(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்தத் தோல்வியுடன் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாடும் இலங்கையின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் நியூஸிலாந்து கைப்பற்றியது. முதலாவது போட்டியில் நியூஸிலாந்து 198 ஓட்டங்களால் அமோக வெற்றிபெற்றிருந்தது. மழை காரணமாக 2ஆவது போட்டி முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.
நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் வேகப்பந்துவீச்சாளர்களான மெட் ஹென்றி, ஹென்றி ஷிப்லி, டெரில் மிச்செல், துடுப்பாட்ட வீரர்களான வில் யங், ஹென்றி நிக்கல்ஸ் ஆகியோர் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
தொடரை சமப்படுத்துவதற்கும் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பை ஓரளவேனும் தக்கவைப்பதற்கும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டயாத்தில் கடைசிப் போட்டியை இலங்கை எதிர்கொண்டது.
ஆனால். அப் போட்டியில் நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்த வண்ணம் இருந்தது.
நுவனிது பெர்னாண்டோ (2), குசல் மெண்டிஸ் (0), ஏஞ்சலோ மெத்யூஸ் (0), சரித் அசலன்க (9), வனிந்த ஹசரங்க டி சில்வா (0), கசுன் ராஜித்த (9) ஆகியோர் எதிரணியின் வேகப்பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான அடி பிரயோங்களால் விக்கெட்களைத் தாரைவார்த்னர்.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதத்தின் உதவியுடனேயே இலங்கை சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. அவரை மாத்திரமே நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியாமல் போனது.
64 பந்துகளை சந்தித்த பெத்தும் நிஸ்ஸன்க 8 பவுண்டறிகளுடன் 57 ஓட்டங்களைப் பெற்று ரன்அவுட் முறையில் 6ஆவதாக ஆட்டம் இழந்தார். 23ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 6ஆவது அரைச் சதம் இதுவாகும்.
அவரைவிட தனஞ்சய டி சில்வா (13), அணித் தலைவர் தசுன் ஷானக்க (31), சாமிக்க கருணாரட்ன (24) ஆகியோரே 10 ஓட்டங்களுக்குமேல் பெற்றனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் மெட் ஹென்றி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹென்றி ஷிப்லி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டெரில் மிச்செல் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
158 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கசுன் ராஜித்த, லஹிரு குமார, தசுன் ஷானக்க ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் நியூஸிலாந்தின் முதல் 4 வீரர்களைக் குறைந்த ஓட்டங்களுக்கு இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. சட் போவ்ஸ் (1), டொம் ப்ளண்டெல் (4), டெரில் மிச்செல் (6), அணித் தலைவர் டொம் லெதம் (8) ஆகியோரே குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டமிழந்த நால்வராவர். (59 - 4 விக்.)
ஆனால், வில் யங், ஹென்றி நிக்கல்ஸ் ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.
வில் யங் 113 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள் உட்பட 86 ஓட்டங்களுடனும் ஹென்றி நிக்கல்ஸ் 52 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள் அடங்கலாக 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இதன் மூலம் அவர்கள் எந்தளவு நிதானத்தைக் கடைப்பிடித்து துடுப்பெடுத்தாடினார்கள் என்பது புலப்படுகிறது.
இலங்கை பந்துவீச்சில் லஹிரு குமார 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ராஜித்த, தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
லஹிரு குமார தனது 8 ஓவரை வீசிக்கொண்டிருந்தபோது உபாதைக்குள்ளானதால் போட்டியிலிருந்து ஓய்வுபெற்றார். அந்த ஓவரில் எஞ்சிய 2 பந்துகளை தசுன் ஷானக்க வீசி நிறைவுசெய்தார்.
ஆட்டநாயகன்: வில் யங்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM