இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன், பத்து ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாகக் கருதப்பட்ட ஐந்து பொலிஸாரை குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம், அகமதாபாத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக போக்குவரத்து பொலிஸார் ஐந்து பேர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யாமல் இந்தப் புகாரின் மீது ஆய்வு நடத்திய பொலிஸ் அத்தியட்சர், குறித்த ஐந்து பொலிஸாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தார்.

வழக்கு நடைபெற்று இவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணமானதையடுத்து அவர்கள் ஐவருக்கும் இரண்டாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ததில், இந்த ஐந்து பேர் தான் லஞ்சம் வாங்கினார்கள் என்பதை சாட்சிகளால் உறுதியாகக் கூற முடியாது போனது. இதை பிரதிவாதிகளுக்கு சாதகமாக்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதை உறுதி செய்வதற்கு 22 வருட காலம் ஆகியுள்ளது.

சந்தேக நபர்கள் குறித்த ஆய்வை முறைப்படி மேற்கொள்ளாத அத்தியட்சர் பதவி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆண்டுகாலமாக சந்தேக நபர்களுக்கு அவர்களது சம்பளத்தின் 75 சதவீதமே அளிக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை மீள அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.