பேரின்பராஜா சபேஷ்
“விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கியதில்லை. அரசாங்கம் எந்தவித நட்டஈடும் எமக்குத் தரவில்லை.”
“உரம் மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை கைவிட்டு வேறு தொழிலினைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது”
“இரண்டரை முதல் மூன்று மாதங்கள் காத்திருந்து அறுவடை செய்தால் சில சமயம் முதலிட்ட பணமே கிடைப்பதில்லை”
“விவசாயத்தில் இடைத்தரகர்கள் தமக்கு ஏற்றாற்போல் விலைகளை நிர்ணயிக்கின்றனர். அதிலும் நாமே பாதிக்கப்படுகிறோம்”
வாகரையில் வேளாண்மை செய்துவரும் தம்பிப்பிள்ளை லட்சுமி
“எமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துவதற்கு காலகாலமாக சோளன் பயிர்செய்கையில் ஈடுபட்டுவந்த நாம் உரம் மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு காரணமாக சோளன் பயிர்ச்செய்கையினை கைவிட்டு வேறு தொழிலினைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என கூறுகிறார் வவுனியா செட்டிக்குளம் கிராமத்தில் சோளன் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் 62 வயதுடைய எஸ்.கணபதிப்பிள்ளை.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் விவசாயச் செய்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தை மாத்திரமே நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்லும் அவர்கள், மாற்றுத் தொழிலாக எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதி தடை, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற சமகாலப் பொருளாதார நெருக்கடியால் விவசாயிகளின் வாழ்க்கை இரட்டிப்பு இருட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கம் சேதனப்பசளை ஊக்குவிப்புத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ள போதிலும் அது எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்விடயம் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது அவர்கள் தமது ஆதங்கங்களை வெளியிட்டனர்.
சோளன் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் துளசி
வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் தற்போது சோளன் பயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் துளசிக்கு சோளம் பயிரிடுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வந்து ஐந்து ஏக்கர் காணியை வாங்கி சோளன் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகிறார்.
“அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேதனப் பசளை எங்களுக்கு எவ்வித பலனையும் வழங்கவில்லை. அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு சேதன மற்றும் பசுமை விவசாயத் திட்டத்தின் கீழ் இரசாயன உரம் மற்றும் கிருமிநாசனி இறக்குமதித் தடை காரணமாக சோளன் பயிர் செய்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது” எனவும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார்.
“முன்பு 25 ஆயிரம் ரூபா செலவில் ஒரு ஏக்கர் காணியில் சோளன் பயிரிட்டோம். இப்போதைய பொருளாதார நெருக்கடி விலைவாசி அதிகரிப்பு காரணமாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா செலவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முன்பு ஏக்கருக்கு 5000 ரூபா உழவிற்கு கொடுத்திருந்தோம். டீசல் விலையேற்றம் காரணமாக 28000 ரூபா கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்” என்கிறார் சதாசிவம்.
வவுனியா மாவட்டத்தில் பல ஹெக்டெயர் நிலத்தில் உப உணவுப் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக உழுந்து மற்றும் சோளன் பயிர்ச்செய்கை பண்ணுவதற்கு ஏற்ற வளமான மணல் இந்தப் பிரசேத்தில் உள்ளது.
2020 இற்கு முன்னர் அதிகளவில் செய்கைபண்ணப்பட்டு வந்த சோளன் 2021-2022ஆம் ஆண்டு பெரும்போகத்தில் 267 ஹெக்டெயர் நிலத்திலும், அவ்வாறே 5468 ஹெக்டெயர் நிலத்தில் உழுந்தும் செய்கை பண்ணப்பட்டதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினியின் இறக்குமதிகளை அரசாங்கம் தடை செய்ததன் காரணமாக பல உப உணவு செய்கையாளர்கள் சோளன் செய்கையை கைவிட்டுள்ளனர். இதனால் சோளனுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு கேள்வியும் அதிகரித்து காணப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை இந்த பிரதேச விவசாயிகளும் பெருமளவில் எதிர்கொண்டுள்ளனர்.
“கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் ஆயிரத்து 500 ரூபாவுக்கு பெறப்பட்ட உரம் இப்போது கறுப்புச் சந்தையில் 24000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இவ்வாறு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பயிர் செய்கையில் ஈடுபட்ட பலர் முதலிடுவதற்கு பணம் இல்லாமல் செய்கையில் ஈடுபடுவதையே கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்” எனவும் சதாசிவம் தெரிவிக்கின்றார்.
2021–2022 ஆண்டு காலப் பகுதியில் பயிர்ச் செய்கைக்கு உரிய காலத்தில் உரம் மற்றும் இரசாயன பீடைநாசினி இறக்குமதித் தடை காரணமாக சோளன் செய்கைக்கு முதலீடு செய்த பலர் பணத்தைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் கடனாளிகளாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
உழுந்து பயிர்ச்செய்கையில் ஈடுபடும் தனலட்சுமி
இது போன்று வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கையில் ஈடுபட்டவர்களும் கிருமிநாசினி இறக்குமதி தடை மற்றும் விலையுயர்வு காரணமாக பெரும் நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக விபரிக்கிறார் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.தனலட்சுமி
“65000 ரூபா செலவில் ஒரு ஏக்கரில் உழுந்து பயிரிட்டு மூன்று மாதங்களில் 20 ஆயிரம் ரூபா நட்டமடைந்துள்ளேன். கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 600 கிலோ கிராம் விளைச்சலைப் பெற்ற நாங்கள் தற்போது சராசரியாக 150 கிலோ கிராம் உழுந்தையே பெற்றுள்ளோம்” என தனது மனக் குமுறலையும் தனலட்சுமி வெளியிட்டார்.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2019-2022 காலப் பகுதியில் சோளன் பயிர் செய்கை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2019-2022 பெரும்போக சோளன் செய்கை தகவல் விவசாய திணைக்களம் - வடக்கு மாகாணம்
2019-2022 பெரும்போக உழுந்து செய்கை தகவல் விவசாய திணைக்களம் வடக்கு மாகாணம்
அரசாங்கத்தின் சேதனப் பசளை ஊக்குவிப்புத்திட்டத்தினை உப உணவு பயிர் செய்கையாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தாமையே இதற்குக் காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
“2020 ஆண்டு முதல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி விவசாயிகளின் விடயத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இதற்கான மாற்று வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியால் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுமே பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், மத்திய மாகாணத்திலும் இது தொடர்பாக ஆராய விளைந்தோம்.
நுவரெலியாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக லீக்ஸ் செய்கையில் ஈடுபட்டுவருபவர் 42 வயதுடைய உதயன்ஷி மேனகா. சிங்கள இனத்தைச் சேர்ந்த இவர் மூன்று ஏக்கர் காணியில் பயிர் செய்துள்ளார்.
“2020 ஆண்டுக்கு முன்பு 10 இலட்சம் ரூபா முதலீடு செய்தால் கூடுதலான இலாபத்தினை பெற முடியும். ஆனால் 2020 ஆண்டின் பின்பு இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதித் தடை, விலைவாசி அதிகரிப்பின் காரணமாக 20 இலட்சம் ரூபா வரை முதலீடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சந்தையில் மரக்கறி விலையில் தளம்பல் நிலையே காணப்படுகிறது எங்களிடம் ஒரு கிலோகிராம் 100 முதல் 150 ரூபா வீதமே மொத்தமாக வாங்குகிறார்கள் சிலசமயம் 50 ரூபாவிற்கும் கொடுக்கும் நிலை ஏற்படும். பயிரிட்டு நான்கு மாதங்கள் காத்திருக்கும் எமக்கு தற்போதைய சூழ்நிலையில் ஒரு கிலோ 250 ரூபாவிற்கே விற்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் வாங்குவதில்லை இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் நட்டமடைந்து மரக்கறி செய்கையை கைவிடும் நிலையே ஏற்படும்” என்று அவர் தெரிவிக்கின்றார்.
மத்திய மாகாணத்தில் கரட் உற்பத்தியில் ஈடுபடும் தினேஸ் லங்கா
“நாட்டில் கொரோனா தாக்கம் ஏற்பட்டு முழுநாட்டிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது நாங்கள் எவ்வித தடையுமின்றி மரக்கறியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தோம். இரசாயன உரத்தினை தடை செய்ததன் காரணமாகவே மரக்கறிச் செய்கையில் நட்டமடைந்துள்ளேன்.
