சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பிறந்த தினம் இன்று (17.04.1972)
இலங்கை கிரிக்கெட் அணியில் பிரபலம் வாய்ந்த, 'சுழற்பந்து வீச்சாளர்' என உலக ரசிகர்களால் வியந்து பாராட்டப்பட்ட தமிழ் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த தினமான இன்று (17) அவரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் '800' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி, கோடிக்கணக்கானோர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை குவித்திருக்கிறது.
இலங்கை நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமையளிக்கும் வகையில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சினிமா ரசிகர்கள், கிரிக்கெட் பிரியர்களை மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய் ஈர்த்துள்ளது.
1972 ஏப்ரல் 17 அன்று கண்டியில் பிறந்த முத்தையா முரளிதரன், மலையகத்தவர்கள் எதிர்கொண்ட பல போராட்டங்களை தானும் அதே சமூகத்தில் உழன்று, எதிர்நீச்சல் அடித்த கதை, அவரது வாழ்க்கை சம்பவங்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது.
கிரிக்கெட் வெறியரான இவர், பள்ளிக் காலத்திலிருந்தே ஒரு கிரிக்கெட் வீரருக்குரிய தகுதிகளை தனக்குள் ஆழப் பதிக்க பல விதங்களில் முயற்சித்து, வெற்றி கண்டுள்ளார்.
இவர் பந்தை சுழற்றி வீசும் விதம், எதிரே துடுப்பெடுத்து நிற்பவரை திணறச் செய்துவிடும். பந்தை கையாளும் இவரது தனித்துவமான பாணியை பலர், இது கிரிக்கெட் விதிமுறைக்கு முரணானது என கடுமையாக விமர்சித்துள்ளனர்.
எனினும், பின்னர் ஐசிசி - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், முரளிதரனின் பந்துவீச்சை அங்கீகரித்தது மட்டுமன்றி, அவரது கை அசைவுகள், பந்தின் சுழற்சிக்கேற்ப தமது கிரிக்கெட் விதிகளிலேயே கூட மாற்றம் செய்து, முத்தையாவின் சுழற்பந்துவீச்சு முறைக்கு 'தூஸ்ரா' என பெயரிட்டது. இதுவும் இவரது மற்றுமொரு வெற்றியாக அமைந்தது.
1992இல் தனது 20ஆவது வயதில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தினூடாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, அந்த போட்டியில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணியின் நம்பிக்கையை வென்றார்.
அதன் பின்னர் பல்வேறு போட்டிகளில் அங்கம் வகித்து, பல வெற்றிகளை கடந்து, இன்றைக்கு, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 500 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை பெற்ற சாதனை வீரராக மிளிர்கிறார்.
அவர் மொத்தமாக பெற்ற விக்கெட்டுகளின் எண்ணிக்கை 800 என்பதால், அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு '800' என பெயரிடப்பட்டுள்ளது.
மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை எம்.எஸ். சிறிபாதி இயக்கியுள்ளார்.
படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் மாதுர் மிட்டல் நடிக்கிறார். இவர் ஒஸ்கார் விருது வென்ற 'ஸ்லம்டோக் மில்லியனர்' படத்தில் நடித்தவர் ஆவார். அத்தோடு கதாநாயகியாக, மஹிமா நம்பியார் நடிக்கிறார்.
முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். எனினும், இவர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமற்றவர் என பல விமர்சனங்கள் வெளிக்கிளம்பியதால், அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பினை பிரவின் கே.எல் மேற்கொள்ள, சினேகன் கருனாலதிகா என்பவர் படக்கதையை இணைந்து எழுதியிருக்கிறார்.
இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று, படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வருடம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், உலகளவில் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM