அரிசி இறக்குமதியின்போது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எனவே குறித்த வரிக் குறைப்பு நேற்றிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

வாழ்க்கைச் செலவு தொடர்பில் நேற்று மாலை நிதியமைச்சில் நடைபெற்ற அமைச்சரவையின் உபகுழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்து. குறித்த கூட்டத்தில்  அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அதன்போது அரிசி விலை தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டதுடன் அரிசிவிலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எனவே அரிசி இறக்குமதியின்போது ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி 50 ரூபாவாலும்,  வற் வரி 15 சதவீதத்தாலும்,  துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி7.5 சதவீதத்தாலும், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி 2 சதவீதத்தாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நேற்று நள்ளிரவு முதல் வரிக்குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது.

சம்பா, நாடு, சிவப்பு அரிசிகளுக்கே குறித்த வரிக்குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளன. எனினும் பாஸ்மதி அரசி இறக்குமதியின்போது இவ்வரிச்சலுகை வழங்கப்படமாட்டாது.