வெகு சீக்கிரத்தில் மறந்துவிட்டு, பெண்களின் தரப்பில் கூர்ந்து கவனித்து, குற்றம் கண்டறிந்து, பழிக்கிறார்களே, எப்படி?

இதையும் மாற்றி யோசித்தவர்தான் பாரதி. 

ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பதாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதை தன் காலத்திலேயே துணிந்து சிந்தித்தவர். வெறும் கற்பனை தான். 

'குயில்பாட்டில்' பெண்களின் பிரதிநிதியாக படைக்கப்பட்ட பாத்திரமான குயிலொன்று, கவிஞர் மீது காதல் கொண்டு, 

"காதல் காதல் காதல் 

காதல் போயின் காதல் போயின் 

சாதல் சாதல் சாதல்..." போன்ற காதல் வசனங்களை பேசி அவரை நெக்குறுக வைக்கிறது. 

இதனால் கவிஞருக்கும் அந்த குயிலிடத்தில் காதல் பிறக்கிறது.

மறுநாள், அந்த குயில் ஒரு குரங்கிடம் அதே "காதல் காதல் காதல்..." வசனத்தை ஒப்புவிக்கிறது. 

அடுத்த நாள், அந்த குயில் ஒரு மாட்டை காதலிப்பதாக கூறுகிறது. அதனிடமும் "காதல் காதல் காதல்..." என்கிறது.

தன்னை காதலிப்பதாக கூறி, மனதுக்கு நெருக்கமான குயில், குரங்கிடமும் மாட்டிடமும் அதே போன்று காதல் நாடகம் ஆடுகிறதே என நினைத்து, கவிஞர் குயிலை வெறுக்கிறார். கோபப்படுகிறார். குயிலை தாக்க முயற்சிக்கிறார். பிறகு தான் உண்மை வெளிப்படுகிறது.

குயில் 'குயிலி' என்ற பெண்ணாக உருமாறுகிறது.

குயிலி, தனது பூர்வ ஜென்ம கதையை கூறுகிறாள். குரங்கு, மாடு ஆகிய இரண்டுக்கும் தனக்குமான பகையை அவள் கூறுகிறபோது, அந்த குயில் நடத்திய காதல் நாடகத்தின் பின்னணி புரிகிறது. 

குயிலியின் மாசற்ற பண்பே நிஜமாகிறது.

இந்த கதையில் ஒன்றை கவனியுங்கள்.

பாடலின் முன்பகுதியில், பெண்ணின் ஒன்றுக்கு மேற்பட்ட காதலை விதிவிலக்காய் மாற்றிக் காட்டியபோது, பாரதியின் சிந்தனையில் ஏதோ புதிரும் குளறுபடியும் தோன்றினால் கூட, பாடலின் பின்பகுதியில் அந்த பெண்ணின் தவறை வேறு விதமாகவும் அணுகலாம், அதற்குள் நியாயம் ஒளிந்திருக்கிறது என்பதை நமக்கு கற்பிக்கிறார் பாரதி. 

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற குணங்களை பெண்கள் தலையாய பண்புகளாக சுமந்து வாழ்ந்த காலத்திலும், அதற்கு பின்னரான காலங்களிலும், ஏன், இன்றைக்கும் இந்த 'குயிலி - குயில்' என்கிற கற்பனை கதாபாத்திரம் பெண்களிடையே எத்தனை கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டிருக்கிறது! 

தவறிழைக்கும் பெண்கள் தம் தரப்பு நியாயத்தை கூற பல சந்தர்ப்பங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக முந்தைய வரலாறுகள் சொல்கின்றன. அப்படியே தவறுக்கு நியாயமான காரணம் காட்டப்பட்டாலும், 'அவளை பற்றி தெரியாதா?' என தூற்ற எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்...  

இன்றும் இந்த நிலை மாறவில்லை என்பது தான் உண்மை. 

பெண் அடிமைத்தனம், கணவன் - மனைவி ஏற்றத்தாழ்வு, ஆண் - பெண் பேதம், பெண்களுக்கு எதிரான ஆண்களின் கொடூர செயல்கள் பற்பல இடங்களில் நித்தம் நடக்கிறது. 

பெண் என்பவள் தவறு செய்யாத, செய்யக்கூடாத புண்ணிய பிறவியாக இருக்கவேண்டும் என்கிற தீவிர எதிர்பார்ப்புள்ளவர்கள், "மனிதன் தவறு செய்வது இயல்பானது" என்கின்றனரே ஒழிய, 'மனிதி'யை (பெண்ணை) பற்றி ஏதும் சொல்வதில்லையே, ஏன்?

பழக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகமாக இருந்தாலும், மனதில் ஊறிப்போன பிரிவினையின் வெளிப்பாடுதானே இது. அப்படியானால், தவறு செய்வது ஆண்களுக்கு இயல்பு, பெண்களுக்கு இழிவு என சொல்லப்படுகிறதா?

மாற்றி யோசியுங்கள்....

பெண் தவறு செய்வதை கண்டுகொள்ளக் கூடாது என்பது எமது நோக்கமல்ல. தவறுகள், குற்றங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக அன்றி, அவை கூட்டிக் குறைத்து மதிப்பிடப்படக் கூடாது!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right