லாஸ் வெகாஸில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற ‘கன்ஸ்யூமர் எலக்ட்ரோனிக் ஷோ’ எனப்படும் இலத்திரனியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 3 திரைகளைக் கொண்ட இரண்டு மாதிரி மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன.

வருடா வருடம் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மாதிரி உபகரணங்களே காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கம். பார்வையாளர்களின் பெரு விருப்பைப் பெறும் உபகரணங்கள் உடனடியாக உற்பத்திக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இதன்படி, ‘ரேஸர் போஸ்ட்ஸ்’ எனப்படும் கணினிசார் விளையாட்டு மென்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமும், மூன்று திரைகள் கொண்ட மாதிரி மடிக்கணினிகளைக் காட்சிப்படுத்தியிருந்தது.

கணினி விளையாட்டை ஒரே திரையில் விளையாடும் உணர்வை சற்றே மாற்றி, மூன்று திரைகள் வரை விரிவாக்கும் விதத்தில் இந்த மடிக்கணினிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், திருடுபோயிருக்கும் மாதிரி மடிக் கணினிகள் பற்றித் தகவல் தருபவர்களுக்கு, 25 ஆயிரம் டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 37 இலட்சம் ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என ரேஸர் போஸ்ட்ஸ் நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.