எங்களது தங்க நகைகளை அடகு வைத்தே யூரியா வாங்கினோம். எமது பிரதேசத்தைப் பொறுத்தவரை மரக்கறிச் செய்கையைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாது. நாங்கள் பரம்பரையாக மரக்கறி செய்கையை பண்ணிவருகிறோம். ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கியதில்லை.
அரசாங்கம் எந்தவித நட்டஈடும் தரவில்லை. பயிர்களுக்கான விதைகள் மட்டுமே வழங்கினார்கள். அவை சரியாக முளைக்கவில்லை” என நுவரெலியாவில் கரட் செய்கையில் ஈடுபட்டு வரும் தினேஸ் லங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“நாங்கள் மரக்கறி செய்கையை கைவிடுவதால் எங்களை நம்பி பல காலமாக தோட்டத்தில் வேலை செய்யும் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியிருக்கும் அதை நினைத்தல் மிகவும் வேதனையாக உள்ளது” என்கிறார் உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடும் பி.பாலகிருஸ்ணன்
கோவா செய்கையில் ஈடுபடும் சுப்பிரமணியம் யோகராஜ்
“ஒரு கோவா கன்று 5 ரூபாவிற்கு வாங்கி இரண்டரை முதல் மூன்று மாதங்கள் காத்திருந்து அறுவடை செய்தால் கிலோ 25 – 30 ரூபாவிற்கே விலை போகிறது. சில சமயம் முதலிட்ட பணமே கிடைப்பதில்லை சொந்தமாக காணி இல்லாததல் காணியை வாடகைக்கு பெற்றே மரக்கறி பயிரிட்டுள்ளேன்.
எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. இந்த வருமானத்திலேயே எனது குடும்பம் வாழ்கிறது” என்கிறார் நுவரெலியாவில் கோவா செய்கையில் ஈடுபடும் சுப்பிரமணியம் யோகராஜ்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்“மரக்கறிகளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டு வருவதற்கு ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபா வீதம் போக்குவரத்து செலவாக வழமையாக பெற்று வந்தோம்.
2020 ஆண்டு முதல் எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோவுக்கு 20 ரூபா போக்குவரத்து செலவாக பெறுகிறோம்.
அதனால் மலையகத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்தது. ஆனால் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் தமக்கு ஏற்றாற்போல் விலைகளை நிர்ணயிக்கின்றனர்.
உண்மையிலேயே பொதுமக்கள் அதிக பணம் செலவிட்டு மரக்கறிகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால்; சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ஒரு போதும் நட்டமடைவதிலை” என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளும் 48 வயதுடைய சாலி முகமட் ஹ_ஸைன் கூறினார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்
“மரக்கறி விலை கூடினாலும் குறைந்தாலும் எமக்குரிய கூலி கூடாது நாள் ஒன்றுக்கு 2500 முதல் 3500 வரை கூலியாக உழைக்கிறேன்.
விலைவாசி அதிகரிப்பு காரணமாக உணவுக்கு 2000 ரூபா ஒரு கொத்துரொட்டி சாப்பிட்டால் 800 ரூபா தேனீர் இப்படி காசு எல்லாம் செலவாகும் மிகுதியை வீட்டுக்கு அனுப்பினால் கையில் ஒன்றுமே இல்லை தற்போதைய விலை வாசிக்கு ஏற்ப எமக்கு கூலி தருகிறார்கள் இல்லை” என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 16 ஆண்டுகளாக மூடை தூக்கும் தொழில் புரியும் கண்டி வத்தேஹம பன்னுல கிராத்தைச் சேர்ந்த 45 வயதுடைய செல்லன் அரிச்சந்திரன் கூறினார்
இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதி தடை காரணமாக மரக்கறி செய்கையாளர்களின் வருமானத்தில் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவு தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், செய்கையாளர்களின் இலாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சேதனப்பசளை மற்றும் திரவ உரம் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் மாற்று நடவடிக்கை எதுவுமே மரக்கறி செய்கையைப் பொறுத்தளவில் வெற்றியளிக்கவில்லை.
இரசாயன உரத்தில் நைட்ரஜன் 46 சதவீதம் உள்ளது. ஆனால் சேதனப் பசளையில் 2 சதவீதமே நைட்ரஜன் காணப்படுதிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உர இறக்குமதித் தடை காரணமாக முள்ளங்கி கிழங்கு உற்பத்தியை தவிர அனைத்து உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயத் திணைக்களத்தினால் பயிர்களுக்கான விதை மாத்திரமே வழங்கப்படுகிறது” என மத்திய மாகாண விவசாயத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் தினேத் பிரபாஷ் ரங்கொட எமக்குக் கூறினார்.
