டெல்லி மெட்ரோ தொடரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் சிறு கத்திகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடரூந்துகளிலும், தொடரூந்து நிலையங்களிலும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் அனுமதியுடன், டெல்லி மெட்ரோ தொடரூந்து வலையமைப்பின் பாதுகாப்புக்குப் பொறுப்பான மத்திய தொழில் பாதுகாப்புப் படையே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, பாதுகாப்பு அமைப்புக்கும், யாருடைய உயிருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாத நான்கு அங்குல நீளமுள்ள கத்தியை பெண்கள் வைத்திருக்கலாம். தமக்கோ, தமது உடமைக்கோ ஆபத்து ஏற்படக் கூடிய நிலையில் குறித்த கத்தியைப் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கத்திகளைப் பயன்படுத்துவோர், தொடரூந்து நிலையத்தில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கடந்த வருடம் டெல்லி மெட்ரோ தொடரூந்துகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களில் 91 சதவீதமானவை பெண்களாலேயே பெண்களிடமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய அனுமதியின்படி, திருட்டுகளில் ஈடுபடும் பெண்களும் கத்திகளைப் பயன்படுத்த முடியுமே?’ என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.