கொழும்பு ரோயல் கல்லூரியில், தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் முரண்பாடுகள் காணப்படுவதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக கல்வியமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், கொழும்பு மற்றும் ஒரு சில பகுதிகளில் இயங்கும் புகழ்பெற்ற பாடசாலைகளில் கல்வி அமைச்சு அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர்.

இதன்போது, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் முரண்பாடுகள் காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அச்செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தரம் ஒன்றுக்கு மாணவர் ஒருவரை இணைத்துக்கொள்வதற்காக 20 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் அஹங்கமை சாரிபுத்ர வித்தியாலய அதிபர் ஊழல் மற்றும் இலஞ்ச முறைப்பாட்டு விசாரணை ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இலஞ்சப் பணத்தை குறித்த ஒரு கடையில் செலுத்துமாறும் அதற்கான பற்றுச்சீட்டு அந்தக் கடையில் வழங்கப்படும் என்றும் தமக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக இலஞ்சப் பணம் கோரப்பட்ட பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.