மக்கள் எவற்றுக்கும் ஏமாறமாட்டார்கள் : பொதுஜன பெரமுனவுக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது - திஸ்ஸ அத்தநாயக்க

10 Apr, 2023 | 12:12 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை வங்குரோத்தடையச் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இனியொருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.

எனவே எந்தவொரு கட்சியும் தமக்கு சவால் அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் எமக்கு எவ்வித சவாலும் இல்லை. அரசாங்கம் தற்போது மாயாஜாலம் செய்து கொண்டிருக்கிறது.

100 - 200 ரூபாவிற்குள் காணப்பட்ட பொருட்களின் விலைகளை 1000 ரூபா வரை அதிகரித்து அதனை தற்போது மீண்டும் குறைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்த காலம் முடிந்து விட்டது.

பொருட்களின் விலைகளுக்கும் , எரிபொருள் விலைகளுக்கும் , நிவாரணப் பொதிகளுக்கும் மக்கள் தற்போது வாக்களிப்பதில்லை. வங்குரோத்தடைந்துள்ள நாட்டை யாரால் மீளக் கட்டியெழுப்ப முடியும் என்பதை மாத்திரமே மக்கள் சிந்திப்பார்கள்.

எனவே அரசாங்கம் மாத்திரமல்ல. எந்தவொரு கட்சியும் அரசாங்கத்திற்கு சவால் அல்ல. பொதுஜன பெரமுனவினருக்கு தற்போது கிராமங்களுக்குச் செல்ல முடியாது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுகிறது. எனவே அவர்களால் இனியொருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.

எனவே பொருட்களின் விலைகளைக் குறைத்தல் , ஏனைய கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தல் போன்ற வழிமுறைகளை பொதுஜன பெரமுன முன்னெடுக்கலாம். ஆனால் அவை எவற்றுக்கும் மக்கள் ஒருபோதும் ஏமாறப் போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right