இதேவேளை சிறுதோட்டச் செய்கையாளர்கள் மாத்திரமின்றி நெற்செய்கையாளர்களும் இப்பொருளாதார நெருக்கடியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம் நெல் வேளாண்மை செய்கை பண்ணும் வளமான மண்ணினையும் நீர்ப்பாசன குளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் அரிசி தேவையில் 30 சதவீதமான பங்களிப்பை கிழக்கு மாகாணம் வழங்குகிறது. ஆனால் அரசாங்கத்தினால் சேதனப் பசளை ஊக்குவிப்பு மற்றும் இரசாயன கிருமிநாசினி தடை திட்டத்தின் மூலம் நெல் விளைச்சல் பெரும் பின்னடைவினைக் கண்டுள்ளது.
வேளாண்மை செய்துவரும் 71 வயதுடைய சோமசுந்தரம் இராசலிங்கம்
“பன்னாடை என்று கூறப்படும் சேறுபடா செல்லன் புல்லினம் வயல்களில் வேளாண்மைக்கு மேல் படர்ந்து வேளாண்மையை மூடியதன் காரணமாக விளைச்சல் குறைவாகவே கிடைத்தது. கடந்த காலங்களில் இந்த புல்லினம் வளரும்போது இரசாயன கிருமிநாசினி தெளித்து அவற்றை அழித்து விடுவோம்.
தற்போது கிருமிநாசினி இல்லாததன் காரணமாக எனது வாழ்வில் ஒரு போதும் காணாத நட்டத்தை பெரும்போகத்தில் அடைந்துள்ளேன்” என்றார் மட்டக்களப்பு பள்ளத்துவெளி விவசாய கண்டத்தில் 52 வருடங்களாக நெல் வேளாண்மை செய்துவரும் 71 வயதுடைய சோமசுந்தரம் இராசலிங்கம்.
வெள்ள அனர்த்தம் மற்றும் வரட்சி போன்ற காரணங்களினால் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டாலும் சாதரணமாக ஏக்கருக்கு குறைந்தது 35 முதல் 45 மூடைகள்வரை அறுவடை செய்யப்படும் தனது வயலில் சேறுபடா செல்லன் புல்லினம் படர்ந்ததன் காரணமாக 15 முதல் 20 மூடைகள் வரையில் நெல் அறுவடை செய்யப்பட்டு பெரும் நட்டத்தினை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரத்தினை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினர் உரிய காலத்தில் வழங்காததால் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபா செலவில் தனியாரிடம் உரம் பெற்று வேளாண்மை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஏறாவூரைச் சேர்ந்த விவசாயி அப்துல் காதர் முகமட் சமீம் கூறினார்.
அப்துல் காதர் முகமட் சமீம், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கால காலமாக தமது ஜீவனோபாய தொழிலாக வேளாண்மைச் செய்கை பண்ணிவரும் அவர், “கிருமிநாசினி தெளிக்காததன் காரணமாக பன்றிவேளாண்மை எனப்படும் புல்லினம் வயல்களில் அதிகம் வளர்ந்து நெல்லின் வளர்ச்சியைத் தடுக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
வந்தாறுமூலையைச் சேர்ந்த விவசாயி நல்லையா
“உழவு இயந்திரத்தின் திருத்தச் செலவு அதிகரிப்பு, உதிரிப்பாகங்கள் விலையேற்றம், எரிபொருள் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 4 தடவை உழவு செய்து விதைப்பதற்கு 25 ஆயிரம் ரூபா செலவிடப்படுகிறது.
மானியமாக இரண்டு ஏக்கருக்குட்பட்ட வயல்களுக்கு 4 லீற்றர் டீசல் மாத்திரமே கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் வழங்குகிறார்கள்” என மட்டக்களப்பு பள்ளத்துவெளி விவசாய கண்டத்தின் முன்னாள் வட்டவிதானை கந்தசாமி சிவலிங்கம் கூறினார்.
