கஷ்டப் பிரதேசங்களில் இருந்து  கடந்தாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 வெளிமாவட்ட மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயத்தரம் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிகள், கஷ்டப்பிரதேச கோட்டா அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கஷ்டப் பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதியதாக தெரியவந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில்  கல்வி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு இவ் விவகாரம் குறித்து ஆறு அதிபர்களை பணிநீக்கம் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது