பேச்சுத் திறன் குறைபாட்டினால் வாடும் 65 வயதுப் பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் அவரது உறவினர்கள் வைத்தியசாலையில் கைவிட்டுச் சென்ற சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

இரண்டு வருடங்களுக்கு முன் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் பேச்சுத் திறன் குறைபாட்டுக்காக தமது உறவினர் ஒருவருடன் இந்தப் பெண் வருகை தந்திருந்ததாகவும், இடைநடுவே இந்தப் பெண்ணை வைத்தியசாலையிலேயே கைவிட்டுவிட்டு, அவருடன் வந்திருந்த உறவினர் வெளியேறிவிட்டதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்று முதல் வைத்தியசாலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் அங்கேயே இந்தப் பெண் தங்கியிருக்கிறார். தினமும் காலை நேரம் முழுவதும் வெளி நோயாளர் பிரிவில் அமர்ந்திருக்கும் இந்தப் பெண், தன்னைத் தேடி தனது உறவினர்கள் எவரேனும் வந்திருக்கிறார்களா என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தேடிப் பார்ப்பதாகவும், வரவில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் கண்கலங்கி நிற்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.