வீட்டுத் தோட்டம் செய்யும் முகமது ஹனீபா உம்மு சல்மா
நாங்கள் நெல் வேளாண்மையை வாழ்வாதார தொழிலாக செய்துவந்தோம் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பு காரணமாக நெல் வேளாண்மை செய்கையை கைவிட்டு வீட்டுத் தோட்டமொன்றினை அமைத்து அதனுடாக வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துகிறோம் என ஓட்டமாவாடியைச் சேர்ந்த 64 வயதுடைய முகமது ஹனீபா உம்மு சல்மா கூறினார்.
நாங்கள் வாழ்வாதாரத்தை நடாத்துவதற்கு வீட்டில் உள்ள காணியில் கத்தரி, அன்னாசி, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டுள்ளோம் அதற்கு அரசாங்கத்தினால் சில உதவிகள் கிடைத்துள்ளன ஆனால் விலைவாசி அதிகரிப்பு பயிர் செய்கையையும் விட்டுவைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
கமநல அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் கிருஸ்ணன் ஜெகநாத்
“மட்டக்களப்பு மாவட்டத்தில் 2022 பெரும்போகத்தில் 71 ஆயிரத்து 184.41 ஹெக்டேயர் நெல் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு சுமார் 2 இலட்சத்து 49 மெற்றிக்தொன் விளைச்சல் எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில் உரம் மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு காரணமாக 5000 ஹெக்டேயர் வேளாண்மை கைவிடப்பட்டது. மஞ்சள் நோய் தாக்கம் காரணமாக 10 சதவீதமான வேளாண்மை பாதிக்கப்பட்டது” என்கிறார் கமநல அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் கிருஸ்ணன் ஜெகநாத்.
“மட்டக்களப்பில் இரண்டரை ஏக்கர் காணியில் வேளாண்மை செய்யும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உணவு விவசாய நிறுவனத்தின் பங்களிப்புடன் 19,206 அந்தர் யூரியா வழங்கப்பட்டது.
ஏக்கருக்கு சராசரியாக 22 - 25 மூடைகள் அறுவடை செய்யப்பட்டது. விவசாயிகள் நெல்லினை கிலோ ஒன்றிற்கு 65 முதல் 75 ரூபாவிற்கே விற்பனை செய்கிறார்கள். அரசாங்கம் காய்ந்த நெல்லினை 100 ரூபாவிற்கும் ஏனைய நெல்லினை 89 ரூபாவிற்கும் கொள்வனவு செய்கிறது.
அறுவடை செய்த நெல்லினை உலர வைத்து நிர்ணய விலைக்கு விற்பனை செய்தால் இலாபமீட்ட முடியும்” எனவும் கமநல அபிவித்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.
இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதி தடையை அரசாங்கம் அமுல்படுத்தினாலும் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதை பல விவசாயிகளின் குரல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
விவசாயிகளுக்கு மாற்று வழியினை ஏற்படுத்தாமல் இறக்குமதி தடையை அரசாங்கம் விதித்தது பாரிய தவறென, விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் போன்ற திணைக்களங்களிலிருந்து தம்மை அடையாளப்படுத்த விரும்பாத அதிகாரிகள் சாடுகின்றனர்.
எனினும் மாற்றுத்திட்டங்களின் அடிப்படையில் நெல்லை உலரவிட்ட பின்னர், அரசின் நிர்ணய விலைக்கு ஏற்ப விற்பனை செய்வதற்கும் விவசாயிகள் முன்வரவேண்டியுள்ளது. சேதனப் பசளை மூலமான பயிரிடல் வெற்றியளிக்கவில்லை என பெரும்பாலான விவசாயிகள் கூறினும், குறிப்பிட்ட சில இடங்களில் சேதனைப் பசளை மூலமான பயிரிடல்களும் முன்னெடுக்கப்படாமலும் இல்லை.
இதனையும் அந்தந்த கிராம மட்ட கமக்கார அமைப்புக்கள் மூலமும் அறிந்துகொள்ள முடியும். எனினும் சமகாலப் பொருளாதார நெருக்கடியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுதோட்டப் பயிர்ச்செய்கையாளர்கள் மற்றும் நெற்செய்கையாளர்களின் பாதிப்புக்களுக்கு அரசாங்கம் நிச்சயம் தீர்வு வழங்கவேண்டியது மிக மிக அவசியமானதே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM